அரசியல்
Published:Updated:

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!
பிரீமியம் ஸ்டோரி
News
கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

விறுவிறு வி.ஐ.பி - மத்திய சென்னை– சூரஜ்

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

லைநகரின் தலையாயத் தொகுதி மத்திய சென்னை. அந்தவகையில், மாநிலத்திலேயே மிக முக்கியமான தொகுதியும்கூட. அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம் என்று முழுக்க முழுக்க சென்னைப் பெருநகரப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது. 

தொகுதியைத் தேர்வு செய்ய காரணம் என்ன?

மத்திய சென்னை தொகுதிக்கும், மாறன் குடும்பத்தினருக்கும் நெடிய தொடர்பு இருக்கிறது. முரசொலி மாறன், இங்கே மூன்றுமுறை எம்.பி–யாக இருந்துள்ளார். தயாநிதி மாறன், இருமுறை வென்றுள்ளார். மூன்றாவது முறையாகக் கடந்த 2014-ல் போட்டி யிட்டபோது, அ.தி.மு.க–வின் விஜயகுமாரிடம் தோற்றுப்போனார். இந்தமுறை எப்படியும் ஜெயித்துவிட வேண்டுமென்ற நோக்கில், தி.மு.க–வினர் அதிதீவிரமாகக் களமிறங்கி வேலைபார்க்கிறார்கள். கட்சி நிர்வாகிகளுக்கான முதல்கட்டப் பணப்பட்டுவாடாவே முடிந்து விட்டது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கனெக்‌ஷனும் எலெக்சனும்!

கேபிள் ஆப்ரேட்டர்களை வைத்து மக்களிடம் பணப்பட்டுவாடா செய்ய தி.மு.க–வினர் ரகசியத்திட்டம் தீட்டிவருவதாகப் புகார் வாசிக்கிறார்கள், பா.ம.க–வினர். எந்தெந்த வகையில் பணப்பட்டுவாடா நடக்கும் என்பதைக் கண்காணிக்கவே ‘ஹைடெக் டீம்’ ஒன்றை அ.ம.மு.க அமைத்திருப்பதாக இன்னொரு பக்கம் தகவல் வருகிறது. ஆக, மத்திய சென்னை தொகுதியின் பிரசாரம்... ஆரம்பமே டாப் கியரில் தொடங்கியிருக்கிறது.

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

‘‘ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து செல்லும் இடமாக இருக்கிறது எழும்பூர் ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் முன்புறச் சாலையைக் கடந்து எதிர்பகுதிக்குப் போவதற்குள் உயிர்போய் உயிர் வந்துவிடும். மக்கள் எளிதாகச் சாலையைக் கடக்க ஒரேயொரு நடை மேம்பாலம் இருந்தது. அங்குள்ள கடைக்காரர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகச்சொல்லி, நடை மேம்பாலத்தையே நைசாக எடுக்கவைத்து விட்டார்கள். போக்குவரத்து மிகுந்த நேரங்களில், ரயில் நிலையத்துக்கு வரும் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் லக்கேஜ்-யுடன் அல்லாடும் காட்சி, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத அவலம். இந்த ஒரு பிரச்னையைக்கூட, தயாநிதி மாறன், விஜயகுமார் இருவருமே தீர்க்கவில்லை என்பது, இந்தத் தொகுதியிலுள்ள மக்களின் பரவலான குமுறலாகவுள்ளது.

தொகுதியில் இரண்டேகால் லட்சம் இஸ்லாமியர்கள், 75 ஆயிரம் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர்வதற்காகவே, சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியக் கட்சிகள் வாய்ப்புகளை வழங்கியுள்ளன. பா.ம.க சார்பில் போட்டியிடும் சாம் பால், கிறிஸ்துவர் -  நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அ.ம.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டும் முஸ்லீம் வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. தி.மு.க–வுக்குப் போகவேண்டிய சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறலாம் என்பதே இப்போதைய யூகமாக இருக்கிறது.

இது ஒரு லிட்டில் இந்தியா!


மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியை ‘லிட்டில் இந்தியா’ என்று சொல்லும் அளவுக்கு மார்வாடிகள், குஜராத்திகள் பல ஏரியாக்களில் குடியிருக்கிறார்கள். முஸ்லீம், கிறிஸ்துவர் மற்றும் மீனவர் சமூகத்தினருடன் வெவ்வேறு சமுதாயத்தினரும் கலந்து வசிக்கின்றனர். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே பரவலாக வசிக்கின்றனர். தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் என சென்னையின் முக்கிய ‘லேண்ட் மார்க்’ இடங்கள் இந்தத் தொகுதியில்தான் அதிகம் உள்ளன.

