Published:Updated:

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

தடதடக்கும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்…

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

தடதடக்கும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்…

Published:Updated:
வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!
வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

ரசியல் கட்சிகளில், வேட்பாளர் தேர்வில் பணம் புகுந்துவிளையாடுகிறது. ‘கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் எல்லாம் இனி தேவை இல்லை; ஓட்டு வாங்க பணமே பிரதானம்’ என்கிற அறம் தொலைத்த முடிவுக்குக் கட்சிகள் வந்துவிட்டனபோலும். கரன்ஸியை எங்கு, எப்படிக் கை மாற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. புதுச்சேரி மாநிலத்தில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலிலும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. “கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் இல்லாத தொழிலதிபரை வேட்பாளராக்கியிருக்கிறார்கள்” என்று கொதிக்கிறார்கள் புதுச்சேரி உடன்பிறப்புகள்!

புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அசோக் ஆனந்த், சொத்துக்குவிப்பு வழக்கில் பதவியை இழந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்தின் சகோதரியே அங்கு போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கூட்டணிக் கட்சியான தி.மு.க-வே அங்கு போட்டியிடும் என்று அறிவித்தார் முதல்வர் நாராயணசாமி. அதையடுத்து ‘தங்கம் நல்லெண்ணெய்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கடேசன் என்பவரை வேட்பாளராக அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இதுதான் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அறிவிப்பைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதிச் செயலாளர் சிவதாசன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கிளைக் கழகமாகத்தான் தி.மு.க செயல்படுகிறது. அனைத்துக்கும் பணம் புகுந்து விளையாடுகிறது. கட்சிக்காரனுக்கு சீட் கொடுக்காமல், பணத்துக்காக சீட் கொடுத்ததால்தான் 2011, 2016 தேர்தல்களில் டெபாசிட்டே போனது. இந்த முறையும் கட்சியிலேயே இல்லாத ஒருவருக்குத் தொகுதியை விற்றிருக்கிறார்கள்” என்றனர் ஆவேசமாக.

தொகுதிச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சிவதாசனிடம் பேசினோம். “22 ஆண்டுகளாகச் சொந்தப் பணத்தைப்போட்டு இந்தத் தொகுதியில் வீதி வீதியாகக் கட்சிப்பணி செய்துகொண்டிருக் கிறேன். 2011 தேர்தலில் எனக்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறிவிட்டு, கடைசிநேரத்தில் கழற்றி விட்டார்கள். 2016 தேர்தலில் எனக்கு வாய்ப்புக்கொடுக்க ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.பி சிவக்குமார். ‘அவ்வளவுபணம் என்னால் கொடுக்க முடியாது’ என்று கூறியதால், சம்பந்தமே இல்லாமல் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஜி.வீரராகு என்பவருக்கு மாநிலப் பொருளாளர் பதவியைக் கொடுத்து, அவரை இங்கு வேட்பாளராக்க முயற்சி செய்தார். அதுகுறித்து நான் ஸ்டாலினிடம் முறையிட்டதால், அவர் எஸ்.பி சிவக்குமாரை நேரில் அழைத்துக் கண்டித்ததுடன் அந்த முயற்சியையும் கைவிடச் சொல்லிவிட்டார். அதன் பின்பும் பணம் வாங்கிக்கொண்டு காமராஜ் நகர் தொகுதியைச் சேர்ந்த பெல்லாரி என்பவரை இங்கே நிறுத்தினார். டெபாசிட்டே கிடைக்கவில்லை.

இப்போது தட்டாஞ்சாவடிக்கு இடைத்தேர்தல் அறிவித்தவுடன் என்னை அழைத்த எஸ்.பி சிவக்குமார், ‘நான்கரை கோடி ரூபாய் தயார் செய்யுங்கள்; சீட் உங்களுக்குத்தான்’ என்றார். நான், ‘முடியாது, வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். மீண்டும் என்னை அழைத்தவர், ‘இரண்டு கோடி ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்’ என்றார். இரண்டு நாள்கள் கழித்து, ‘காங்கிரஸ் இங்கு போட்டியிடுகிறது’ என்றார். நானும் அமைதியாகிவிட்டேன்.

வேட்பாளர் தேர்வில் கைமாறிய கோடிகள்... கொதிக்கும் தி.மு.க தொண்டர்கள்!

ஆனால், இரண்டு கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, தொகுதிக்கும் கட்சிக்கும் தொடர்பில்லாத வெங்கடேசன் என்பவரை நிற்கவைக்கிறார் என்று தெரிந்ததும் கொதித்துப்போனேன். நிர்வாகிகள் கூட்டத்தில், பணத்துக்காக இப்படித் தொகுதியை விற்கலாமா... என்று எஸ்.பி சிவக்குமாரிடம் நேரடியாகவே கேட்டேன். அதற்கு அவர், ‘தலைமையிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார். உடனே தலைமைக் கழகத்தில் நான் பணம் கட்டச் சென்றபோது, ‘மூவர் குழு வேட்பாளரை இறுதி செய்துவிட்டது’ என்று கூறி விருப்பமனுவைக்கூட வாங்க மறுத்துவிட்டனர். உறுப்பினர் அட்டைகூடக் கொடுக்காமல் கட்சியில் ஒருவரைச் சேர்த்து வேட்பாளராக அறிவிக்கும் நடைமுறை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. இதெல்லாம் தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியுமா?” என்று கொதித்தார்.

வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.பி சிவக்குமாரிடம் பேசினோம். “இது பொய்யான குற்றச்சாட்டு. தேர்தலை எதிர்கொள்ளும் பலம் உள்ளவர்களுக்குத்தான் சீட் கொடுக்க முடியும். யாரை நிறுத்த வேண்டும் என்பதை மூவர் குழுதான் முடிவு செய்யும். அந்தத் தொகுதியில் போட்டியிட யாரும் இல்லை என்றால், மாற்றுத் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கலாம். அதன்படி வெங்கடேசனுக்கு சீட் கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

தமிழகத்தில் வாரிசுகளுக்கு சீட் கொடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் தி.மு.க, புதுச்சேரியில் பணத்துக்கு சீட் கொடுத்த விவகாரத்தில்  சிக்கியிருக்கிறது.

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism