Published:Updated:

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?
பிரீமியம் ஸ்டோரி
எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

Published:Updated:
எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?
பிரீமியம் ஸ்டோரி
எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?
எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

‘`அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை’’ - அரசியல் ஆத்திசூடியில் பொறிக்கப்பட்ட பொன் வாசகங்கள் இவை. தேர்தலில் எதிரி கட்சிகளோடு கூட்டணி போடுகிறவர்கள்கூட தமிழகத்தில் பி.ஜே.பி-யைத் தீண்டத்தகாத கட்சியாகவே வைத்திருந்தார்கள். ஒதுக்கப்பட்டிருந்த பி.ஜே.பி-க்கு அரசியல் ஆக்‌ஸிஜன் கொடுத்தவர் ஜெயலலிதா.

1984 நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் இடத்திலும் 1989 தேர்தலில் மூன்று இடங்களிலும், 1991 தேர்தலில் 15 இடங்களிலும், 1996 நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களிலும் போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட தமிழகத்தில் பி.ஜே.பி வெற்றிபெறவில்லை. இதே நிலைதான் சட்டசபைத் தேர்தல்களிலும். தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில்தான் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது பி.ஜே.பி. முதன்முறையாக 1991 சட்டசபைத் தேர்தலில் ஓர் இடத்தில் வென்று சட்டசபைக்குள் நுழைந்தது. பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து வேலாயுதம் எம்.எல்.ஏ ஆனார். அந்தத் தேர்தலில்தான் முதன்முறையாக பி.ஜே.பி வாக்கு ஒரு சதவிகிதத்தைக் கடந்தது.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி ஏற்பட்டபின்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு அடித்தளம் ஏற்பட்டது. ஐந்து தொகுதிகளை பி.ஜே.பி-க்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. மூன்று தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவிகிதம் 6.86 ஆக உயர்ந்தது.

அ.தி.மு.க-வுடான கூட்டணி 13 மாதங்களில் முறிய... மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அறிவாலயத்துக்குப் படையெடுத்தது பி.ஜே.பி. அங்கே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட, நான்கு இடங்களில் வென்றது. இதன்பிறகு திருநாவுக்கரசர் தலைமையில் செயல்பட்டு வந்த ‘எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.’ பி.ஜே.பி-யில் இணைந்த நேரத்தில் கட்சி கொஞ்சம் பலமடைந்தது.

அடுத்து வந்த 2001 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தொடர்ந்தது பி.ஜே.பி. 21 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வென்றது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டு, தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க., பி.ஜே.பி போட்டியிட்ட 21 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அது பி.ஜே.பி-க்கு வசதியாகிப்போனது.

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த தி.மு.க-வும் பா.ம.க-வும் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணியிலிருந்து கழன்று காங்கிரஸ் அணியில் இணைந்தன. பொடா சட்டம் அமல், காவிரிப் பிரச்னை, தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்காதது போன்ற காரணங்களை அடுக்கி அந்தக் கட்சிகள் விலகின.  போயஸ் கார்டனுக்குத் தாவிய பி.ஜே.பி-க்கு ஏழு தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. வெளிப்படையாக ரஜினி ஆதரவு அளித்தும் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. கூட்டணி பலத்தால் 1998 மற்றும் 1999 ஆகிய இரண்டு தேர்தலில் தமிழகத்தில் கால் ஊன்றிய பி.ஜே.பி 2004 தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.

அதன்பிறகு பி.ஜே.பி-யைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார் ஜெயலலிதா. 2006 சட்டசபைத் தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. வாக்கு சதவிகிதம் 2.02 ஆகச் சரிந்தது.

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஜனதா, பாரதிய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் அணி அமைத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பி.ஜே.பி. தனி ஈழம், முள்ளிவாய்க்கால் போர் தேர்தலில் பிரதானமாக எதிரொலித்தது. ஆனாலும் தேர்தலில் அதிக இடங்களை தி.மு.க கூட்டணி வென்றது. பி.ஜே.பி மண்ணைக் கவ்வியது.

ஐக்கிய ஜனதா தளம், ஜனதா எனத் தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத கட்சிகளுடன் இணைந்து 2011 சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் பி.ஜே.பி தனி அணியாகப் போட்டியிட்டது. பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர். எப்படியாவது இரண்டு இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் இலக்காக இருந்தது. ஆனால், ஒரு தொகுதியில்கூட பி.ஜே.பி வெற்றி பெறவில்லை. 204 தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி 198 இடங்களில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது.

மோடி அலை வீசிய 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக விஜயகாந்தின் வீட்டில் காத்துக் கிடந்தது பா.ஜ.க. நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக தே.மு.தி.க தலைமையில் பா.ம.க., பி.ஜே.பி. ம.தி.மு.க., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவானது. கூட்டணிக்கு பலம் கூட்ட ரஜினி, விஜய்யை மோடி சந்தித்தார். ‘`சிறந்த நிர்வாகியான மோடிக்கு வாக்களியுங்கள்’’ என பி.ஜே.பி-யினர் பிரசாரம் செய்தனர். ரஜினியும் ‘`மோடி சிறந்த நிர்வாகி’’ என்றார். ஜெயலலிதாவோ, ‘`சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான்’’ எனப் பதிலடி கொடுத்தார். 

இன்னொரு பக்கம் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. விஜயகாந்தும் ராமதாஸும் சேர்ந்து பிரசாரம் செய்யவே இல்லை.  ‘`தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு 8 சதவிகித வாக்குகள் இருந்தன. இது 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது’’ எனத் தேர்தலில் சொன்னார் பொன் ராதாகிருஷ்ணன். அப்படி உயர்ந்திருந்தால் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் அந்தக் கூட்டணி ஜெயித்திருக்கும். பொன் ராதாகிருஷ்ணனும் அன்புமணியும் மட்டுமே ஜெயித்தார்கள்.
2016 சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-யை எந்தக் கூட்டணியும் சீண்டவில்லை. அதனால், இந்திய ஜனநாயகக் கட்சி,  இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போன்ற லெட்டர்பேடு கட்சிகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 188 தொகுதிகளில் போட்டியிட்ட பி.ஜே.பி ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை. 180 தொகுதிகளிலும் `வெற்றிகரமாக’ டெபாசிட்டைப் பறிகொடுத்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பி.ஜே.பி-யின் பிடிக்குள் போய்விட்டது அ.தி.மு.க. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு பி.ஜே.பி அணி அமைத்திருக்கிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-க்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.84. அதற்கு முந்தைய 2011 சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வாக்கு சதவிகிதம் 2.22. அதாவது 0.62 சதவிகிதம்தான் பி.ஜே.பி-யின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறது. அதற்காகத்தான் என்னவோ ஐந்து தொகுதிகளை தாராளமாக பி.ஜே.பி-க்கு ஒதுக்கியிருக்கிறது அ.தி.மு.க. நோட்டாவோடு போட்டி போடும் கட்சிக்கு இத்தனை தொகுதிகளை ஒதுக்கியதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் ஊரறிந்தது.

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் இணைவது தொடர்பாக பா.ம.க இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. ‘`ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி பற்றிப் பேசி மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கிறார்கள். மக்களை ஏமாளிகளாக எண்ணி இதுபோன்ற அரசியல் நாடகம் நடத்துகின்றனர். தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என அப்போது கர்ஜித்தார் இல.கணேசன். பத்தாண்டுகள் கழித்தும் அதே காட்சிகள். அன்றைக்குப் பா.ம.க. இன்றைக்கு தே.மு.தி.க. இந்த இரண்டு கட்சிகளும் இப்போது பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ‘அரசியல் நாடகம்’ நடத்திக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.

இன்னொரு தேசியக் கட்சியான, தமிழகத்தை முன்னொரு காலம் ஆண்ட காங்கிரஸின் நிலையும் பரிதாபம்தான். 1967 வரையில் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காங்கிரஸ், ‘காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ எனத் தேர்தலுக்குத் தேர்தல் சொல்லிக்கொண்டிருக்கிறது. பி.ஜே.பி-யைப் போலவே திராவிடக் கட்சிகளின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்களில் திராவிடக் கட்சிகள் காங்கிரஸுக்கு இடங்களை ஒதுக்கும். நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி திராவிடக் கட்சிகளுக்கு சீட் தரும். இந்த நிலையைக்கூட இழந்து, திராவிடக் கட்சிகளிடம் கையேந்தும் நிலைக்கு வந்து நிற்கிறது நூற்றாண்டைத் தாண்டிய காங்கிரஸ்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க பிரிந்தபோது நடைபெற்ற 1989 சட்டசபைத் தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கணக்கு போட்டுத் தனியாகப் போட்டியிட்டது காங்கிரஸ். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மூப்பனார் தலைவராக இருந்தார். ராஜீவ் காந்தி பல முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தார். ஆனால், 26 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்துகூட காங்கிரஸுக்குக் கிடைக்காமல் ஜெயலலிதாவுக்குப் போனது. 

அ.தி.மு.க இரண்டாக இணைந்தபிறகு நடந்த 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ். 28 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்றது. 1991-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து, 66 சட்டசபைத் தொகுதிகளிலும் 28 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது காங்கிரஸ். 60 எம்.எல்.ஏ-க்களையும் 28 எம்.பி-க்களையும் கைப்பற்றியது.

1996-ல் காங்கிரஸ் உடைந்து தமிழ்மாநில காங்கிரஸ் உருவானது. குமரி அனந்தன் தலைமையிலான தமிழக காங்கிரஸ் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர்த் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க த.மா.கா-வோடும்;  அ.தி.மு.க பி.ஜே.பி-யோடும் கூட்டணி சேர்ந்ததால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ், 35 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட்டைப் பறிகொடுத்தது.

வாஜ்பாய் ஆட்சியைக் காங்கிரஸுடன் சேர்ந்து கவிழ்த்ததால் அ.தி.மு.க-வும் காங்கிரஸும் இயல்பாகவே 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அணி அமைத்தன. 11 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வென்றது காங்கிரஸ்.

