Published:Updated:

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!
பிரீமியம் ஸ்டோரி
News
தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

ஓ.பி.எஸ் மகன் சொல்லும் ரகசியம்!

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸின் ஈ.வி.கேஸ் இளங்கோவன், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க-வில் தங்க தமிழ்செல்வன் என்று மும்முனைப் போட்டியில் கொதிக்கிறது தேனி நாடாளுமன்றத் தேர்தல் களம். யாருக்கு இங்கு வெற்றி என்று சுலபமாகக் கணிக்க இயலவில்லை. எப்படியாவது வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறார் இளைஞரான ரவீந்திரநாத் குமார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘முதன் முதலாகத் தேர்தலில் போட்டியிடுவது எப்படி இருக்கிறது?’’

‘‘மகிழ்ச்சியாக இருக்கிறது. அ.தி.மு.க-வின் தொண்டனாகக் கட்சிப் பணியாற்றிவந்தவன் நான். அதனால்தான், தேனி மாவட்டத்தின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளராகப் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. தற்போது முதல்வரும் துணை முதல்வரும், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.’’

‘‘சீனியர் அரசியல்வாதியான ஈ.வி.கே.எஸ், தி.மு.க பின்னணியில் ஒரு பக்கம்... இன்னொரு பக்கம் பங்காளிபோல தங்க தமிழ்செல்வன்... இவர்களை எதிர்த்து  நிற்கும் அனுபவம் எப்படி உள்ளது?’’

‘‘என்னைத் தேனி தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரிப் பிரச்னை, இலங்கைத் தமிழர் படுகொலை எனத் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்தது காங்கிரஸ். தி.மு.க ஆட்சியில் தேனி மாவட்டம் எந்த வளர்ச்சியும் கண்டதில்லை. தேனி அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை. அதனால்தான், தனது கூட்டணிக் கட்சிகளுக்குத் தேனியை ஒதுக்கிவிட்டு தி.மு.க-வினர் ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம், தன்னை வளர்த்த கழகத்தைத் தரக்குறைவாகப் பேசிவரும் தங்க தமிழ்செல்வன், பதவி ஆசை, பண ஆசைக்காகத் தொகுதி மக்களை உதாசினப்படுத்திவிட்டு, தற்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டுக்கேட்கிறார் என்று தெரியவில்லை.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

‘‘அ.தி.மு.க வாக்குகள் பிரிகின்றன, பி.ஜே.பி எதிர்ப்பு அலை வேறு. இந்தச் சூழ்நிலையில், உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?’’

‘‘வாக்குகள் பிரிகின்றன என்பதே கற்பனை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தொண்டர்கள் கட்சி மாறாமல் கழகத்திலேயேதான் இருக்கிறார்கள். சிறு அணியாகச் சின்னம் கிடைக்காமல் அலைந்துகொண்டிருக்கும் சிலர் கிளப்பிவிடும் பொய்ப் பிரசாரம்தான் ‘வாக்குகள் பிரிகின்றன’ என்பது.’’

‘‘ஓ.பி.எஸ் மகன் என்பது பலமா, பலவீனமா?’’

‘‘ஓ.பி.எஸ் மகன் என்பதைப் பாக்கியமாகக் கருதுகிறேன். அதைவிட, சாதாரணத் தொண்டனாகக் கழகப் பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து, இன்றளவும் கழகத்துக்கு விசுவாசமாக இருப்பதைக் கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.’’

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

‘‘ஆனால், வாரிசு அரசியல் என்று சொல்கிறார்களே?’’

‘‘பரம்பரை பரம்பரையாக அரசியல் நடத்திவரும் பலரும் தோல்வி பயத்தில், என்மீது வாரிசு அரசியல் சாயம் பூசப் பார்க்கிறார்கள். முதலில் அவர்கள் கண்ணாடி முன் நின்று பார்க்கட்டும். அவர்கள் மனசாட்சி அதற்குப் பதில் கொடுக்கும்.’’

‘‘ஸ்டாலின், தேனியில் உங்களை விமர்சித்துப் பேசியது பற்றி?’’

‘‘மூத்த அரசியல்வாதி என்று கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘தேனி தொகுதி மக்களுக்கும், தமிழகத்துக்கும் என்ன செய்தோம்? இனி என்ன செய்யப் போகிறோம்’ என்றெல்லாம் சிந்திப்பதை விட்டுவிட்டு, வாய்க்கு வந்தபடி உளறிவிட்டுப்போகிறார்.’’

தங்க தமிழ்செல்வனை தினகரனே தோற்கடிப்பார்!

‘‘தேர்தலில் தங்க தமிழ்செல்வன் உங்களுக்குக் கடும் போட்டியாக இருப்பாரா?’’

‘‘தங்க தமிழ்செல்வன், தனது சுயநலத்துக்காக ரிசார்ட்டுக்கு, ரிசார்ட் தாவித் தகுதி இழந்தவர். வருஷநாட்டு மலைப்பகுதி கிராமத்தினரை வனத்துறை விரட்ட முற்பட்டபோது, ஜெயலலிதா ஆலோசனையோடு வழக்குத் தொடுக்கப்பட்டது. அவர் மறைவுக்குப்பிறகு தங்க தமிழ்செல்வன், வழக்கில் ஆஜராகாமல் விட்டுவிட்டார். வழக்கு வனத்துறைக்குச் சாதகமாகச் சென்றுவிட்டது. இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பை உணர்ந்துதான் அதே தொகுதியில் போட்டிபோடாமல், எம்.பி வேட்பாளராக நிற்கிறார் தங்கதமிழ்செல்வன்.’’

‘‘கட்சியைவிட்டு நீக்கப்பட்ட தினகரன், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு வந்துவிட்டார் என்று சொல்கிறீர்கள். உங்களையும்தானே ஜெயலலிதா நீக்கிவைத்திருந்தார்?’’

‘‘என்னைக் கட்சியைவிட்டு நீக்கவில்லை. தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் பொறுப்பிலிருந்துதான் ஜெயலலிதா விடுவித்தார். ஆனால், தினகரனை கட்சியைவிட்டே நீக்கினார். ஜெயலலிதாவின் மரணம்வரை தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது ஜெயலலிதாவின் ஓட்டுகள் அவருக்கு எப்படி செல்லும்? ஒரு ரகசியம் சொல்கிறேன்... தங்க தமிழ்செல்வனின் புகாரால்தான் தினகரனை, கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. இது தினகரனுக்கும் தெரியும். அதை மனதில் வைத்துத்தான் இந்த எம்.பி தேர்தலில், தங்க தமிழ்செல்வனை நிறுத்தியிருக்கிறார் தினகரன். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்… தங்க தமிழ்செல்வனை, தினகரனேத் தோற்கவைத்துப் பழிக்குப்பழி வாங்குவார்!’’

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி