Published:Updated:

மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டும்... அது கடந்து வந்த பாதையும்!

இந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகம் ஆகிறது.

மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டும்... அது கடந்து வந்த பாதையும்!
மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டும்... அது கடந்து வந்த பாதையும்!

குடவோலையில் தொடங்கிய தேர்தல் முறை, இப்போது ஒப்புகைச் சீட்டில் வந்து நிற்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள வகை செய்யும் ஒப்புகைச் சீட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 

வாக்குச்சீட்டு இல்லாமல் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் பின் தகவல் முறைதான், `ஒப்புகைச் சீட்டு’. `வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை’ (Voter Verified Paper Audit Trail - VVPAT) என இதற்குப் பெயர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் பதிவுசெய்த வாக்குகளை, `யாருக்கு வாக்களித்தோம்’ என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ள முடியும். 

வாக்களித்த பிறகு நம்மால் சரிபார்க்கப்பட்ட காகித ஆவணம், பக்கத்தில் உள்ள கண்ணாடிப் பெட்டியில் விழும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரச்னைகள், செயலிழப்புகள், முறைகேடுகள் நடந்தால் வாக்குகள் பதிவாகிய மின்னணு இயந்திரத்தின் முடிவுகளைக் கண்டறிய முடியும். `யாருக்கு வாக்களித்தோம்’ என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்வதோடு, வாக்கு யாருக்காவது மாற்றப்படுகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால், வாக்குகள் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியும். 

இந்த ஒப்புகைச் சீட்டு (VVPAT) முறையில், அச்சிடும் கருவி ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும். வாக்குப் பதிவு செய்யப்படும்போது, வரிசை எண், வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவற்றோடு ஒப்புகைச் சீட்டு கிடைக்கும். இதில் உள்ள விவரங்களை வாக்காளர் சரி பார்த்துக்கொள்ளலாம். சில விநாடிகளுக்குப் பிறகு, இந்த ஒப்புகைச் சீட்டு சிறிய பெட்டிக்குள் சென்றுவிடும். இந்த ஒப்புகைச் சீட்டை, தேவை ஏற்படும் சமயங்களில் தேர்தல் அதிகாரி மட்டுமே பார்க்க முடியும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்த வாக்காளர்களில் ஒருவர், தனது வாக்கு தவறாகப் பதிவாகியிருக்கிறது என நினைத்தால், இந்த ஒப்புகைச் சீட்டின் அடிப்படையில் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியும். வாக்குச் சாவடியின் தலைமை அலுவலர், அந்த வாக்காளரின் எதிர்ப்பைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

இந்த ஒப்புகைச் சீட்டு (VVPAT- Voter Verified Paper Audit Trail) முறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகத்துக்காகத் தயாரிக்கப்படவில்லை. ``மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்கிறது’’ என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸும் இதைக் கடுமையாக எதிர்த்தனர். இப்படித் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோது, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து, 2010 அக்டோபர் 4-ம் தேதி கூட்டம் ஒன்றைப் போட்டது, தேர்தல் ஆணையம். ``வாக்காளர்கள், தங்களது வாக்கைச் சரிபார்த்துக்கொள்ள உதவும் காகித முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்’’ எனப் பல கட்சிகள் அந்தக் கூட்டத்தில் ஆலோசனை தெரிவித்தன. இந்த ஆலோசனையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்ய வல்லுநர் குழுவையும் அமைத்தது, தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் `பாரத் மின்னணு நிறுவனம்’, `இந்திய மின்னணுக் கழகம்’ ஆகிய நிறுவனங்களிடம் VVPAT மாதிரி வடிவம் ஒன்றை உருவாக்குமாறு சொன்னது தேர்தல் ஆணையம். 

2011 ஜூலையில் திருவனந்தபுரம், டெல்லி ஜெய்சல்மார், சிரபுஞ்சி, லே ஆகிய இடங்களில் வாக்காளர்கள், கட்சிகள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் முன்னிலையில் களப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்தக் களச் சோதனைக்குப் பிறகு தெரிவிக்கப்பட்ட பரிந்துரைக்கள் ஏற்கப்பட்டு அதில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்பின் VVPAT அமைப்பின் மாதிரி வடிவம் இரண்டாவது களச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் சோதனையும் டெல்லி, திருவனந்தபுரம், ஜெய்சல்மார், சிரபுஞ்சி, லே ஆகிய இடங்களில் 2012 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டன.

VVPAT இறுதி வடிவத்துக்கு 2013 பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியது, வல்லுநர் தொழில்நுட்பக் குழு. `1961-ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதி’களில் திருத்தம் செய்வதற்கான மத்திய அரசின் அறிவிக்கை 2013 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் VVPAT முறையைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி கிடைத்தது.

நாகாலாந்து மாநிலத்தின் டியூசாங் மாவட்டத்தில் உள்ள நாக்சென் சட்டசபைத் தொகுதியில் 2013 செப்டம்பரில் நடைபெற்றத் தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன்  VVPAT பயன்படுத்தப்பட்டது. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், 2013  அக்டோபரில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. `நியாயமான, நேர்மையான தேர்தலுக்கு VVPAT முறை இன்றியமையாதது’ எனச் சொல்லி, `மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் VVPAT முறையை இணைக்க வேண்டும்' எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. `இந்த VVPAT காகித பரிசோதனைத் திட்டத்தை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் படிப்படியாக அறிமுகம் செய்ய வேண்டும். இதற்காக நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகு, புதுடெல்லி சட்டசபைத் தேர்தலில் 186 வாக்குச்சாவடிகளில் VVPAT ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 1,18,596 வாக்காளர்கள் வாக்களித்தனர். 2014  நாடாளுமன்றத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் VVPAT முறையை அறிமுகம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு 14 லட்சம் VVPAT இயந்திரங்கள் தேவைப்பட்டன. தேர்தலுக்குக் குறைந்தகால அவகாசம் மட்டுமே இருந்ததால், அதிக எண்ணிக்கையிலான VVPAT  இயந்திரங்களைத் தயாரிக்க முடியுமா என்கிற சந்தேகம் எழுந்தது. இதனால், லக்னோ, காந்தி நகர், பெங்களூரு தெற்கு, மத்திய சென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாஹிப் மற்றும் மிசோரம் ஆகிய 8 தொகுதிகளில் மட்டும் VVPAT முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், அனைத்துத் தொகுதிகளிலும் VVPAT காகிதப் பரிசோதனை முறையைப் பயன்படுத்த முடிவுசெய்திருக்கிறார்கள். VVPAT இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்காகச் சுமார் 1,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

``மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்துதான் பி.ஜே.பி வெற்றிபெற்று வருகிறது’’ என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழுந்தது. ``இந்தியாவில் ஏற்கெனவே, நடந்துமுடிந்த தேர்தல்களிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன’’ என்று அமெரிக்காவில் வசிக்கும் மின்னணு தொழில்நுட்ப வல்லுநர் சையத் சுஜா பற்றவைத்த நெருப்பு இந்தியாவில் எரிய ஆரம்பித்தது. `இந்த முறைகேட்டைத் தெரிந்தவர்கள் மர்மமான முறையில் இறந்தார்கள்’ என்கிற அதிர்ச்சித் தகவலயும் சையத் சுஜா வெளியிட்டார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், புகார் எழுப்பியவர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து, `இனிவரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாகப் பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 

காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சியினர் `ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்த வேண்டும்' என்று டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இப்படியான சூழலில், இந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகம் ஆகிறது.