Published:Updated:

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

ரீ.சிவக்குமார், ஜோ.ஸ்டாலின், ஓவியம்: ஹாசிப்கான்

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

ரீ.சிவக்குமார், ஜோ.ஸ்டாலின், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், இப்பொழுதே கூட்டணிக்கான ஆயத்த வேலைகள் தொடங்கிவிட்டன. ‘‘பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டவேண்டும்” என்று முழங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி. இன்னொருபுறம் வடக்கில் மேற்கு வங்க முதல்வரும் தெற்கில் தெலங்கானா முதல்வரும்  ‘காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மூன்றாவது அணி’ என்ற முழக்கத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளைத் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

‘காங்கிரஸ் தலைமையிலான அணியோ, மூன்றாவது அணியோ, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வெல்ல முடியுமா?’ என்பதுதான் இந்திய அரசியலில் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி!

‘மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, வகுப்புவாதக் கலவரங்கள் அதிகரித்துவிட்டன, மதச்சார்பின்மைக்கு ஆபத்து, சகிப்புத்தன்மைக்கு நெருக்கடி, பிளவுவாத அரசியலைச் செய்கிறார்கள், பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் சாதாரண மக்களைப் பாதிக்கின்றன, தொழில்வளர்ச்சி முடங்கிவிட்டது, மக்கள் மோடிக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர்’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெற்றுவருகிறது. இறுதியில் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கருதப்பட்ட திரிபுராவையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது.

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

மோடியைப்போல் கவர்ச்சிகரமான தலைவர்கள் எதிரணியில் இல்லை. எதிரணியில் இருக்கும் கட்சிகளும் பலவீனமாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி தலைவராக ஆக்கப்பட்டுவிட்டாலும், மக்கள் அவரை சீரியஸான தலைவராகக் கருதுகிறார்களா என்பது இன்னும் தெரியவில்லை. இடதுசாரிகள் மேற்கு வங்கத்தையடுத்து திரிபுராவையும் இழந்து கேரளாவுக்குள் முடங்கிவிட்டனர். இந்தியாவில் 21 மாநிலங்களில் பா.ஜ.க ஆளுங்கட்சியாக இருக்கிறது. இப்படிப் பல சாதகமான சூழ்நிலைகள் பா.ஜ.க-வுக்கு இருக்கின்றன. ஆனாலும் பா.ஜ.க-வுக்குச் சவால்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது.

‘ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை’ என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியதோடு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சித்தாந்தரீதியாகவும் பா.ஜ.க-வோடு இணைந்து செல்லும் சிவசேனாவும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகிறது. பொதுவாக,  இந்தியாவின் பிரதமரைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். அங்கு  எலியும் பூனையுமாக இருந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் ‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்ற நோக்கத்துடன் கைகோத்திருக்கின்றன. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டாலும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி, பீகார் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று, பா.ஜ.க-வுக்கு மிரட்சியைக் கொடுத்துள்ளது.

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக, தென்னிந்தியா பா.ஜ.க-வுக்கு எதிரான எஃகு கோட்டையாக இருக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சிக்கு வருமளவுக்கு  பா.ஜ.க  வளர்ந்திருந்தாலும், சித்தாராமையாவின் ‘மாநில உரிமை’க் குரல்கள் பா.ஜ.க-வுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளன. ஆந்திரா, தெலங்கானா என்று இரு முதல்வர்களும் இப்போது பா.ஜ.க-வுக்கு எதிரணியில். கேரளாவிலும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குப் பா.ஜ.க வளரவில்லை. தமிழகமோ பா.ஜ.க காலூன்றவே வாய்ப்பளிக்காத பூமி. ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை மத்திய அரசு ஆட்டிப் படைத்தாலும், அ.தி.மு.க-வைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் பா.ஜ.க எதிர்ப்புணர்வுடன் ஒருங்கிணைந்திருக்கின்றன. மேலும் ஹெச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி போன்ற பா.ஜ.க பிரமுகர்களின் தடாலடிப் பேச்சும் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோரின் முன்னுக்குப்பின் முரணான பேச்சுகளும் பா.ஜ.க-வை நோட்டோவுடன் போட்டி போடும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளன.

 இன்னொருபுறம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்தாலும் பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றன. ஜிஎஸ்டி-க்கு எதிராக, மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே லட்சக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். சமீபத்தில் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக்கணக்கில் விவசாயிகள் திரண்டு, பல மைல்களைக் கடந்து அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திக் காட்டியுள்ளனர். இத்தகைய எதிர்ப்புகள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா, இந்த எதிர்ப்புணர்வை எதிர்க்கட்சிகளால் அறுவடை செய்ய முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

மூன்றாவது அணி அமையுமா?

தேர்தல் நெருங்கும்போதெல்லாம் ‘மூன்றாவது அணி’ என்ற குரல் ஒலிப்பது, இந்திய அரசியல் வரலாற்றில் புதிதல்ல. 1977-ல் காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட கூட்டணி, ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்.அப்போது காங்கிரஸ் என்ற ஒற்றைத் துருவத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட முயற்சியே, மூன்றாம் அணிக்கான முன்னோடி நடவடிக்கை. 1989-ல் வி.பி.சிங், 1990-ல் சந்திரசேகர், 1996-ல் தேவகௌடா, 1997-ல் ஐ.கே.குஜ்ரால் என்று காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத அணிகளைச் சேர்ந்த பிரதமர்கள் வந்தனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் ‘மூன்றாம் அணி’ முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இந்த அணிகளின் மூலம் அமைந்த ஆட்சிகள் நிலையான ஆட்சிகள் இல்லை என்பதால் மக்கள் எப்போதுமே ‘மூன்றாவது அணி’ என்பதை அவநம்பிக்கையோடுதான் பார்க்கின்றனர்.

மேலும், இடதுசாரிகள் எப்போதுமே மூன்றாவது அணி முயற்சிக்கு ஆதரவு தருபவர்கள். ஆனால், இப்போது மூன்றாவது அணி முயற்சியை முன்னெடுப்பவர், கம்யூனிஸ்ட்களின் எதிரியான மம்தா பானர்ஜி என்பதால் இடதுசாரிகள் இந்தமுறை கைகோப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி, மூன்றாவது அணி யாரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்பது. ஏனெனில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ் என்று எல்லாத் தலைவர்களுமே தன்னளவில் தங்களைப் பெரிய ஆளுமையாக நினைத்துக்கொள்பவர்கள்.

தமிழகத்தில் தி.மு.க-வை மூன்றாவது அணிக்குள் இழுக்கலாம் என்று மம்தா முயற்சிக்கிறார்.ஆனால், காங்கிரஸோடு நெருக்கமாக இருக்கும் தி.மு.க, ‘மூன்றாவது அணி’ என்ற பரிசோதனை முயற்சியில் ஈடுபடுமா என்பது சந்தேகம்தான். கருணாநிதி தீவிரமாகச் செயல்பட்ட காலத்தில், மூன்றாவது அணி முயற்சிகளில் முன்னணியில் நின்றவர். ஒருகட்டத்தில் அதிலிருந்து விலகி, பா.ஜ.க, காங்கிரஸ் கூட்டணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் தனக்கான முக்கியத்துவத்தையும் உருவாக்கிக்கொண்டார். இப்போது கருணாநிதி ஓய்வில் இருக்கும் நிலையில் ஸ்டாலின் என்னவகையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பார், தமிழக அரசியல் களத்தை எதிர்கொள்வதிலேயே ஸ்டாலின் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், தேசிய அளவிலான அரசியலை அவர் எப்படிக் கையாள்வார் என்று பொறுத்திருந்துதான்   பார்க்கவேண்டும். இப்போதைக்கு மூன்றாவது அணி என்பது, இன்னமும் உருப்பெறாத கனவுதான்.

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

காங்கிரஸ் தலைமையிலான பா.ஜ.க எதிர்ப்பு அணி!

பா.ஜ.க-வை எதிர்க்க, காங்கிரஸ் தலைமையில் அணிதிரள்வதற்கும் பல கட்சிகளுக்குத் தயக்கங்கள் இருக்கின்றன. காங்கிரஸ், பா.ஜ.க இரண்டையுமே சமதூரத்தில் வைத்துப் பார்க்கும் பல கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான அணிக்கு வருமா என்பது கேள்விக்குறிதான். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உட்கட்சிப்போரே நடக்கிறது.

‘பா.ஜ.க-வையும் காங்கிரஸையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியோடு சில உடன்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்’ என்பது அந்தக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் கருத்து. ஆனால், ‘காங்கிரஸோடு எந்த நிலையிலும் கைகோக்கக் கூடாது’ என்பது கட்சியின் அகில இந்திய முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் நிலைப்பாடு. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களே காரத் ஆதரவு, யெச்சூரி ஆதரவு என்று இரு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர்.

இதே பிரச்னை, இன்னும் பல கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி-யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் எனப் பலரும் காங்கிரஸ் அணியில் இணைவதற்கு மனத்தடை கொண்டவர்கள்.

பீகாரில் லாலுவையும் நிதிஷ்குமாரையும் ஒன்றிணைத்து அரசியல் சாதனை நிகழ்த்தியது காங்கிரஸ். ஆனால், அது நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. மீண்டும் நிதிஷ்குமார், பா.ஜ.க கூட்டணிக்குச் சென்றார். இப்போது உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியையும் அகிலேஷ் யாதவையும் இணைத்து, தன் அணிக்குள் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் முயல்கிறது. இந்தத் திட்டம் பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டும்தான் மோடியை வெல்ல முடியும். அது சாத்தியமா என்பதைத்தான் இன்னும் இருக்கும் ஓராண்டு நமக்கு உணர்த்தப்போகிறது. எப்படியிருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான அணியோ, மூன்றாவது அணியோ, அதைத் தீர்மானிப்பதில் தெற்குக்கு அதிகம் பங்கு இருக்கிறது.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

திருச்சி சிவா,

மாநிலங்களவை எம்.பி, தி.மு.க:


“ ‘அரசியலில் ஒரு வார காலம் என்பதே மிக அதிகம்’ என்பார் சர்ச்சில். இப்போது, ஒரு வருட காலம் இருக்கிறது நாடாளுமன்றத் தேர்தலுக்கு. சட்டமன்றத் தேர்தல்களில் குறுக்குவழியின்மூலமே பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. இதுபோன்ற அத்துமீறல்கள் எதிர்காலத்தில் பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்காது”

கோபண்ணா,

ஊடகத்துறைத் தலைவர், காங்கிரஸ்:


“மூன்றாவது அணி அமைந்தால், அது பாரதிய ஜனதாவுக்குச் சாதகமாக அமையும்.   ஏனென்றால், வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் என்பதே, இரண்டிலிருந்து மூன்று சதவிகிதம்தான். ஐந்து சதவிகித வாக்கு வித்தியாசத்தில் ஒரு கட்சி வெற்றி பெற்றால், அது அமோகமான வெற்றியாகும். இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க-வை அகற்ற வேண்டுமானால், இந்த வெற்றிக்கான வாக்கு சதவிகிதத்தில் பிளவு விழுந்து விடாதபடி, எதிர்க்கட்சிகள் எல்லாம், ஒரே அணியில் வலுவான கட்சியின் கீழ் இருக்க வேண்டும்”

மோடியை வெல்ல முடியுமா? - எதிர்க்கட்சிகள்... இரண்டு வியூகங்கள்

டி.கே.ரெங்கராஜன்,

மாநிலங்களவை எம்.பி, சி.பி.எம்:


“பா.ஜ.க-வை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் மற்றொரு மக்கள் விரோதப் பிற்போக்கு ஆட்சியை அரியணையில் அமர்த்திவிடக் கூடாது. சில கட்சிகள்கூடி,  ஆட்சியை மாற்றுவது மட்டுமே தீர்வல்ல. ஆகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான மக்கள் இயக்கங்களைக் கட்டிவருகிறது. அதன் விளைவுதான், மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட விவசாயிகள் எழுச்சி! அப்படிப்பட்ட மக்கள் இயக்கங் களின் மூலம்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதனால், இப்போதே நாங்கள் இரண்டாம் அணி, மூன்றாம் அணி என்ற சிந்தனைக்குள்ளேயே போகவில்லை”

கே.டி.ராகவன்,

மாநிலச் செயலாளர், பா.ஜ.க:


“2016 சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டது. சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோத்துக்கொண்டன. 19 லட்சம் வாக்குகள் இருக்கும் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை வெறும் 18 ஆயிரம். தெலுங்குதேசம் எங்களிடமிருந்து போயிருக்கிறது என்றால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் எங்களிடம் வந்துள்ளார்.  நாங்கள் அந்த வழியில் இப்படி வெற்றி பெற்றோம், இந்தவழியில் அப்படி வெற்றி பெற்றோம் என்று சொல்வது எதிர்க்கட்சிகளின் இயலாமையின் வெளிப்பாடுதான். ஒரு வாக்கில் வெற்றி பெற்றால்கூட வெற்றிதானே!”