Published:Updated:

மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

க்கள் திரளை இரண்டாகப் பிரித்து, நடுவிலே அமைக்கப்பட்டிருக்கிறது நடைமேடை. அதில் ‘நாயகன்’ என்ட்ரி கொடுக்க, கரவொலி காதைக் கிழிக்கிறது. லேசாகப் பரவும் இருளைத் துடைத்தெடுப்பது போல, டார்ச் லைட் ஒளி, அங்குமிங்குமாக அலைபாய்கிறது. அரசியல்பேசும் ஒரு தமிழ்ச் சினிமாவுக்கான படப்பிடிப்புத் தளம் போலிருந்தது அந்தச் சூழல். ஆனால், அது ஓர் அரசியல்மேடை!

கோவை கொடிசியா மைதானத்தில் மார்ச் 24-ம் தேதியன்று, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஸ்ரீப்ரியா, கோவை சரளா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணியில் உள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் பேசி முடித்தபின், மைக் பிடித்தார்  கமல்ஹாசன்.

சில தேதிகளைக் குறிப்பிட்டுப் பேச ஆரம்பித் தவர், ‘‘2016 நவம்பர் 8-ம் தேதி ‘பண மதிப்பிழப்பு’ என்கிற ஒற்றை வார்த்தையில், இந்தியப் பொருளா தாரத்தின் முதுகெலும்பை உடைத்தார்கள்’’ என்று மோடிமீதான தனது எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்து உரையைத் தொடங்கினார்.

மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

2017 ஜனவரி 23 அன்று ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முடக்கிய காவல்துறையின் தாக்குதல்,  2017 பிப்ரவரி 5-ல் நடந்த கூவத்தூர் கூத்துகள்,  2017 செப்டம்பர் 5-ல் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை, 2017 நவம்பர் 25-ல், கோவையில் அ.தி.மு.க–வினர் வைத்த கட்–அவுட்டால் ரகுநாத் என்கிற இளைஞரின் உயிர் பறிக்கப்பட்டது, 2018 மே 22 அன்று, ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடியில் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றது என தமிழகத்தையும், தேசத்தையும் உலுக்கிய நிகழ்வுகளைப் பற்றிக் கமல் பேசப்பேச, பின்னால் இருந்த பிரமாண்டத் திரையில், அந்த நிகழ்வுகளின் காட்சிகள் ஒளிபரப்பாகின.

“இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம்தான், மக்கள் நீதி மய்யத்துக்குத் தரப்பட்டுள்ள டார்ச் லைட் சின்னத்துக்கான முதல் பேட்டரி. ‘நீட்’ தேர்வுக்கு எதிராகத் தன்னுயிரைத் தந்த அனிதாதான் அதில் போடப்பட்ட ஸ்விட்ச்” என்று கமல் பேசியபோது, கரவொலியின் ‘டெசிபல்’ எகிறியது. “சட்டசபையைச் ‘சட்டை சபை’யாக்கியவர்கள், ஈழத்தில் தமிழன் அழிஞ்சா பரவாயில்லைனு அனுமதிச்சு வேடிக்கைப் பார்த்தவங்க... மறுபடியும் ஒரே கூட்டணியில் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறாங்க. ஆனால், அவங்களுடையத் தேர்தல் அறிக்கையில், ஏழு தமிழர்களுடைய விடுதலையைப்பற்றிப் பேசுறாங்க’’ என்று தி.மு.க, காங்கிரஸை ஒருசேரத் திட்டினார். 

“மதுரையில் கவுன்சிலர் லீலாவதியைக் கொன்றவர்களுடன்தான், தேர்தலுக்காகக் கை கோத்திருக்கிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் தாக்கத் தவறவில்லை கமல். ‘‘திராவிடக் கட்சியினர் திருடர்கள், அயோக்கியர்கள், பாருள்ளவரை அவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்று சொன்னவர்கள் ஓடிப்போய் மாம்பழத்தைக் கையில் கொடுத்து விட்டார்கள்’’ என்று பா.ம.க மீதும் பாய்ந்தார் கமல். ‘‘நடிகன் மேல உங்களுக்கு என்ன கோபம்? ஒரு நடிகரிடம் தோற்றவர்கள்தானே நீங்கள். பலவருடங்கள் வனவாசத்துக்கு  உங்களை அனுப்பி வைத்ததே ஒரு நடிகர்தானே?’’ என்று எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டு தி.மு.க-வை மீண்டும் தாக்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி, எடப்பாடி, ஸ்டாலின், ராமதாஸ்... வரிசையாக வறுத்தெடுத்த கமல்!

“முகிலன் எங்கே? 13 பேரைச் சுட்டவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தீங்க? 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், மூடுவதாகச் சொன்ன ஐந்தாயிரம் மதுக்கடைகள் என்ன ஆச்சு? உங்க அமைச்சர் யாரோ ஒரு பொண்ணை...’’ என்று சொல்லி  இடைவெளிவிட்டதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. பொள்ளாச்சி விவகாரத்தை நினைவூட்டியவர், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணோட பெயரை எஸ்.பி, வாய் தவறிச் சொல்றாரு... தலைமைச்செயலாளர் முழுவிவரத்தையும் நெட்ல போடுறாரு... ஆனால், முதலமைச்சர்?’’ என்று நிறுத்தி, வாய்பொத்தி நடித்தும் காட்டினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்ற சமூகத்துக்கு எதிரான நிகழ்வுகளை நினைவில் வைத்து ரெளத்திரம் பழகச்சொன்ன கமல், கடைசியாகக் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். சாலையோரம் மரங்கள் வளர்ப்பது, தண்ணீர் பிரச்னைக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு, ஏரி, குளங்கள் சீரமைப்பு, விவசாயத்தில் ஜப்பான் தொழில்நுட்பம் என்று பசுமை மயமாக இருந்தது அறிக்கை.

‘‘மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வென்றவர்கள், தவறு செய்தால், அவர்களின் ராஜினாமா கடிதம் உங்களைத் தேடிவரும். வெற்றி பெற்றதுமே அவர்கள் போடும் முதல் கையெழுத்து அந்த ராஜினாமா  உறுதிமொழிக்குத்தான்’’ என்று சொல்லி அதிரடி கிளப்பிய கமல், வேட்பாளர் பட்டியலில், தனது பெயர் இல்லை என்பதைச் சொல்லி, ‘‘பல்லக்கில் ஏறி அமர்வதைவிட பல்லக்கைத் தூக்கிச்சுமப்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்” என்று முடித்தார்.

மொத்தத்தில் எந்தக் கட்சியின் பின்புலமும் எனக்கில்லை என்பதை வெளிப்படுத்த, எல்லாக் கட்சியினரையும் ஏகத்துக்கும் எகிறி அடித்திருக்கிறார் கமல்ஹாசன்!

- எம்.புண்ணியமூர்த்தி
படம்: தி.விஜய்