Published:Updated:

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

ஓவியம்: அரஸ்

“பத்து வருஷமா எம்.பி-யாக இருந்து, எங்க ஊருக்கு என்ன செஞ்சுட்டீங்கன்னு இப்போ ஓட்டுகேட்டு வந்திருக்கீங்க? குடிக்கத் தண்ணி இல்லை. பஸ் வசதி இல்லை. இதெல்லாம் பண்ணாம, என்ன தைரியத்தில் எங்ககிட்ட ஓட்டுகேட்டு வந்தீங்க”-வாக்குக் கேட்டு வந்த தம்பிதுரையை மக்கள் சூழ்ந்துகொண்டு இப்படி வறுத்தெடுக்க, நொந்தேபோய்விட்டார் மனிதர். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, அன்றையதினம்  தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள ஏமூர் புதூருக்கு ஓட்டுக் கேட்டுப்போனபோதுதான் இந்த வம்பு. இதனால், கோபம் அடைந்த தம்பிதுரை, “நீங்க ஓட்டுப் போட்டா போடுங்க, போடாட்டி போங்க. ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாது” என்று பேசிய விவகாரம், கரூர் தொகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்க, நாம் ஏமூர் புதூருக்கே சென்றோம். நம்மை சோகமான முகத்துடன் வரவேற்ற தங்கராஜ் என்பவர், “எங்க ஊர்ல குடிக்கத் தண்ணி இல்லை. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி போட்ட போர்வெல்ல, உப்புத்தண்ணியா வருது. அதுவும் சொட்டுச் சொட்டாதான் வடியும். இதனால், இரண்டு கி.மீ தூரம் தண்ணி தூக்கப் போகணும். பாதி நாள் தண்ணி தூக்கவே போயிருது. எங்க ஊர்ல சாக்கடை வசதி இல்லை. சுடுகாடு இல்லை. பிணத்தை அடக்கம் பண்ண பத்து கி.மீ தூரத்துல இருக்கிற கரூருக்குத்தான் போகணும். பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு அரசு பஸ் வந்துட்டுப் போச்சு. ஆனா, அதை வேற ரூட்டுல திருப்பிவிட்டுட்டாங்க. இதனால், நாலு கி.மீ  நடந்துபோய் நாங்க பஸ் ஏறணும். லைட் வசதியும் இல்லை. 150 மரங்கள் நட்டதாகவும், அதுக்கு ஒன்பதரை லட்சம் செலவானதாகவும், ஊர்ல கல்வெட்டு எல்லாம் வெச்சுருக்காங்க. இங்க நிழல்ல ஒதுங்கக்கூட மரம் இல்லை. ஊரைச் சுத்தி ஒரே வறட்சி” என்றார் ஆத்திரத்துடன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

அடுத்து தம்பிதுரையிடம் கேள்விகேட்ட மல்லிகாவிடம் பேசினோம், “தம்பிதுரை எங்க ஊருக்கு ரெண்டு தடவை மனு வாங்குறேன்னு வந்தார். அப்போ அவர்கிட்ட எங்க ஊருப் பிரச்னைகளைச் சொன்னோம். ‘அதிகாரிகளை வெச்சு ரெண்டே நாள்ல சரிபண்றேன்’ன்னு சொன்னார். ஆனா, பண்ணலை. இப்போ ஓட்டுகேட்டு வந்தார். அதுக்கு முன்னாடி, ‘தலைக்கு நூறு ரூபா தர்றோம்’ பத்து பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுக்கனும்ணு ஆளும்கட்சிக் காரங்க சொன்னாங்க. அப்படி வந்தப்ப, அவரைப் பார்த்து நாங்க, ‘எங்க ஊருக்கு என்ன செஞ்சுட்டீங்கன்னு, இப்படி தைரியமா ஓட்டுக் கேட்டு வந்துருக்கீங்க? உங்களுக்கு நாங்க யாரும் ஓட்டுப்போடமாட்டோம்’ன்னு சொன்னோம். அதுக்கு அவர், ‘ஏன் போடமாட்டீங்க?’ன்னு கேட்டார். ‘எங்க ஊர்ல இவ்வளவுப் பிரச்னைகள் இருக்கு. நீங்க எதையுமே சரிபண்ணலை’ன்னு சொன்னோம். அதுக்கு, ‘நான் உங்க ஊருக்கு பத்து தடவை வந்திருக்கேன். உடனே எதையும் செய்ய முடியாது. உங்க ஊரு உள்பட பல ஊர்களுக்கு தண்ணி தர 81 கோடி ரூபாயில திட்டம் போட்டிருக்கோம். உடனே, தண்ணி வேணும்னா எப்படி? முதல்ல அடித்தளம், அப்புறம் சுவர்ன்னு ஒவ்வொண்ணாதானே வீடு கட்டுவீங்க. உடனே வீட்டை கட்டுன்னா கட்ட முடியுமா?’ன்னு வியாக்கியானம் பேசினார். இதனால், எங்களுக்கும் பொசுக்குன்னு கோபம் வந்துடுச்சு. 

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...
“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

பதிலுக்கு, ‘இத்தனை வருஷமா எம்.பி-யா இருந்து, எங்க ஊருக்கு தண்ணிகூட உங்களால தரமுடியலை. எங்க ஓட்டு உங்களுக்குக் கிடையாது’ன்னு சொன்னோம். உடனே சுள்ளுன்னு கோபமானவர், ‘நீங்க எனக்கு ஓட்டுப் போட்டா போடுங்க, போடாட்டி போங்க... ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாதுண்ணு’ பேசிட்டுப் போயிட்டார். ‘என்ன செஞ்சீங்க’னு கேட்டதுக்கே இப்படி கோபப்படுறார். மறுபடியும் இவர் எம்.பி-யானா, எப்படி எங்களுக்குத் தண்ணி கொடுப்பார்.

எம்.ஜி.ஆர் காலத்தில இருந்து இரட்டை இலைக்குத்தான் நாங்க ஓட்டுப் போட்டுக்கிட்டு வர்றோம். ஆனா, எங்களுக்கு அந்தக் கட்சி தவிச்ச வாய்க்குத் தண்ணிகூட தரலை. அதைக் கேட்டதுக்கு, தம்பிதுரை எங்களைத் திட்டுறார். இப்போ, அவருக்கு ஓட்டுப்போடணுமான்னு யோசிக்கிறோம்” என்றார் அதிரடியாக.

“ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க...” - தம்பிதுரை ‘பகீர்’ பிரசாரம்...

இதற்கிடையே, எதிர்தரப்பு வேட்பாளர்களான காங்கிரஸின் ஜோதிமணி, அ.ம.மு.க-வின் தங்கவேலு உள்ளிட்டவர்களுக்கு, தம்பிதுரையின் இந்தப் பேச்சு, வசமாகச் சிக்கியிருக்கிறது. அவர்களும், தாங்கள் ஓட்டுகேட்டுப்போகும் இடங்களில் எல்லாம், “பார்த்தீர்களா? தொகுதிக்கு ஒன்றுமே செய்யாத தம்பிதுரை, தொகுதி மக்களிடம் எவ்வளவு இனிமை(?)யாகப் பதில் சொல்கிறார் என்று... இவரை மறுபடியும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறவைத்தால், இருண்ட கரூர் தொகுதியைச் சுற்றி இன்னும் இருள் சூழும்” என்று பிரசாரம் செய்ய, அதுவும் நன்றாக எடுபடுகிறது.

தம்பிதுரைக்குப் பிரச்னை அவரேதான்போல!

- துரை.வேம்பையன்,
படங்கள்: நா.ராஜமுருகன்