Published:Updated:

20,638 கூட்டுறவு சங்கங்களுக்கு 1,98,502 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு!

20,638 கூட்டுறவு சங்கங்களுக்கு 1,98,502  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு!
20,638 கூட்டுறவு சங்கங்களுக்கு 1,98,502 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு!

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான முதல்நிலை தேர்தலில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நிறைவடைந்தது என்றும், தேர்தல் நடைபெற்ற  20,638 சங்கங்களில் 1,98,502 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு பெற்றுள்ளனர் என்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 22,532 கூட்டுறவுச் சங்கங்களுக்கு  ஐந்து நிலைகளில் தேர்தல் நடைபெறும் என்றும், முதல் நிலையில் வரும் 22,192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெறும் என்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 4.03.2013 அன்று தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நான்கு கட்ட தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையையும் ஆணையம் அப்போது வெளியிட்டிருந்தது.

மேலும் 20 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. ஆக மொத்தம்  22,212 கூட்டுறவுச் சங்கங்கள் தேர்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றுள் 19,115 சங்கங்களில் போட்டியின்றியும், 1,523 சங்கங்களில் போட்டி ஏற்பட்டதால் தேர்தல் நடத்தியும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1,574 சங்கங்களில் ஒரு வேட்புமனு கூட பெறப்படாததால் இச்சங்கங்களில்  தேர்தல் நடைபெறவில்லை. இவை பெரும்பாலும் செயல் இழந்துள்ள சங்கங்களே ஆகும்.

இந்த நான்கு கட்டத்தேர்தலில் நான்காவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27.4.2013 அன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 30.4.2013 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான்காவது கட்டத்தேர்தலில் 461 சங்கங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்று 4,057 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுள் 532 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டின் கீழும், 810 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 2,715பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நான்காவது கட்டத் தேர்தலில் 5,120 சங்கங்களில் 49,568 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலையில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 20,638 சங்கங்களில் மொத்தம் 1,98,502 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 1,85,193 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 13,309 பேர் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 28,095 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டின் கீழும், 55211 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 1,15,196 பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மூன்று கட்டங்களின் கீழ் வரும் 14,975 சங்கங்களில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 14933 பேர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 14,917 பேர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 923 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டின் கீழும், 1,887 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 12,123 பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதே போல துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 1,275 பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இடஒதுக்கீட்டின் கீழும், 2,840 பேர் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழும், 10,802 பேர் பொதுப்பிரிவின் கீழும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 42 சங்கங்களில் தலைவர் பதவியும், 58 சங்கங்களில் துணைத்தலைவர் பதவியும் தேர்ந்தெடுக்கப்படாமல் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நான்காவது கட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 5,581 சங்கங்களில் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 6.5.2013 அன்று நடைபெறுகிறது.

##~~##
நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள  20,638 கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் வரும்  9 தேதி பதவி ஏற்க உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் தங்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தைக் கூட்டி இரண்டாவது நிலையில் தேர்தல் நடைபெறும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.
இரண்டாம் நிலையில் 198 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பும், தேர்தல் அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையர் ம.ரா. மோகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.