அரசியல்
Published:Updated:

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

விறுவிறு வி.ஐ.பி - சிதம்பரம்ஓவியம்: கார்த்திகேயன் மேடி

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாத, விவசாயிகள் - விவசாயக் கூலித்தொழிலாளர்களை அதிகம் கொண்டுள்ள தொகுதியும்கூட.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

1952-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள 16 தேர்தல்களில் காங்கிரஸ் ஆறு முறையும்,  தி.மு.க நான்கு முறையும், பா.ம.க மூன்று முறையும், அ.தி.மு.க இரண்டு முறையும், வி.சி.க ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. சிதம்பரம் தொகுதியில் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு முறை போட்டியிட்டு, 2009-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தற்போது ஐந்தாவது முறையாக இங்கு களம் காண்கிறார்.

இத்தொகுதியை திருமா மீண்டும் தேர்வு செய்ததற்கான முக்கியக் காரணம், இவரது சொந்த ஊரான அங்கனுார் (அரியலூர் மாவட்டம்) இந்தத் தொகுதிக்குள் இருப்பதுதான். மூன்றுமுறைத் தோல்வியைச் சந்தித்தபோதும், கணிசமான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். அந்தவகையில், இந்தத் தொகுதியைப் பாதுகாப்பானதாகக் கருதுகிறார் திருமா. அத்துடன், சென்டிமென்ட்டாகவும் இத்தொகுதியை அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

தொகுதியில், வன்னியர்களுக்கு இணையாகத் தலித் வாக்காளர்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள், உடையார், முதலியார் போன்ற பிற சமூகத்தினரின் வாக்குகளும் கணிசமாக உள்ளன. அதனால், ‘தி.மு.க கூட்டணி பலத்துடன் நிச்சயம் ஜெயிக்கலாம்’ என்று திருமாவளவன் நினைக்கிறார். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் மட்டுமன்றி, தொகுதி முழுவதுமே அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. இந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., ஐ.ஜே.கே, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் இருப்பதையும் மறுக்கமுடியாது.

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

ப்ளஸ், மைனஸ் என்ன?

சென்ற முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.பி சந்திரகாசி, தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. தொகுதிக்குள்ளும் அடிக்கடி வரவில்லை. இவர்மீதும், அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன்மீதும் உள்ள அதிருப்தியும், பி.ஜே.பி–க்கு எதிரான மனநிலையும் திருமாவளவனுக்குச் சாதகமான அம்சங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க வந்திருப்பது, ஒருவிதத்தில் பலமாகவும், மற்றொரு புறத்தில் பலவீனமாகவும் பார்க்கப்படுகிறது. வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவின் மரணம், பா.ம.க-வுக்கு பெரும் இழப்பு. அவரின் ஊர் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது. குருவின் மரணம், அதன் பின்பு ஏற்பட்ட சர்ச்சைகள், அதனால் பா.ம.க-வுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் போன்றவை திருமாவுக்குக் கூடுதல் பலம்.

திருமாவளவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், தற்போது தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொண்டாடுகின்றனர். அவரது பணியும், பெரும் பலம் சேர்க்கும். காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் திருமாவளவனை ஆதரித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்கிறார்கள். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்மீது சுமத்தப்படும் சமூகரீதியானக் குற்றச்சாட்டுகள், சமீபகாலமாக அதிகரித்திருப்பது திருமாவளவனுக்கு எதிரான முக்கியக் காரணியாக இருக்கும். ஏனெனில், வி.சி.க மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, தொகுதியில் கணிசமாகவுள்ள வன்னியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினர் வாக்குகளை எதிரணியினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சி செய்வார்கள்.

சென்றமுறை திருமாவளவன் எம்.பி–யாக இருந்தபோது, தொகுதிக்கு அடிக்கடி வந்ததில்லை என்ற புகாரை இன்னும் பலர் வாசிக்கின்றனர். திருமாவளவன் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால், தொகுதி மக்கள் அடிக்கடி அவரைச் சந்திக்க முடியவில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது.

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?

திருமாவளவனைப் பொறுத்தவரை, வாக்குச் சாவடி முகவர்கள், வாகன வாடகை, பிரசாரம் போன்ற நடைமுறைச்செலவுகளை மட்டுமே தருவார் என்ற பேச்சு உள்ளது. அதைத் தாண்டி, கட்சி நிர்வாகிகளுக்குக் கூடுதல் கவனிப்பு செய்யவோ, வாக்காளர்களுக்குப் பணம் தரவோ வாய்ப்பு இல்லை. அவரே கடந்த இரண்டு வருடங்களாகக் கட்சியினரிடம் தேர்தல் நிதி வசூலித்து வருகிறார். இதனால்,  திருமாவுக்குக் கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.

அ.தி.மு.க கூட்டணியில், அக்கட்சியின் சார்பில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் ஆதரவுடன் களமிறங்கியுள்ளார். இவர் அதிகமாகச் செலவு செய்வார் என்பதுதான் இவருக்கான முதல் அறிமுகமாகக் கூறப்படுகிறது. தொகுதியில் பா.ம.க., தே.மு.தி.க., பி.ஜே.பி போன்ற கட்சிகளுக்கும் ஓரளவு வாக்குவங்கி இருக்கிறது.

வெற்றிக்காக திருமா கடுமையாக உழைக்க வேண்டும்!

கடந்த தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் சந்திரகாசி 4,29,536 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 3,01,041 வாக்குகளும், பா.ம.க சார்பில் போட்டியிட்ட சுதா மணிரத்தினம் 2,79,016 வாக்குகளும் பெற்றனர். இந்தத் தேர்தலில், அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் கூட்டணி அமைத்துள்ளன. இதன்படி பார்த்தால், அ.தி.மு.க கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரனும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துச் சுறுசுறுப்பாகத் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டார். ஆனால், கடந்த 21-ம் தேதி வரையிலும் திருமா தொகுதிக்குள் வரவேயில்லை.

அ.ம.மு.க. சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இளவரசன் போட்டியிடுகிறார். இவர் வேறு மாவட்டத்திலிருந்து இங்கு வந்து போட்டியிடுவதால் விடுதலைச் சிறுத்தைகள், அ.தி.மு.க வேட்பாளர்களுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்துவார் என்று தோன்றவில்லை. பணத்துக்காக இவருக்குத் தொகுதியை ஒதுக்கியுள்ளதாக அ.ம.மு.க தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
 
திருமாவளவன், தொகுதிக்குள் வந்து தி.மு.க உள்ளிட்டக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக் கடுமையாக உழைக்க வேண்டும். அதிருப்தியில் உள்ள மற்ற சமுதாய மக்களையும் சந்தித்து அவர்களின் வாக்குகளையும் பெற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில், சிதம்பரம் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வாக்குகளின் வித்தியாசம் குறைவாகத்தான் இருக்கும்.

- ஜி.சதாசிவம்
படம்: எஸ்.தேவராஜன்