2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!

2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!

க.பழனித்துரை பேராசிரியர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

க்களை அதிகாரப்படுத்துவதற்கும், மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மக்களுக்கு அருகிலேயே அமைக்கப்படும் அரசாங்கம்தான் உள்ளாட்சிக் கட்டமைப்பு. 

2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!

கடந்த 30 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த எண்ணற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவும் அரசியல் சாசனச் சட்டத்தைத் திருத்தி, இரண்டு அடுக்குகளாக இருந்த அரசாங்க அமைப்பை மூன்றடுக்கு அரசாங்கமாக உருவாக்கியது. அரசியல் சாசனச் சட்டத்தில் பகுதி IX A பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளாட்சியும் ஓர் அரசாங்கமாக உருவாக்கப்பட்டுவிட்டது. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகள்போல் நிலைத்த தன்மையை உள்ளாட்சி அமைப்புகளும் பெற்றுவிட்டன. 

2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!

இந்தச் செயல்பாடு உலகத்தின் பார்வையை இந்தியாவின்மேல் பட வைத்தது. மக்களாட்சியை விரிவுபடுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும், அகலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பை மக்கள் எப்படிக் கைக்கொண்டு பயன்படுத்துகின்றனர் என்பது பலருக்கும் புதிரான கேள்வி. 

குறிப்பாக, நம் தமிழ்நாடு உள்ளாட்சியை இன்று எப்படிக் கையாள்கிறது? நாம் உண்மையி லேயே மக்களாட்சி பற்றிய புரிதல் உள்ளவர்களா... மக்களாட்சியின் மேல் நம்பிக்கை உள்ளவர்களா என்ற கேள்விகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்குப் புதிது புதிதாகக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.  நான்கு முறை உள்ளாட்சித் தேர்தலை நடத்திய மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு, ஐந்தாவது முறை நடத்தத் தெரியாதா... திறனற்றதாக மாறிவிட்டதா மாநிலத் தேர்தல் ஆணையம்?

இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதன் விளைவுகள் என்ன? தெருவிளக்குகள் எரியவில்லை; குடிநீர் தேவையான அளவுக்கு வரவில்லை; தெருக்கள் சுத்தம் செய்யப்படவில்லை; கொசுக்கள் அதிகமாகிவிட்டன; டெங்கு மாதிரியான நோய்கள் பரவி எத்தனையோ பேர் உயிர் போயிருக்கிறது; சேதமடைந்த சாலைகள் அப்படியே கிடக்கின்றன.

முன்பு இவையனைத்தையும் சரிசெய்யக் கடமைப்பட்டவர்கள், பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் மக்களுக்குப் பக்கத்தில் இருந்தார்கள். இன்று யாரும் மக்களுக்குக் கடமைப்பட்டவர்களாக அருகில் இல்லை.

2018 டாப் 10 பிரச்னைகள் - உள்ளாட்சி எனும் உற்றதோழன்!

கஜா புயலால் மக்களெல்லாம் வீதிக்கு வந்து நிவாரணம் கேட்டுச் சாலைகளில் அமர்ந்து விட்டனர். உள்ளாட்சி இருந்திருந்தால் பேரிடரைச் சமாளிக்க குழு ஒன்று தயாராகிப் பொறுப்பேற்றிருக்கும்;  பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் பஞ்சாயத்து கணக்கெடுத்து யாருக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றையெல்லாம் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கும். மக்களும் நிவாரணத்தில் இணைந்திருப்பார்கள். ஆனால், இன்று எந்தப் பணியிலும் மக்களின் பங்களிப்பு இல்லை. அதிகாரிகள் திணறுகிறார்கள். மாநில அரசு, உள்ளாட்சி எனும் உற்ற தோழனை இழந்து, அவப்பெயரைச் சம்பாதித்துக்கொண்டுள்ளது.

உள்ளாட்சி என்பது மக்களுக்குப் பக்கத்தில் உள்ள முதல் நிலை அரசு. அரசியல் சாசனச் சட்டத்தால் மத்திய மாநில அரசாங்கங்களைப்போல் அந்தஸ்தைப் பெற்ற ஒன்றுதான் உள்ளாட்சி அரசாங்கமும். ஆனால் அது மாநில அரசால் மூன்றாம் தர அரசாகப் பார்க்கப்படுகிறது. இரண்டாண்டுக் காலம் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே அரசியல் சட்டத்தை மீறுவதாகும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததன் விளைவு, மத்திய அரசாங்கத்திட மிருந்து உள்ளாட்சிகளுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி நிதி வந்துசேரவில்லை. யாருக்கு நஷ்டம்? இவற்றையெல்லாம் சட்டத்தின் பின்புலத்தில் மீள்பார்வை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. உள்ளாட்சிச் சட்டங்களைத் திருத்த வேண்டிய தருணமும் வந்துவிட்டது. அதேபோல் மாநிலத் தேர்தல் ஆணையத்தைச் சட்டத்தின்மூலம் வலுப்படுத்த வேண்டிய சூழலும் வந்திருக்கிறது.