Published:Updated:

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே நாடாளுமன்றத் தேர்தலையொட்டித் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.  இந்தத் தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை இரண்டு சுவாரஸ்யங்கள். எதிரெதிர் முகாம்களில் இருக்கும் தி.மு.க, அ.தி.மு.க என்னும் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பல பொதுவான விஷயங்கள் இருக்கின்றன. இன்னொரு சுவாரஸ்யம், இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும், எதிரெதிர் முகாம்களில் இருக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இரண்டுக்கும் பல விஷயங்களில் ஒத்த கருத்துகள் இருக்கின்றன.

தி.மு.க தேர்தல் அறிக்கையை எடுத்துக்கொள்வோம். அவர்கள் நீண்டகாலமாகப் பேசும் விஷயங்களே பெரும்பாலும் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. தமிழை ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்குவது, கச்சத்தீவை மீட்பது, ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது, நீட் தேர்வு ரத்து, கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவருவது, சேதுசமுத்திரத்திட்டம், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு, ஏழு தமிழர்கள் விடுதலை, தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது ஆகியவை தி.மு.க பலகாலமாகப் பேசிவரும் அரசியல் கோரிக்கைகளே.

தி.மு.க-வைப் பொறுத்தவரை பொதுவெளியில் முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தொடர்ந்து உற்றுக்கவனிக்கிறது. ‘தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட திராவிடக் கட்சிகள் இடைநிலைச் சாதிகளின் கட்சிகளாகவே மாறிவிட்டன. அங்கு பட்டியலின மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை’ என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தி.மு.க-வில் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கமும் நேரடியாக இல்லையென்றாலும் வட்டாரம் சார்ந்த பெரும்பான்மைச் சாதிகளின் ஆதிக்கம் இருக்கிறது என்பது உண்மைதான். இந்த விமர்சனங்களைக் கவனித்த கருணாநிதி, ‘மாவட்டத் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும் ஒருவர் பெண்ணாகவும் இருக்கவேண்டும்’ என்ற கட்சி விதியை உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாகவே தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ள ‘டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வித்திட்டம்’, ‘பெரியார் - ஜோதிபா பூலே சமத்துவபுரம்’ அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவது, 7 பேர் விடுதலை, கல்விக்கடன் ரத்து, வருமான வரி உச்ச வரம்பை எட்டு லட்சமாக ஆக்குவது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது என்று பல விஷயங்கள், தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இருக்கின்றன.

   ‘அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்ட’த்தை ஏற்படுத்தி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்கிறது அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை. ‘இலவசத் திட்டங்கள்’ என்று எள்ளிநகையாடப்படும் பல மக்கள்நலத் திட்டங்களுக்கு சமூகப்பயன் இருக்கிறது. ஏழை மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துவரும் சத்துணவுத்திட்டம், பெண்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், சமையல் எரிவாயு ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் மாதம் 1,500 ரூபாய் கொடுப்பது என்பதன் பின்னால் எந்த சமூகநோக்கமோ சமூகப்பயனோ இருப்பதாகத் தெரியவில்லை. மாதம் 1,500 ரூபாய் கொடுத்தால் வறுமை ஒழிந்துவிடுமா என்றும் தெரியவில்லை.  ஏற்கெனவே ‘வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய்’ என்று அறிவித்துவிட்டு, சென்னை அபார்ட்மென்டில் இருப்பவர்களுக்கும் 2,000 ரூபாய் நிதி வழங்கக் கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. இதில் ‘அம்மா தேசிய வறுமை ஒழிப்புத்திட்ட’த்தில் 1,500 ரூபாய் என்பது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. அம்மாவின் பெயரால் ‘தேசிய வறுமை ஒழிப்பு’த் திட்டம் என்றால்,  எம்.ஜி.ஆருக்கு ‘எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்’ அறிவிப்பு.

அதேபோல் ‘நீர் மேலாண்மைத் திட்டங்களை அமைக்க மத்திய அரசு நிதியுதவி பெறப்படும்’ என்கிறது அ.தி.மு.க தேர்தல் அறிக்கை. 2015-ல் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி உடைந்தது. ஆனால் இப்போது செம்பரம்பாக்கம் ஏரி உட்பட சென்னையின் நீர்நிலைகள் வறண்டுகிடக்கின்றன. சென்னை உட்பட தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சிப்பகுதிகளாக அறிவிக்கப்ப ட்டிருக்கின்றன. நிரம்பிவழிந்த செம்பரம்பாக்கம் நீரையே காப்பாற்றாத அ.தி.மு.க அரசு என்ன நீர் மேலாண்மை செய்யப்போகிறது? மதகு உடைந்தால் ‘மனிதர்களுக்குக் காய்ச்சல் வருவதைப்போல்தான் மதகுக்கும் காய்ச்சல் வரும்’ என்று சொல்லும் விஞ்ஞானிகள் நிரம்பிய தமிழக அரசு, எந்த நீர் மேலாண்மையையும் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஆச்சர்யமளிக்கும் ஓர் அறிவிப்பு, ‘மாநில அரசைக் கலைக்கும் 356-வது பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்பது. 356 பிரிவை அதிகம் பயன்படுத்திய கட்சி காங்கிரஸ். 356-வது பிரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.க. அதனால் ‘356-வது பிரிவை ரத்து செய்யவேண்டும்’ என்று பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறது

தி.மு.க. ஆனால் அ.தி.மு.கவைப் பொறுத்தவரை அதன் கொள்கையே, தி.மு.க ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் 356-வது பிரிவைப் பயன்படுத்தித் தி.மு.க அரசைக் கலைக்க மத்திய அரசை வலியுறுத்துவதே. ஜனநாயகத்துக்கு ரெண்டு சுழி ன-வா, மூணு சுழி ண-வா என்று தெரியாத அளவுக்கு ஜனநாயக உணர்வு கொண்ட ஜெயலலிதா, தி.மு.க அரசைக் கலைக்கவில்லை என்பதாலேயே வாஜ்பாய் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திடீரெனத் திரும்பப்பெற்றார். ஆனால் இப்போதோ அதே அ.தி.மு.க-விலிருந்து 356 பிரிவுக்கு எதிரான குரல். நிச்சயம் இது மாநில உரிமைக்கான போர்க்குரல் அல்ல. எடப்பாடி, பன்னீர்செல்வம் இரட்டையரின் தலைக்குமேல் தொங்கிக்கொண்டி ருக்கும் கத்திக்கு எதிரான கதறல்தான் இது.

‘பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்துவோம்’, ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்’ என்றெல்லாம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை சொல்கிறது. இப்போதும் தமிழக அரசு அதை வலியுறுத்திக்கொண்டுதானே இருக்கிறது? ‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தும் தமிழக சட்டசபைத் தீர்மானம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை’ என்று சொன்னார் நிர்மலா சீதாராமன். ஏழு தமிழர் விடுதலைக்கும் இதே நிலைதான்.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல, தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் ‘சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகள் கூடாது’, ‘மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை’, ‘நீட் தேர்வு ரத்து’, ‘ஏழு தமிழர் விடுதலை’ என்ற அறிவிப்புகள் எல்லாம் எந்தளவுக்குச் சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், முன்பே சொன்னதுபோல் தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, இலங்கைப் பிரச்னை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான வளர்ச்சிக்கொள்கை ஆகியவற்றில் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் ஒரே நிலைப்பாடுதான். எனவே அ.தி.மு.க, தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் உள்ள அறிவிப்புகள் எந்தளவுக்குச் சாத்தியம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறி. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கே இந்த நிலைதான் என்றால் பா.ம.க தொடங்கி மக்கள்நீதி மய்யம் வரை கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளுக்கு என்ன மதிப்பு இருக்கப்போகிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லவேண்டும். இட ஒதுக்கீடு, சமூகநீதி, மாநில சுயாட்சி, மொழித் திணிப்பு எதிர்ப்பு என்றெல்லாம் திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் விஷயங்களின் சாராம்சம், ‘அனைவருக்கும் சமவாய்ப்பு; அதிகாரத்தில் சமபங்கு’ என்பதுதான். ஆனால், அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இந்தச் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வில்லை என்பது வருத்தத்துக்குரியது. 20 தி.மு.க வேட்பாளர்களில் இரண்டே இரண்டு பெண் வேட்பாளர்கள். 20 அ.தி.மு.க வேட்பாளர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளர். இரண்டு கட்சிகளிலும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட இல்லை. வழக்கம்போல பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தனித்தொகுதிகளில் மட்டும்தான் வாய்ப்பு. வேட்பாளர் தேர்வில் சமூகநீதியைக் கடைப்பிடிக்காத தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் ‘தனியார் துறையில் இட ஒதுக்கீடு’, ‘பெரியார், அம்பேத்கர் பெயரில் திட்டங்கள்’ என்றெல்லாம் அறிவிப்பது விந்தையானது.

இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் ‘வலியுறுத்தப்படும்’, ‘வலியுறுத்தப்படும்’ என்றுதான் இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி இரண்டு முகாம்களில் இருப்பவர்களும் மாறிமாறிக் கிண்டலடித்துக்கொள்கிறார்கள். ஆனால், யதார்த்தம் என்ன? ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ ஒரு மாநிலக்கட்சி எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டாலும் மத்தியில் அதன் அதிகாரத்துக்கு எல்லை உண்டுதானே! சென்றமுறை 37 எம்.பி-க்களைக் கொண்டிருந்த ஜெயலலிதாவால் தமிழகத்துக்குத் தேவையான அத்தனை உரிமைகளையும் மத்திய அரசிடமிருந்து பெற முடிந்ததா? தமிழகத்தில் ஒரே ஒரு எம்.பி-யைக் கொண்ட பா.ஜ.க-தான் தமிழகத்துக்கும் சேர்த்து இந்திய ஆளுங்கட்சி. தமிழகத்தால் நிராகரிக்கப்பட்ட மோடிதான், தமிழகத்துக்கும் சேர்த்து இந்தியப் பிரதமர். அப்படியானால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? 80 எம்.பி-க்கள் கொண்ட உத்தரப்பிரதேசமும் 40 எம்.பி-க்கள் கொண்ட தமிழகமும் ஒரேமாதிரியாகவா நடத்தப்படுகிறது?

அதிலும் தேசியக்கட்சிகள் வெற்றிபெற, ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ள கர்நாடகத்தை அணுகும் முறையும், தேசியக்கட்சிகளுக்கு வேரே இல்லாத தமிழகத்தை அணுகும் முறையும் ஒன்றாகவா இருக்கிறது? கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா தேசியக் கட்சிகளும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பதற்குக் காரணம் இதுதானே! இப்படிப்பட்ட சூழலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் ‘வலியுறுத்தப்படும்’, ‘வலியுறுத்தப்படும்’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லமுடியும்?

வேண்டாம் கிண்டல்... வெட்கப்படுவோம்!

அடிப்படையில் நம் தேர்தல் முறையிலேயே கோளாறு உள்ளது. இங்கே இருப்பது பெரும்பான்மை ஜனநாயகமே தவிர, பிரதிநிதித்துவ ஜனநாயகம் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இதைப் பெரும்பான்மை ஜனநாயகம் என்றுகூடச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலையே எடுத்துக்கொள்வோம். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான வாக்கு வித்தியாசம் 1.1 சதவிகிதம்தான். ஆனால் அந்த சதவிகிதத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், ‘ஜெயலலிதா மீண்டும் வரக்கூடாது’ என்று வாக்களித்தவர்கள். மக்கள்நலக்கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், ‘தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே ஆட்சிக்கு வரக்கூடாது’ என்று வாக்களித்தவர்கள். ஆக, ஜெயலலிதா ஆளவேண்டும் என்று வாக்களித்தவர்களைக்கூட, ஆளக்கூடாது என்று வாக்களித்தவர்கள்தாம் அதிகம். ஆனாலும் ஜெயலலிதாதான் முதல்வர் ஆனார். இதுதான் இப்போதைய தேர்தல் முறை. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படாமல் இந்த நிலையை மாற்றமுடியாது.

‘வலியுறுத்துவோம்’ என்பதைக் கிண்டல் செய்வதைவிட, நாம் அதற்கு வெட்கப்படத்தான் வேண்டும். ஜனநாயகம் அல்லாத ஒன்றை ஜனநாயகம் என்று புரிந்துவைத்திருப்பதற்கும் ‘எல்லா மாநிலங்களுக்கும், எல்லா தேசிய இனங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் கூட்டாட்சித் தத்துவம்’ என்பதை நடைமுறையில் கடைப்பிடிக்காத அரசுமுறையை வைத்திருப்பதற்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

- சுகுணா திவாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism