Published:Updated:

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”
பிரீமியம் ஸ்டோரி
“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

விவாதத்துக்கு அழைக்கும் ராகுல்… விலகிச் செல்லும் மோடி!

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

விவாதத்துக்கு அழைக்கும் ராகுல்… விலகிச் செல்லும் மோடி!

Published:Updated:
“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”
பிரீமியம் ஸ்டோரி
“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

ந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பிரச்னையாக எழுந்திருக்கிறது, வேலையில்லா திண்டாட்டம். இதைக் கெட்டியாகக் கையில் பிடித்துகொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பி.ஜே.பி-யை வெளுத்துவாங்குகின்றன. சரி, வேலையில்லா திண்டாட்டம் என்கிற பிரச்னை எதிர்க்கட்சிகளால்  ஊதிப் பெருக்கப்படும் பிம்பமா... இல்லை, உண்மைதானா? பார்ப்போம்.

சமீபத்தில் ரயில்வேயில் ‘கலாசி’ என்கிற அடிமட்ட வேலைக்கான 64,000 பணியிடங்களுக்கு, ஆட்கள் எடுக்கும் அறிவிப்பு வெளியானது. அதற்கு விண்ணப்பித்தவர்கள், 82 லட்சம் பேர். இவர்களில் பி.இ, பி.டெக் படித்த பொறியியல் பட்டதாரிகள் 4,27,000 பேர். இவர்களில் எம்.இ, எம்.டெக் படித்த முதுகலைப் பொறியியல் பட்டதாரிகள் 47,000 பேர். இவர்கள் தவிர, எம்.ஏ,    எம்.எஸ்.சி, எம்.பி.ஏ என முதுகலைப் பட்டதாரிகள் பல லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நம் தேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு பூதாகரமாக இருக்கிறது என்பதற்கு ஒரு சோற்றுப் பதம் இது!

அதேசமயம் படித்த இளைஞர்கள் சும்மா பொழுதைப் போக்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் கிடைத்த வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பட்டதாரிகளாக இருந்தாலும் கால் டாக்ஸி ஓட்டுகிறார்கள். உணவு டெலிவரி செய்கிறார்கள். கடைகளில் பில் போடுகிறார்கள்.

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

‘ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவோம்’ என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார் மோடி. அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘‘பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான்’’ என்றார் மோடி. பிரதமரின் ‘பக்கோடா’ கருத்துக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘‘சும்மா இருப்பதற்கு, பக்கோடா விற்பது மேல்’’ என்று எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார் பி.ஜே.பி-யின் தலைவர் அமித் ஷா. அதற்கு பதிலடியாக, ‘‘பக்கோடா விற்பது ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலைதான்’’ என்று சூடானார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். பக்கோடா சர்ச்சைக்குப் பிறகு, பெங்களூரில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் அருகே, ‘மோடி பக்கோடா’ ‘அமித்ஷா பக்கோடா’ என்று இளைஞர்கள் பக்கோடா விற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால், கடந்த ஐந்தாண்டுகளில் பத்துக் கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் சுமார் நான்கு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசே தெரிவித்தது. மாநில அரசுகளின் துறைகளில் சுமார் 20 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

“எந்த இளைஞனைப் பார்த்தாலும், வேலை வேலை என்று அலைகிறான். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தவுடன், இளைஞர்களின் முகங்களில் நம்பிக்கை தெரிகிறது. ஓரிரு ஆண்டுகளில் அந்த முகங்களில் கொஞ்சம் வருத்தம் தெரிகிறது. நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய சோகம் தெரிகிறது. ஏழெட்டு ஆண்டுகளில் மிகப் பெரிய கோபம் தெரிகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த வேலைகளை ஒழித்துக்கட்டிவிட்டது பி.ஜே.பி” என்று பொங்கியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். “பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி முறை போன்றவற்றால் பொருளாதாரம் சீர்குலைந்து, சுமார் ஐந்து கோடி  பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு நிலவரப்படி, 4.27 கோடிப் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மத்திய அரசுத் துறைகளில் 18 பியூன் பணியிடங்களுக்கு 12,453 பேர் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களில் 129 பேர் பொறியியல் பட்டதாரிகள், 23 பேர் சட்டம் படித்தவர்கள், 323 பேர் சட்ட மேற்படிப்பு படித்தவர்கள்” என்றவரிடம், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன திட்டம் இருக்கிறது?” என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக இருக்கும் நான்கு லட்சம் பணியிடங்களை உடனே நிரப்புவோம். மாநில அரசுகளின் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 20 லட்சம் பணியிடங்களை 2020-ம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கைகளை எடுப்போம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 15 சதவிகிதமாக இருக்கும் உற்பத்தித் துறையின் பங்களிப்பை, 25 சதவிகிதமாக உயர்த்தத் திட்டங்கள் வைத்திருக்கிறோம். இதன் மூலம், தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும்” என்றார்.

குற்றச்சாட்டுகள் குறித்து பி.ஜே.பி-யின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம். “வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாகச் சொல்வது பொய்ப்பிரசாரம். முன்பு, படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்வார்கள். ‘இத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனை பேருக்கு வேலை தரப்படவில்லை’ என்று சொல்வார்கள். இன்று அரசு வேலை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே, வேலை தேடுபவர்களைவிட வேலை கொடுப்பவர்களை உருவாக்கும் வேலையை பிரதமர் மோடி செய்திருக்கிறார். ஸ்கில் இந்தியா திட்டமே அதற்குச் சான்று. நாடு முழுவதும் முத்ரா வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிகளவில் முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 58,000 பேருக்கு 764 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் ஆறு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலைமை இதுதான்’’ என்றார்.

“மிஸ்டர் மோடி, எங்கே அந்தப் பத்துக் கோடி வேலை?”

இந்தப் பிரச்னை குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயத்திடம் பேசினோம். “பொதுத்துறை நிறுவனங்களைத் திட்டமிட்டு ஒழித்துக்கட்டுகிறார்கள். காலி இடங்களை நிரப்புவதில்லை. கடைசியில், அவை தோல்வி அடைந்துவிட்டதாகக் காண்பித்து மூடிவிடுகிறார்கள் அல்லது தனியாருக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல் உட்பட பல பொதுத்துறை நிறுவனங்கள் இப்படிதான் பாதிக்கப்பட்டுள்ளன.  பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி தொழில்நுட்பம் வழங்கும்படி அதன் ஊழியர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திறமையும் அனுபவமும் நிறைந்த ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை எப்படி காலிசெய்கிறார்கள் என்பதை ரஃபேல் விவகாரத்தில் பார்த்தோம். இப்படிச் செய்தால் பொதுத்துறைகளில் எப்படி வேலைவாய்ப்புகள் உருவாகும்?” என்றார்.

‘ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுப்போம்’ என்கிற பிரசாரத்தைக் கடந்த தேர்தலில் தீவிரமாக முன்னெடுத்த பிரதமர் மோடி, இந்தத் தேர்தலில் ‘வேலை’ என்கிற வார்த்தையைக்கூட தவிர்க்கிறார்.

‘வேலைவாய்ப்பு குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?’ என்று சவால் விடுகிறார் ராகுல் காந்தி. அதற்கு பதிலாக, ராணுவ வீரர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்கிறார் தேசத்தின் ‘சௌகிதார்’ மோடி!

- ஆ.பழனியப்பன்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்

எது உண்மை… எது பொய்?

“இ
.பி.எஃப் எனப்படும் ‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ கட்டுவோரின் எண்ணிக்கை ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. அப்படி என்றால், வேலைவாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்றுதானே அர்த்தம்” என்கிறார், எஸ்.ஆர். சேகர். “இது பொய்யான வாதம்” என்று சொல்லும் கோபண்ணா, “அமைப்பு சாரா வேலைகள், அமைப்பு சார்ந்த வேலைகள் என்று பிரிக்கப்பட்டது உட்பட பல்வேறு காரணங்களால், இ.பி.எஃப் செலுத்துவோர் கணக்கைப் பதிவுசெய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருப்பவர்கள் இ.பி.எஃப் திட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்தக் கணக்கைத்தான் பி.ஜே.பி-யினர் தவறாகப் பிரசாரம் செய்கிறார்கள்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism