Published:Updated:

கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?

கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?
பிரீமியம் ஸ்டோரி
News
கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?

கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?

காவிரி விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு கட்சிகளின் சார்பில் தமிழர்கள் 25 பேர் களத்தில் நிற்கிறார்கள். ‘ஜெயிக்கப் போவது யாரு’ என்பதுதான் அங்கே தமிழர்கள் மத்தியில் உலவும் கேள்வி.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயல் பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மை யாக வசிக்கிறார்கள். அந்தத் தொகுதியில் தமிழர்களே அதிக முறை வெற்றியும் பெற்றுள் ளனர். அதேபோல், பெங்களூரு மாநகரத்துக்கு உள்பட்ட காந்தி நகர், சிவாஜி நகர், ராஜாஜி நகர், சாந்தி நகர், புலிகேசி நகர், சி.வி.ராமன் நகர்  உள்ளிட்ட தொகுதிகளிலும் கணிசமான அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். பொது இடங்களில் தமிழில் பேசுவதே ஆபத்தான விஷயமாகக் கருதப்படும் பெங்களூரு நகரின் பெரும்பாலான தொகுதிகளில் தமிழர்களே முடிவைத் தீர்மானிப் பவர்களாக இருக்கிறார்கள். இதனால், காங்கிரஸ், பி.ஜே.பி, மதச்சார்பற்ற ஜனதா தளம் என முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழில் பேசி வாக்கு சேகரிக்கிறார்கள். 

கர்நாடகத் தேர்தல் களத்தில் 25 தமிழர்கள்... - ஜெயிக்கப் போவது யாரு?

அ.தி.மு.க இந்த முறை கர்நாடகத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. காந்தி நகர் தொகுதியில் யுவராஜ், கோலார் தங்கவயல் தொகுதியில் அன்பு, ஹனூர் தொகுதியில் ஆர்.பி.விஷ்ணுகுமார் ஆகிய மூன்று பேரும் களத்தில் நிற்கிறார்கள். ஆனால், ‘‘மூன்று தொகுதிகளிலும் நிற்கும் அ.தி.மு.க வேட்பாளர்கள் சென்னையிலே முகாமிட்டு அ.தி.மு.க தலைவர் களிடம் ஆலோசனையிலேயே இருந்துவருகி றார்கள். அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்ன மான இரட்டை இலை சின்னத்தைக்கூட இவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். இதுவரை தொகுதிக்கான பொறுப்பாளர்கள் குழுவும் போடவில்லை’’ என்ற புலம்பல் அ.தி.மு.க தரப்பில் உள்ளது. அ.தி.மு.க உடைந்தபோது ஆர்.கே.நகரில் மதுசூதனன் போட்டியிட்ட இரட்டை மின்கம்பம் சின்னத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நிற்கிறார்கள். கோலார் தங்கவயல், அ.தி.மு.க ஒரு காலத்தில் கோலோச்சிய தொகுதி என்றாலும், இப்போது அந்தத் தொகுதியில்கூட அந்தக் கட்சி கவனம் செலுத்தாமல் உள்ளது.

கோலார் தங்கவயலில் மட்டும் அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 10 தமிழ் வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். ‘இத்தனைத் தமிழர்கள் ஒரே தொகுதியில் நின்றால், தமிழர் வாக்குகள் பிரியும், கன்னடர் ஓட்டுகளை மொத்தமாக அள்ளலாம்’ என்ற கணக்கில் பி.ஜே.பி அங்கு ஒரு கன்னடரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் தமிழரான பக்தவத்சலத்தை தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு இந்தத் தொகுதியில் செல்வாக்கு இருப்பதால், அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.  

ஆம் ஆத்மி கட்சி சார்பில் இரண்டு தமிழர்கள் களத்தில் நிற்கிறார்கள். 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 29 தமிழர்கள் போட்டியிட்டார்கள். ஆனால், ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை 25 பேர் களத்தில் நின்றாலும், அதில் வெற்றிவாய்ப்பு என்பது சி.வி.ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் சம்பத்ராஜுக்கு மட்டுமே ஓரளவு உள்ளது. இவர் பெங்களூரு மேயராக இருப்பவர். ‘‘பெங்களூரு மேயராக நான் ஏராளமான திட்டங்களைச் செய்து கொடுத்துள்ளேன். மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவர உள்ளது. அப்போது, கூடுதலாக இன்னும் செய்து தருவேன். தமிழர்கள் என்னை முழுமையாக ஆதரிக்க வேண்டும். என்னை வெற்றிபெறச் செய்தால், தமிழரின் குரல் கர்நாடக சட்டசபையில் ஒலிக்கும். அத்துடன் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவும், உரிமையை மீட்கவும் குரல்கொடுப்பேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன். இவருக்காக தமிழக காங்கிரஸ் கட்சியினர் வந்து பிரசாரம் செய்கிறார்கள்.

மூன்று முறை கர்நாடக சட்டசபையில் கால்பதித்த அ.தி.மு.க-வின் நிலை இந்த முறை பரிதாபத்தில் உள்ளது. கோலார் தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க வேட்பாளர் அன்பு நம்மிடம், ‘‘கோலார் தொகுதி ஒரு காலத்தில் அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது. கடந்த இரண்டு முறையாக அதை இழந்துவிட்டோம். ஆனால், இந்த முறை கண்டிப்பாக அ.தி.மு.க வெற்றிபெறும். தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் சென்னையிலிருந்து பிரசாரத்துக்கு வருகை தர உள்ளார்கள். அதேநேரம், மக்களிடம் அ.தி.மு.க மீண்டும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது” என்றார்.

அவரிடம் “அதெல்லாம் சரி, சின்னத்தையே கோட்டைவிட்டுவிட்டு எப்படி ஜெயிப்பீர்கள்?’’ என்று கேட்டபோது, “தேர்தல் கமிஷன் கடைசி நேரக் குழப்பத்தில் எங்கள் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கட்சி சின்னம் வழங்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அதன்பிறகு இரட்டை இலை வடிவில் உள்ள இரட்டை மின்கம்பம் சின்னத்தைக் கேட்டுப் பெற்றோம்” என்கிறார் கூலாக.

கர்நாடகாவில் சுமார் 90 லட்சம் தமிழர்கள் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் 14 தமிழர்கள் மட்டுமே அங்கு எம்.எல்.ஏ ஆகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் கர்நாடக சட்டமன்றத்தில் நுழைந்ததில்லை. மீண்டும் ஒரு தமிழர் அங்கு சட்டமன்றத்துக்குள் கால்பதிப்பது சாத்தியமாகுமா?

- அ.சையது அபுதாஹிர்
படம்: எஸ்.குமரேசன்