Published:Updated:

“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”

“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”

சங்கரய்யாவும் நல்லகண்ணுவும் வெளியிட்ட பாடல்...

“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ‘ஜனங்க ஜாக்கிரதை’ என்ற தலைப்பில் தேர்தல் பாடலைத் தயாரித்திருக்கிறார். இதனை 80 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, தியாகத் தழும்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் இரு பெரும் ஆளுமைகளான சங்கரய்யா, நல்லகண்ணு ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள். பாடல் வெளியீட்டு நிகழ்வில் அந்த மூத்த ஆளுமைகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்வான தருணத்தைக் கண்முன் காணும் பாக்கியம் கிடைத்தது. அதன் லைவ் ரிலே இதோ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான என்.சங்கரய்யா, குரோம்பேட்டையில் உள்ள தன் வீட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான ஆர்.நல்லகண்ணுவுக்காகக் காத்திருக்கிறார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், கவிஞர் யுகபாரதி, உதவி இயக்குநர் பிரம்மா ஆகியோருடன் சங்கரய்யாவின் வீட்டுக்கு நல்லகண்ணு வருகிறார். தள்ளாத வயதிலும் நல்லகண்ணுவைப் பார்த்தவுடன் பரவசம் பொங்க அவரது கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் சங்கரய்யா. அவரிடம் கரு.பழனியப்பன், ‘‘இந்தத் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதற்காக, ‘ஜனங்க ஜாக்கிரதை’ என்ற பாடலைத் தயாரித்துள்ளோம்” என்று சொல்லியவாறு, லேப்டாப்பை ஆன் செய்து, பாடலை ஓடவிடுகிறார்...

‘‘தேர்தல் வருது... தேர்தல் வருது ஜனங்க ஜாக்கிரதை
இந்தத் தேர்தலிலும் தெரிஞ்சுபோகும் பலரு யோக்யத
ஓட்டுக்கு காசு தந்தா உதைச்சி அவனை தொரத்துடா
உரிமைய வாங்க வந்தா ஊரக்கூட்டி கொளுத்துடா
ஒட்டுமொத்த நெலம மாற ஓட்டுதானே ஆயுதம்
அத எண்ணி நாம வாக்களிச்சா வாழும் ஜனநாயகம்...”

என்று நீள்கிறது அந்தப் பாட்டு.

டி.இமான் இசையில் யுகபாரதியின் பாடல் ஒலிக்க... பின்னணியில் மெரினா போராட்டம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நீட் எதிர்ப்புப் போராட்டம், அனிதா மரணம், ‘கோ பேக் மோடி’ போராட்டம், எட்டுவழிச்சாலைப் போராட்டம், ஜாக்டோ - ஜியோ போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடி மாணவி சோபியா கைது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... என்று காட்சிகள் விரிகின்றன. பாடல் சிறப்பாக இருப்பதாக கரு.பழனியப்பனையும், யுகபாரதியையும் இரு தலைவர்களும் கைகுலுக்கிப் பாராட்டுகிறார்கள்.

“ஒட்டுமொத்த நிலைமை மாற ஓட்டுதானே ஆயுதம்”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெகிழ்ச்சியான அந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் யுகபாரதி. “பாடல் சி.டி-யை நீங்கள் வெளியிட சங்கரய்யா பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலில் நல்லகண்ணுவிடம் சொன்னோம். அவரோ, ‘இல்லை... இல்லை. சங்கரய்யா மூத்தவர். அவர் வெளியிடட்டும், நான் பெற்றுக்கொள்கிறேன்’ என்றார். பாடலை வெளியிட்டுவிட்டு, முதலில் சங்கரய்யாவிடம் மைக் கொடுத்தோம். அவர், ‘மதவாதத்தை எதிர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டும். நானும் நல்லகண்ணுவும் அதற்காகப் போராடிவந்திருக்கிறோம். நாங்கள் உயர்த்திப் பிடித்த அந்த ஜோதியை, இப்போது இளைஞர்கள் கையில் ஒப்படைக்கிறோம்’ என்று உணர்ச்சிபொங்கச் சொன்னார்.

பிறகு நல்லகண்ணு அய்யாவிடம் மைக்கைக் கொடுத்தபோது, ‘வேணாம்... வேணாம்’ என்று அவர் பேச மறுத்துவிட்டார். பிறகுதான் தெரிந்தது, சங்கரய்யா மூத்தவர்... அவர் ஒரு கருத்தைப் பேசிவிட்டால், அதன் பிறகு நல்லகண்ணு பேசமாட்டாராம். அரசியல் கூட்டங்களிலும்கூட சங்கரய்யா முதலில் பேசிவிட்டால், அதன்பிறகு நல்லகண்ணு பேசமாட்டாராம். இப்படியொரு நெகிழ்வான விஷயம் அவர்களுக்குள் இருக்கிறது” என்றார் ஆச்சர்யத்துடன்.

இயக்குநர் கரு.பழனியப்பனின் ‘கருநீலம்’ நிறுவனம் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது. கரு.பழனியப்பன் நம்மிடம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட அநியாயங்களை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதே இந்தப் பாடலின் நோக்கம். அ.தி.மு.க, பி.ஜே.பி ஆகிய இரு ஆட்சி களையும் ஒழிப்பதற்கானத் தேர்தலாக இதைப் பார்க்க வேண்டும். மதச்சார்பின்மையும், மதநல்லிணக்கமும்தான் இந்த நாட்டின் இதயத்துடிப்பு. பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்குவந்தால், இது மதநல்லிணக்க நாடாக இருக்காது. நம் மொழி, பண்பாடு அனைத்தையும் இவர்கள் சிதைப்பார்கள். இதுபோன்ற விஷயங்களை இந்தப் பாடல் மூலமாக மக்களுக்கு நினைவூட்டுகிறோம்.

தனிமனித வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவர்களை வைத்து இந்தப் பாடலை வெளியிட விரும்பினோம். எனவேதான் மூத்த தோழர்களைத் தேர்வு செய்தோம். இவர்களுக்கு இடையே 75 ஆண்டுகால நட்பு இருக்கிறது. முதன்முதலாக 1945-ல் சந்தித்துள்ளனர். அதை நல்லகண்ணு சொல்ல, ‘ஆமாம்... ஆமாம்’ என்று சங்கரய்யா ஆமோதித்தார். சங்கரய்யாவுக்கு 97 வயது. நல்லகண்ணுவுக்கு 94 வயது. இத்தனை வருடங்களாகக் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் இருக்கிறார்கள். சங்கரய்யா சொன்னது மிக முக்கியமான செய்தி. ‘நாங்கள் உடலளவில் கொஞ்சம் ஓய்ந்துவிட்டோம். எளிய மக்களின் மேம்பாடுதான் நம் நோக்கம். அந்தப் பணியை இளைஞர்கள் தொடர வேண்டும்’ என்றார். இவ்வளவுக்கும் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில், இவர்கள் எதையும் அனுபவித்த தில்லை. அப்படியென்றால், யாருக்கும் சலிப்புதான் வரும். ஆனால் இவர்களோ, நம்பிக்கைக் குறையாமல், சலிப்பு வராமல் அதே உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இது சாதாரண விஷயமல்ல” என்றார் வியப்புடன்.

- ஆ.பழனியப்பன்