பல லட்சம் வாக்காளர்களைக் குறி வைத்து, ஆறு கமாண்டர்களுடன் தயாநிதி மாறன் களம் இறங்கி விட்டதாகச் சொல்கிறார்கள், தி.மு.க–வினர். தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் தற்போது தி.மு.க வசம் இருக்கின்றன. அந்த எம்.எல்.ஏ–க்களைத்தான் தங்களது கமாண்டர்கள் என்கிறது மாறன் தரப்பு.

தயாநிதி மாறனிடம் பேசியபோது, “எங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இங்குள்ள வாக்காளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுக்க ஒரு ரூபாய் போன் பேசும் திட்டம், பாஸ்கான் போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் பலவற்றை தமிழகத்துக்குக் கொண்டு வந்தேன். பெரம்பூர் ‘லோகோ வொர்க்’ பாலம், அண்ணாநகர்-மேத்தாநகர் பாலம் ஆகியவற்றை என் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்தேன். இவைகளைத் தொகுதி மக்கள் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்” என்றார்.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் நிற்கும் டாக்டர் சாம் பால், கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணித்தலைவர். தொழிலதிபர், கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் சிறந்த யோசனைகள் விரும்பி என்றெல்லாம் இவருக்கு நீண்ட ‘இன்ட்ரோ’ கொடுக்கிறார்கள், பா.ம.க–வினர்.

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

‘‘எனது தொகுதியில் உள்ள இளைஞர்களில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, ஊழல் ஒழிப்பு, மனித உரிமை மீறல் நடக்காமல் இருப்பது... இவைதான் எனது பிரசாரத்தின் முக்கிய அம்சங்கள். மக்கள் குடிக்கச் சுத்தமான குடிநீர், சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாமல் மக்கள் வாழ்வது போன்றவற்றுக்காகப் பாடுபடுவதே எனது லட்சியம்!’’ என்கிறார் சாம் பால்.

அ.ம.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவியும் போட்டியிடுகிறார். அவரது பக்குவமான பேச்சு, எல்லோரையும் ஈர்க்கிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் வெகுவாக ரசிக்கின்றனர். இதனால் இஸ்ஸாமிய சிறுபான்மையினர் ஓட்டுகள் இந்தமுறை தி.மு.க-வுக்கு முழுவதுமாகக் கிடைப்பது சிரமம் என்கிறார்கள். அந்தவகையில் தெஹ்லான் பாகவி இம்முறை தயாநிதி மாறனுக்கு கிடைக்கும் ஓட்டுகளுக்கு கடும் சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

பல்வேறு வி.ஐ.பி–களும் மத்திய சென்னை தொகுதியில் முட்டி மோதுவதால், இங்கே யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை யூகிப்பது, இப்போதைக்கு இயலாத ஒன்று!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

“தினகரனுக்கே வாய்ப்பு” - தெஹ்லான் பாகவி

‘‘த
யாநிதி மாறன் பெரிய தொழில் அதிபர். அவர் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது துறைரீதியான முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மக்கள் அறிவர். அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க தரப்பில் போட்டியிடுகிறார் சாம். கார்ப்பரேட் பிஸினஸ் மேன். இங்குள்ள அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் பா.ம.க தலைமைமீது கடும் எரிச்சலில் இருக்கிறார்கள். எனவே, அ.தி.மு.க–வினரின் வாக்குகள், தினகரனுக்கே அதிகம் கிடைக்கும். அதேசமயம் தி.மு.க-வுக்குப் போகவேண்டிய இஸ்லாமியர் வாக்குகளும் இம்முறை எனக்கே கிடைக்கும்.  உங்கள் ஒட்டு சமூக சேவகருக்கா... கார்பரேட் முதலாளிகளுக்கா... என்கிற கோஷத்தைத்தான் நான் முன்வைக்கப்போகிறேன்’’ என்கிறார்.

கரை சேருவாரா தயாநிதி? - ஓட்டைப் பிரிக்கும் எஸ்.டி.பி.ஐ!

“விரக்தியால் போட்டியிடுகிறோம்!”

நடி
கர் நாசரின் மனைவியும், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளருமான கமீலா நாசர், ‘‘நாங்கள் யாரையும் எதிர்த்துப் பிரசாரம் செய்து வாக்குச் சேகரிக்கப்போவதில்லை. அடுத்த தலைமுறைக்கு மனதளவில் திருப்தியுடன் கூடிய முன்னேற்றம் கொடுப்பதைக் குறிவைத்தே எங்கள் பிரசாரம் இருக்கும். இதுவரை அடுக்கு மொழியில் பேசிப் பேசி மக்களை மயக்கி, கைதட்டல் பெற்று ஜெயித்துள்ளனர். ஒரு மனிதன் ஒரு விஷயத்தைச் செய்தே தீரவேண்டும் என எப்போது முடிவு எடுப்பான்? விரக்தி மற்றும் கோபத்தின் உச்சத்தில்தான்... நானும், எங்கள் தலைவரும் அரசியலுக்கு வரக் காரணம் அரசியல்வாதிகளால் ஏற்பட்ட விரக்திதான்!” என்றார்.