அரசியல்
Published:Updated:

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

விறுவிறு வி.ஐ.பி - தென்காசி (தனி)

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரே தனித்தொகுதி  தென்காசி. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது தென்காசி நாடாளுமன்றத் தொகுதி. இப்போதைய நிலையில், தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகி இருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணி சார்பாகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, அ.ம.மு.க வேட்பாளராக பொன்னுத்தாய், தி.மு.க வேட்பாளராக தனுஷ்குமார் களம் இறங்குகின்றனர்.

தொகுதியைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், ஏற்கெனவே மூன்று முறை போட்டியிட்ட கிருஷ்ணசாமிக்குத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. இங்கு, தனித்துப் போட்டியிட்டபோதே ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அள்ளியவர் அவர். கடந்த முறை தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு, 2,62,812 வாக்குகளைப் பெற்றார். தனக்கென இருக்கும் செல்வாக்குடன் அ.தி.மு.க கூட்டணி பலமும் சேர்ந்து, தன்னைக் கரைசேர்க்கும் என்று அபரிமிதமான நம்பிக்கையில் இருக்கிறார் கிருஷ்ணசாமி. தொகுதியைக் குறிவைத்து அவர் கேட்டு வாங்கியதன் காரணம், இந்த நம்பிக்கைதான்.

எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தென்காசியில் போட்டியிடுவது என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணசாமி, கடந்த ஓராண்டுக்கும் முன்பாகவே தொகுதியில் கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக, பட்டியல் இன மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களில் கூட்டங்கள் நடத்துவது, சமுதாயத் தலைவர்களைச் சந்திப்பது என்று தொடர்ந்து தொகுதிக்குள்ளேயே இயங்கிவந்தார்.    

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

பிளஸ் மைனஸ் என்ன?

தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரான தனுஷ்குமார், அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான தனுஷ்கோடி என்பவரின் மகன். புதிய தமிழகம் கட்சியை டாக்டர் கிருஷ்ணசாமி 1996 காலகட்டத்தில் தொடங்கியபோது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் தனுஷ்கோடி. தற்போது அவரது மகனும், டாக்டர்.கிருஷ்ணசாமியும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்வது காலத்தின் கோலம்.  தனுஷ்குமாருக்கும், இந்தத் தொகுதியில் உள்ள பட்டியலின மக்கள் நெருக்கம் என்பது அவருக்கு ப்ளஸ். அத்துடன், இந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கும் காங்கிரஸ், ம.தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் வாக்கு வங்கியும் கூடுதல் பலமாக அமையும். 28 வருடங்களுக்குப் பிறகு, உதயசூரியன் சின்னம் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாகப் பிரசாரம் செய்கிறார்கள். இது கூடுதல் பலம். அதேவேளை, ஏழு முறை வெற்றி பெற்ற தொகுதியை இழந்து நிற்கும் காங்கிரஸ் மற்றும் தொகுதியைக் கேட்டு அடம்பிடித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் மனப்பூர்வமாக வேலை செய்வார்களா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப்பூசலும் தனுஷ்கோடிக்கு மைனஸாக முடியக்கூடும்.

டாக்டர்.கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை, கூட்டணி பலத்தை நம்பிக் களத்தில் இருக்கிறார். தனது சொந்தச் செல்வாக்குடன் அ.தி.மு.க., பி.ஜே.பி மற்றும் தே.மு.தி.க கட்சிகளின் வாக்காளர் களை தனக்கான ப்ளஸ் ஆக கிருஷ்ணசாமி நம்புகிறார். தென்காசி தொகுதியின் குக்கிராமம் முதல் அனைத்துப் பகுதிகளும் அவருக்கு அத்துப்படி. அப்பகுதி மக்களின் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து அலசி ஆராயும் அளவுக்குத் தொகுதிக்குள் பலமுறை வலம் வந்திருப்பது கூடுதல் பலம். வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்யும் அளவுக்குத் தொண்டர்களை வைத்திருப்பதும் அவரின் கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், இந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கும் தேவர் சமூக வாக்குகள், அ.ம.மு.க பக்கமாகச் சாய்வது மைனஸ்.

பட்டியலின மக்களைத் தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரும் கிருஷ்ணசாமியின் அறிவிப்புக்குப் பட்டியலின மக்களிடம் வரவேற்பு அதிகம் உள்ளது. அதேவேளை, பட்டியலினத்தில் இருந்து வெளியேறினால் சலுகைகளை இழந்துவிடுவோம் என்பதால் அவருடைய அந்த முடிவுக்கு எதிர்ப்புக் குரல்களும் கேட்பது அவருக்கான பலவீனமாகக் கருத வேண்டியிருக்கிறது. இதுதவிர, கடந்தமுறை இந்தத் தொகுதியின் எம்.பி-யாக இருந்த அ.தி.மு.க-வின் வசந்தி முருகேசன், தொகுதி நலனுக்காக எதையுமே செய்யவில்லை. அத்துடன், தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதனால் அவருடைய செயல்பாடு கிருஷ்ணசாமிக்குப் பெரும் சவாலாக மாறும்.

வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி!

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி?

தி.மு.க கூட்டணிக் கட்சியினரிடம் ஒருங்கிணைந்த குரல் எதிரொலித்த போதிலும், ஆங்காங்கே காங்கிரஸாரிடம் எதிர்ப்புக்குரல் கேட்கவே செய்கிறது. அதைச் சரிப்படுத்தும் பணியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் இறங்கியிருக்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் தி.மு.க வேட்பாளருக்கு பலம் அதிகம். நெல்லை மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளும் பலமாகவே கருதப்படுகிறது.

கிருஷ்ணசாமிக்கு கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., தே.மு.தி.க., பி.ஜே.பி ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்பு போதுமான அளவுக்கு இருக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் இருக்கும் பட்டியலின இளைஞர்களும், புதிய தமிழகம் தொண்டர்களும் கிராமங்களில் ஆரவாரத்துடன் களம் இறங்குவதைப் பிற சமுதாய மக்களைக் கொண்ட கூட்டணிக் கட்சியினர் எப்படிப் பார்ப்பார்கள், எந்த வகையில் இணைந்து செயல்படுவார்கள் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரையிலும், செலவு செய்வதில் மிகவும் கறார் பேர்வழி. கூட்டணிக் கட்சியினரே செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார் என்கிறார்கள். கூட்டணிக் கட்சியினரிடம் இதுசார்ந்த அதிருப்தி இப்போதே தெரிகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலும் செலவு செய்யப் பணம் கொடுக்க ஆளுங்கட்சி ஏற்பாடு செய்தால் மட்டுமே செலவு செய்யப்படுமே தவிர, அவராகவே சொந்தப் பணத்தைக் கொடுப்பது சிரமம் என்கிறார்கள்.

 டாக்டர்.கிருஷ்ணசாமி சார்பாக நம்மிடம் பேசிய நிர்வாகிகள், “தென்காசி தொகுதியில் ஏற்கெனவே கிடைத்த அனுபவங்கள், அதில் பெற்ற படிப்பினைகள் மூலமாக யுக்திகளைத் திட்டமிட்டுள்ளோம். கூட்டணிக் கட்சிகளின் பலம் காரணமாக இந்தமுறை டாக்டரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரசார யுக்தி இருக்கும். எங்கள் கட்சித் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வார்கள். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் எங்களுக்குப் பலமாக இருக்கும். கூட்டணி பலத்தின் மூலம் வெற்றியைக் கைப்பற்றுவோம்’’’ என்கிறார்கள் உற்சாகத்துடன்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

தென்காசி தொகுதியில், இரு தரப்பிலுமே பலமான கூட்டணி இருக்கிறது. அ.தி.மு.க வாக்குகளை இந்தமுறை அ.ம.மு.க கணிசமாகப் பிரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க-வுக்கு பலம் வாய்ந்த சட்டமன்றத் தொகுதிகளாகக் கருதப்படும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிகளில் பெரும்பான்மையான அ.தி.மு.க வாக்குகள் அ.ம.ம.க வேட்பாளருக்குச் செல்லும் நிலை உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கூட்டணி பலத்தால் தி.மு.க கோதாவில் முந்திக் கொண்டிருக்கிறது. வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கு டாக்டர்.கிருஷ்ணசாமி கடுமையாகப் போராட வேண்டும். 

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
ஓவியம்: பிரேம் டாவின்சி