
நம் உரிமைகளுக்கான கடமை!
தேர்தல்முறை இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா. இந்தியாவில் ஆட்சியமைப்பில், அதன் நிர்வாகத்தில், தேர்தல் முறையில் எத்தனையோ குறைபாடுகள், பிரச்னைகள் இருந்தாலும் ‘மக்களே இறுதியில் எஜமானர்கள்’ என்ற நிலை உறுதிப்படுத்தப்படுவதால்தான் தேர்தல்முறை முக்கியமானதாக இருக்கிறது.
தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் ஒவ்வொரு தேர்தலின்போதும் நடக்கிறது. ஆனால், கிராமப் புறங்களுடன் ஒப்பிடும்போது நகரத்தில் வாக்குப்பதிவு குறைந்து கொண்டே போகிறது என்பதுதான் கவலையளிக்கும் உண்மை. இன்று நகரமயமாக்கல் மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது. கிராமத்துக்குக் கிடைக்காத பல வசதிகள் நகரங்களிலும் பெருநகரங்களிலும் கொட்டிக்கொடுக்கப்படுகின்றன. அத்தனை வாய்ப்புகளையும் வசதிகளையும் அனுபவித்துவிட்டு, வாக்களிக்காமல் இருப்பது நம் சகமக்களுக்குச் செய்யும் துரோகம்; நமக்கு நாமே செய்யும் துரோகம்.

முன்பைவிட அரசியல் விமர்சனங்கள் அதிகரிக்கும் காலத்தில் வாழ்கிறோம் நாம். சமூகவலைதளங்களின் வழியாக செறிவான விமர்சனங்களும் கிண்டலான பதிவுகளும் நம்மை வந்தடைகின்றன. இவற்றில் நம்பகத்தன்மையின்மை, அரசியல் சார்பு என்று பல குறைபாடுகள் இருந்தாலும் மக்களை எந்தக் கட்சியும் ஏமாற்ற முடியாது என்பதும், முன்பைவிட விமர்சன அறிவுடனும் உணர்வுடனும் மக்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இன்று எந்தத் தலைவரும் சமூகவலைதளங்களில், முகத்துக்கு நேராக அவரது வலைப்பக்கத்திலேயே விமர்சிக்கப்படுகிறார், கேள்வி கேட்கப் படுகிறார். இது நவீனத் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை.
ஆனால், சமூகவலைதளங்களில் விமர்சிப்பதோடு நாம் திருப்தியடைந்துவிடக் கூடாது. நம் விமர்சனங்களுக்கான பதில்களைத் தேடும் தேதி ஏப்ரல் 18. அதுதான் நம் உணர்வுகளை அரசியல் கட்சிகளுக்கு அழுத்தமாகச் சொல்லப்போகும் நாள். ஒருபுறம் டெல்லியில் அமையப்போகும் மத்திய அரசையும் இப்போதைய தமிழக அரசின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதற்கான தீர்வைத் தேடும் நாள் ஏப்ரல் 18.
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பு, ‘இந்த வாய்ப்பு இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் நமக்குக் கிடைக்கப்போகிறது; இந்த வாய்ப்பு நம் எதிர்காலத்தை முடிவு செய்யும் வாய்ப்பு’ என்ற உறுதியோடு வாக்களியுங்கள்.
வாக்களிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!