2001 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா, மூப்பனாரின் த.மா.கா-வோடு கூட்டு சேர்ந்தார். காங்கிரஸ் கட்சிக்கும் சேர்ந்து ஜெயலலிதாவிடம் 46 சீட்டு கேட்டு வாங்கி 14 இடங்களைக் காங்கிரஸுக்குக் கொடுத்தார் மூப்பனார். த.மா.கா 23 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் மிகக் குறைந்த இடங்களில் வென்றது இந்தத் தேர்தலில்தான்.

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

அடுத்து வந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸும் த.மா.கா-வும் இணைந்திருந்தன. சோனியா, 2004 எம்.பி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்தார். 1980 தேர்தலுக்குப் பிறகு தி.மு.க-வும் காங்கிரஸும் எதிரெதிர் திசையில் இருந்தன. 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க-வும் காங்கிரஸும் கைகுலுக்கின. ‘நேருவின் மகளே வருக. நிலையான ஆட்சி தருக’ என்று இந்திராவுடன் கூட்டணி அமைத்தபோது சொன்ன கருணாநிதி, இப்போது ‘இந்திராவின் மருமகளே வருக. இந்தியாவின் திருமகளே வெல்க’ என்றழைத்தார். 40 தொகுதிகளிலும் வெற்றியைப் பறித்தது தி.மு.க கூட்டணி. போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் வென்றது காங்கிரஸ்.

2006 சட்டசபைத் தேர்தலிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. 48 தொகுதிகளைக் காங்கிரஸுக்கு வாரி வழங்கினார் கருணாநிதி. 34 இடங்களில் வென்றது காங்கிரஸ். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க 96 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. அறுதிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. காங்கிரஸ் தயவில்தான் ஐந்தாண்டுகளைத் தி.மு.க அரசு கடத்தியது. மத்தியில் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிறைய மந்திரிகளை வாங்கிக் கொண்டவர்கள், மாநிலத்தில் தி.மு.க அரசைக் காத்த காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு மந்திரியும் தராமல் பட்டை நாமம் சாத்தினர். 1967-ல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பைக்கூடத் தவறவிட்டது காங்கிரஸ். காரணம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்.

அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போர் முக்கிய பிரச்னையாகப் பேசப்பட்டது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இலங்கையில் போர் நிறுத்தம் பேசிக்கொண்டே இலங்கைக்குத் தேவையான உதவிகளை மறைமுகமாகச் செய்து கொண்டிருந்தது காங்கிரஸ். ஆனால், தேர்தல் பிரசாரத்தில், ‘`போர் நிறுத்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. இது மத்திய அரசின் தீவிர முயற்சிக்குக் கிடைத்த வெற்றி’’ என அன்றைய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் காமெடி செய்து கொண்டிருந்தார்.

‘`பிரபாகரனும் அவருடைய தோழர்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைய வேண்டும், அரசியல் தீர்வுகாண, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்’’ என்றும் சொன்னார். போர் முடிவுக்கு வந்தபோது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றுக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார். காங்கிரஸ் போட்டியிட்ட 16 தொகுதிகளில் 9 இடங்களில் வென்றது. ப.சிதம்பரம் கடும் இழுபறிக்குப் பிறகு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

எந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்?

2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 63 தொகுதிகளை அழிச்சாட்டியம் செய்து வாங்கியது காங்கிரஸ். 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டிவிக்குத் தொடர்பு இருந்தாகக் கூறி அறிவாலயத்தின் மாடியில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் விசாரணை நடத்திக்கொண்டிருந்தது சி.பி.ஐ. கீழே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடைசியில் காங்கிரஸிடம் சரணடைந்தது தி.மு.க. காங்கிரஸுக்கு 63 சீட்டுகளைக் கொடுத்த கருணாநிதி, ‘63 நாயன்மார்கள்’ என்று வர்ணித்தார். ஆனால், வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வெறும் ஐவர்தான்.

அடுத்து வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை யாருமே சீண்டவில்லை. ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்று சொல்லி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார் கருணாநிதி. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. ப.சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள்கூட தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார்கள். ‘`காங்கிரஸ் கட்சி அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது’’ என்று சொன்னார் கருணாநிதி. இடையிலேயே அந்தக் கூடா நட்போடு கூட்டணி வைத்து 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க. 2016 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 8 இடங்களில் வென்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஒதுக்கிய ஸ்டாலின், ‘`ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்’’ என இப்போது முழங்குகிறார்.

ஒருபுறம் ‘கூடாநட்பு’ கூட்டணி, இன்னொருபுறம் நிர்பந்தக் கூட்டணி. காங்கிரஸ், பா.ஜ.க என்னும் இந்தக் குதிரைச்சவாரிகளில் எந்தக் குதிரை முந்தப்போகிறது என்பதை மே மாதத் தேர்தல் முடிவு சொல்லும்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி,
ஓவியம்: ஹாசிப்கான்,
படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism