Published:Updated:

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”
பிரீமியம் ஸ்டோரி
“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

இரா.முத்தரசன் நம்பிக்கை

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

இரா.முத்தரசன் நம்பிக்கை

Published:Updated:
“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”
பிரீமியம் ஸ்டோரி
“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”
“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் அறிவிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. தலைவர்களின் சூறாவளிப் பிரசாரங்கள் அனலைக் கிளப்புகின்றன. இத்தகைய சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களிடம் நீங்கள் முன்வைக்கும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன?’’

‘‘இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதாலும், எங்கள் கட்சி அகில இந்தியக் கட்சி என்பதாலும், இந்திய அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தித்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அதில், ‘தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்’ என்பது முக்கியமானது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், 31 சதவிகித வாக்குகளைத்தான் பி.ஜே.பி பெற்றது. மீதி 69 சதவிகித மக்கள் பி.ஜே.பி-க்கு எதிராகத்தான் வாக்களித்தனர். இருப்பினும், பி.ஜே.பி-யினால் ஆட்சியமைக்க முடிகிறதென்றால், அது எப்படி ஜனநாயகமாகும்? ஆகவே, இந்த தேர்தல் முறை மாற்றப்பட்டு  விகிதாச்சார முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் அடிப்படைக் கோரிக்கை.  இதுதவிர, நீதிமன்ற ஆணையின்படி நதிநீர் இணைப்பு, மதச்சார்பின்மைக் கொள்கை, மாநில சுயாட்சி ஆகியவற்றை அதன் விரிவான பொருளுடன் தெளிவுபடுத்தி, எங்கள் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்திருக்கிறோம். இதை மக்களுக்கும் உறுதிப்படுத்துவோம் என்கிற உடன்படிக்கையின் பேரில் அவர்களிடம் பிரசாரம் செய்வோம்.’’

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘ராகுல் காந்திதான் பிரதமர் ஆக வரவேண்டும்’ என்கிறார். கூட்டணியில் இருக்கும் உங்கள் தரப்பு என்ன நினைக்கிறது?’’

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்ததை யாரும் எதிர்க்கவில்லை. ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்பதை நாங்களும் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட மாதிரிதான். ஆனால், உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கலந்து பேசி ஒரு முடிவு செய்யலாம் என்று இருக்கிறோம். இதைத்தான் எங்கள் கட்சியின் தேசியச் செயலாளரும் கூறியிருக்கிறார்.’’

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘தேர்தலில்  பணம், சாதி ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து, அதை நோக்கித்  திராவிடக் கட்சிகள் வேகமாக நகர்கிறபோது, பொதுவுடைமைக் கட்சியான நீங்கள் எதன் அடிப்படையில் அவர்களுடன் ஒன்றிணைகிறீர்கள்?’’

‘‘எங்களைப் பொறுத்தவரை மோடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதுதான் அடிப்படை நோக்கம். ஆட்சியில் அவர்கள் மீண்டும் உட்காரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதை நோக்கியே எங்கள் பயணம் இருக்கிறது. ஆனால், இது எங்களால் மட்டுமே அல்லது இடதுசாரி இயக்கங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலாது. அதனால்தான் இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பற்றக் கொள்கைகளின்மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் ஆகியோருடன் இணைந்து பயணிக்கிறோம். சாதியும் பணமும் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவது இயல்புதான். ஆனால், இதன் அடிப்படையில்தான் தி.மு.க தேர்தலைச் சந்திக்கிறது என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க., பா.ம.க., பி.ஜே.பி ஆகிய மூன்றுக் கட்சிகளை வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். இவர்கள்தான் அரசியலை வியாபாரமாக்கி, அதில் பேரம் நடத்தி கூட்டணி அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்கப் பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறார்கள். தி.மு.க-வோ, மதச்சார்பற்றக் கொள்கையின்மீது உறுதியாக இருக்கிற கட்சி. எனவே தி.மு.க-வும் சரி... அதன் கூட்டணிக் கட்சிகளும் சரி... கொள்கைகளின் அடிப்படையிலேயே இணைந்திருக்கிறோம்.’’

‘‘சி.பி.எம்., சி.பி.ஐ ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மீண்டும் ஒரே கட்சியாக இணைந்தால், தமிழகத்தில் கம்யூனிஸ்ட்களின் பலம் அதிகரிக்குமல்லவா?’’

‘‘நாங்கள் எந்தக் காரணத்துக்காகப் பிரிந்தோமோ, அந்தக் காரணங்கள் வலுவிழந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென 1978-லேயே நாங்கள் கோரிக்கை வைத்துவிட்டோம். அவர்கள் தரப்பில் தயங்குகிறபோது அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? இந்த இரு கட்சிகளும் சேர்ந்து செயல்பட வேண்டுமென்பதுதான் எங்கள் விருப்பம்!’’

“பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க கூட்டணி!”

‘‘கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏன் கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகமுடிவதில்லை?’’

‘‘கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களின் பின்புலம் பெரும்பாலும் எளிமையானது. இந்த எளிமையை மக்களும் பாராட்டுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் கம்யூனிஸக் கொள்கைகளை ஆர்வமுடன் படிக்க முன்வருகிறார்கள். கம்யூனிஸத்தின் தேவை குறித்து சமூகவலைதளங்களில் உரையாடுகிறார்கள். அவர்கள் அதைக் கைவிட மாட்டார்கள். அவர்கள்தான் இனி கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னத்தி ஏர். இந்தத் தேர்தலில் நிச்சயம் அது பிரதிபலிக்கும் என்று நம்புகிறேன்!’’

‘‘தா.பாண்டியன் உடல்நிலை எப்படி இருக்கிறது, பிரசாரத்துக்கு வருவாரா?’’

‘‘இப்போது அவரது உடல்நிலை இருக்கிற சூழலில், அவரால் பிரசாரத்துக்கு வர இயலாது. ஆனால், அவரது தன்னம்பிக்கை வலுவானது. அது விரைவில் அவரை மீட்டுக்கொண்டு வரும் என்று நம்புகிறோம்!’’

- தமிழ்ப்பிரபா, படம்: ஜீவாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism