அரசியல்
Published:Updated:

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

விறுவிறு வி.ஐ.பி - நீலகிரி (தனி)ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

ஆ.ராசா தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதாலேயே தனிக்கவனம் ஈர்த்துள்ளது நீலகிரி தொகுதி. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் என்று நான்கு மாவட்ட எல்லைகளுக்குள் வரும் நீலகிரி (தனி) தொகுதியில், தி.மு.க சார்பில் ஆ. ராசா, அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.பி தியாகராஜன், அ.ம.மு.க சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க–வும், தி.மு.க–வும் நேரடியாக மோதும் எட்டுத் தொகுதிகளில் நீலகிரியும் ஒன்று. நீலகிரியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக களமிறங்குகிறார் ராசா. பெரம்பலுார் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு, ஒருமுறை மட்டுமே தோல்வியடைந்த ராசா, நீலகிரி தனித்தொகுதியான பின்பு, இருமுறை போட்டியிட்டு, 2009-ல் வெற்றியும், 2014-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

தொகுதியைத் தேர்வு செய்யக்காரணம் என்ன?

சொந்த ஊரான பெரம்பலூரைவிட்டு ஆ.ராசா நீலகிரி தொகுதியைத் தேர்வு செய்வதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. நீலகிரி தனித்தொகுதி. பட்டியலின வாக்காளர்கள் அதிகம் உள்ள ஏரியா. பெரம்பலூர்தான் ராசாவின் பூர்வீகம். பெரம்பலூர், துறையூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், நீலகிரியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் ஆதரவு எப்போதும் தனக்கு உண்டு என்ற நம்பிக்கை ராசாவுக்கு அதிகம் உள்ளது. நீலகிரியைப் பொறுத்தவரை குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்றத் தொகுதிகள், எப்போதும் தி.மு.க-வின் கோட்டையாக உள்ளது. அதேபோல, ஊட்டித் தொகுதி காங்கிரஸின் கையிலேயே நீண்டகாலமாக இருந்துள்ளது.

இவை மட்டுமின்றி, தனது அரசியல் வாழ்வில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தித் தலைவலியைத் தந்த 2G வழக்கிலிருந்து ராசா விடுதலையானபின் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அதுவே, தனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று ராசா தீர்க்கமாக நம்புகிறார். ‘நான் 2G-யால் பயனடைந்தவன். எனது ஆதரவு ராசாவுக்கே’ என்று இளைஞர்கள் பேசும் வீடியோக்களை எடுத்து, தி.மு.க-வின் ஐ.டி விங் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். முக்கியமாக,  நீலகிரியில் வாழும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஆதரவு தனக்குத்தான் என்று ராசா உறுதியாக நம்புகிறார்.

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

ப்ளஸ், மைனஸ் என்ன?

நீலகிரியில் பெரிய அளவுக்குப் பரிச்சயம் இல்லாத தியாகராஜன், அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ல், பொள்ளாச்சி எம்.பி–யாக 13 மாதங்கள் மட்டுமே இருந்துள்ளார். அப்போதே இவரது செயல்பாடுகள், சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை. அ.தி.மு.க-வில் சரவணன், குருமூர்த்தி என்று பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், இறுதியாக தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து பல சீனியர் நிர்வாகிகள் அப்செட்டில் உள்ளனர். அதேபோல, நீலகிரி மாவட்டச் செயலாளர் பதவியானது ராஜ்யசபா எம்.பி-யான கே.ஆர்.அர்ஜூனனிடமிருந்து பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனிடம் தரப்பட்டதில், அர்ஜூனன் தரப்பும் கடும் அதிருப்தியில் இருக்கிறது. அத்துடன், அ.ம.மு.க தனியாக நிற்கிறது. இவை எல்லாம், ராசாவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துவிட்டன என்று உடன் பிறப்புகள் அடித்துச்சொல்கின்றனர்.

தி.மு.க-வின் கோட்டையாக இருந்த குன்னூர் சட்டமன்றத் தொகுதி, தற்போது அ.தி.மு.க வசம் இருப்பது, ராசாவுக்கு சற்றுப் பலவீனம். கூடலூர் தொகுதியில் முக்கியப் பிரச்னையாக இருக்கும் ‘செக்‌ஷன் 17’ நிலப் பிரச்னை தொடர்பாக எதிர்க் கட்சியான தி.மு.க-வும், அதன் தலைவர் ஸ்டாலினும் அதிகம் பேசவில்லை என்ற கோபம் அங்குள்ள மக்களிடம் இருக்கிறது. ஆனால், கூடலூர் தொகுதியைத் தங்களது அசைக்க முடியாத கோட்டையாக தி.மு.க இப்போதும் நம்பி வருகிறது.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் கணிசமாகவுள்ளன. இவர்களுக்குக் கருணாநிதி மேல் எப்போதும் தனிப்பாசம் உண்டு. ஆனால், ஊதியப் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால், அவர்களில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பைத் தேடி கோவை, திருப்பூர் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அத்துடன், கூடலூரில் அ.ம.மு.க-வும் சற்று பலமாக உள்ளது. எனவே, தி.மு.க-வுக்கு எப்போதும் கிடைக்கும் ஆதரவு, இந்தமுறை கிடைப்பது சற்றுக் கடினம்தான் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ராசா ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். நீலகிரியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இது ராசாவுக்கு மிகப்பெரிய மைனஸ். அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன் அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர். தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது தியாகராஜனின் முதல் ப்ளஸ். குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி என்று நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க வசம்தான் உள்ளன. கொங்கு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதும், தியாகராஜனுக்குக் கூடுதல் வாக்குகளைச் சேர்க்கும். ஆனால், இவை அனைத்தையும்விட, சிட்டிங் எம்.பி கோபாலகிருஷ்ணனின் செயல்பாடுகளால் மக்களிடம் அதிருப்தி, மேலோங்கியுள்ளது. அ.ம.மு.க சார்பில் களமிறங்கும் ராமசாமி, ஊட்டியில் சில ஆண்டுகள் சப்-கலெக்டராகப் பணியாற்றியுள்ளார். அந்த அனுபவத்தையும், அ.தி.மு.க அதிருப்தி வாக்குகளையும் நம்பிக் களமிறங்குகிறார் ராமசாமி.

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

வி.ஐ.பி தொகுதி என்பதால் தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே பணத்திலும், கூட்டத்திலும் மாஸ் காட்ட முடிவு செய்துள்ளன. வேட்பாளர் அறிமுகத்திலேயே தி.மு.க–வை அசரடிக்கும் விதமாக ஒரு லட்சம் மக்களைக் களமிறக்க அ.தி.மு.க-வினர் முடிவு செய்துள்ளனர். கடந்த முறை ராசா தோல்வியடைந்ததற்கு, கெடுபிடிகளால் மக்களுக்குப் பணம் வழங்க முடியாததும் ஒரு முக்கியக் காரணம். அதேநேரத்தில், மேலிடம் பிரஷர் காரணமாக ஆம்புலன்ஸ் போன்றவற்றில் வைத்து அ.தி.மு.க-வினர் பண விநியோகம் செய்ய சில அதிகாரிகள் உதவி செய்தனர்.

இந்நிலையில், இந்த முறை அதுபோன்ற தவறுகள் நடந்து விடக்கூடாது என்பதற்காக, “ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி ஆகியவற்றிலும் சோதனை செய்வோம்” என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி காட்டி வருகிறார்.  அவரை எப்படி சமாளிப்பது... என்று அ.தி.மு.க, தி.மு.க தரப்பினர் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

ஆ.ராசா, வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கவேண்டும் என்பது உறுதி!

- இரா.குருபிரசாத்
படங்கள்: ரா.சதீஸ்குமார், கே.அருண்

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

‘‘ஆ.ராசா வெளியூர்க்காரர்!’’ - அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன்

“செ
ல்லும் இடத்தில் எல்லாம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அம்மாவின் சாதனை மற்றும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக்கேட்பேன். என்னை வேட்பாளராக அறிவித்ததில், எங்களது கட்சிக்குள் அதிருப்தி என்பதெல்லாம் பொய். நீலகிரி தொகுதி முழுவதுமே எங்களது கட்சிக்காரர்கள்தான். அனைவரும் எனக்கு நல்ல பழக்கம். நான் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவன். மண்ணின் மைந்தன். ராசா வெளியூர்க்காரர். எனவே, நான் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் உறுதி. அதேசமயம், ராசாவை எப்போது நேரில் சந்தித்தாலும் பேசுவேன். அவர்மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. எனது வெற்றிக்கு அவரிடமே நான் ஆசீர்வாதம் வாங்குவேன்” என்றார்.

ஆ.ராசா... என்ன சொல்கிறது நீலகிரி?

‘‘எல்லாரும் என் சொந்தங்களே!’’- தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா

“க
டந்த 2009-ம் ஆண்டில் கருணாநிதி என்னை முதன் முதலாக மலைப் பகுதியான நீலகிரிக்கு அனுப்பிவைத்தார். அப்போது, நிலச்சரிவால் நீலகிரி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்றேன். மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம். அப்போதே, இந்த மக்களிடம் நான் நெருங்கிவிட்டேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து இந்தப் பகுதிக்கு வந்து மக்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தற்போது, மீண்டும் எனக்குக் கட்சித் தலைமை வாய்ப்புக்கொடுத்துள்ளது. நீலகிரி எனக்குப் புதிய இடம் கிடையாது. இங்கிருக்கும் மக்கள் எல்லாம் என்னுடைய சொந்தங்கள்தான். மத்திய பி.ஜே.பி அரசின் தேசவிரோத அணுகுமுறை, மக்களிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீலகிரி மட்டுமல்ல... 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்!” என்கிறார்.