அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

தேதோ எண்ண ரேகைகள் முகத்தில் தெறிக்க அமைதியாக வந்தமர்ந்தார் கழுகார்.

“என்ன நீர் ஏதும் தியானத்தை ஆரம்பிக்கப் போகிறீரோ” என்று கேட்டதுமே சிரித்த கழுகார், “சரி நீரே தொடங்கும்” என்றார்.

“மீண்டும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டுவிட்டாரே மோடி. என்னதான் அந்த மேஜிக்?’’

‘‘சென்ற இதழ் அட்டையில் நீர் போட்டதுபோலவே மிரட்டிவிட்டார் மோடி. 300 என்ற எண்ணிக்கையை பி.ஜே.பி கூட்டணி தாண்டும் என்று கருத்துக்கணிப்புகள் சொன்னதை பி.ஜே.பி தலைமையே முழுமையாக நம்பவில்லை. தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைத்தான் கொடுத் துள்ளன. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ரஃபேல் விவகாரம் என கடைசி நேரத்தில், பி.ஜே.பி-க்கு எதிரான பிரசாரம் வலுவாகயிருந்தது. ஆனாலும் கடும்நெருக்கடிகளையெல்லாம் உடைத்து பி.ஜே.பி ஜெயித்திருக்கிறது’’

‘‘வடமாநிலங்களில் இப்படியொரு ஆதரவு அலை வீசக் காரணமென்ன?’’

‘‘இரண்டு காரணங்களை பி.ஜே.பி தரப்பில் சொல் கிறார்கள். ஒன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அசுர வேலை. இரண்டு, காங்கிரஸ் போட்ட கணக்குகளையெல் லாம் காலிசெய்த அமித் ஷாவின் யுக்தி. இந்தத்தேர்தலை பி.ஜே.பி தரப்பு கொஞ்சம் அச்சத்துடனேயே எதிர்கொண்டது என்பதுதான் உண்மை. ஆனால், வெற்றிக் கான உத்தரவாதத்தைக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகள்தான். 2014 லோக்சபா தேர்தலில், பி.ஜே.பி-க்குக் கிடைத்த வெற்றிக்குக் காரணம் ‘மோடி மேஜிக்’ என்றார்கள். இந்தத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்த யுத்தம் ஜெயித்துவிட்டதாக நம்புகிறார்கள்!’’

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

‘‘உத்தரப் பிரதேசத்திலும் எதிர்க்கட்சிகளுக்கு பலத்தஅடி விழுந்துள்ளதே?’’

‘‘அகிலேஷ் - மாயாவதி அட்டகாசமான கூட்டணிதான். பகுஜன்சமாஜ் கட்சியும் சமாஜ்வாடியும் கைகோத்து களம் கண்டதால், அந்தக் கூட்டணியே உ.பி-யில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். முதல்கட்டத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் நிலவரமும் அப்படித்தான் இருந்தது. ஆனால், அதற்குப்பின் அங்கு ஆர்.எஸ்.எஸ் களத்தில் இறங்கியதும் நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக மதம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை ஆர்.எஸ்.எஸ் கையில் எடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிடும் என்கிற பிரசாரத்தை பி.ஜே.பி மேற்கொண்டது. இதற்கெல்லாம் சேர்த்து பலன் கிடைத்திருக்கிறது. நாற்பது சீ்ட் பிடிப்பதே கஷ்டமென்று நினைத்த உ.பி-யில் 50-க்கும் அதிகமான இடங்களைப் பிடித்திருக்கிறது பி.ஜே.பி.’’

‘‘போபாலில் பிரக்யா சிங் ஜெயித்துவிட்டாரே?’’

‘‘காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று சொன்ன பிரக்யா சிங்கையே ஜெயிக்க வைத்து விட்டார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ் அணுகுமுறை வெற்றி பெற்றிருப்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டுமென்று கேட்கிறார்கள்!’’

‘‘அமேதியில் ராகுல் பின் தங்கிவிட்டாரே?!’’

‘‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எப்போதோ காலியாகிவிட்டது. ஆனால், அமேதியில் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டது அதிர்ச்சிதான். அவரை எதிர்த்து பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணி, ‘நான் தோற்றுவிட்டால், இனி தேர்தலிலேயே நிற்கமாட்டேன்’ என்கிற அளவுக்குப் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால், ‘நீ கண்டிப்பாக ஜெயிப்பாய்’ என்று அமித் ஷா உறுதி கொடுத்தாராம். இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ செய்து விட்டார்கள் என்று காங்கிரஸார் பலரும் மறுபடியும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்திருக்கிறார்கள்!’’

‘‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பி.ஜே.பி ஜெயித்திருக்கிறதே?’’

‘‘மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டில்தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அப்போதிருந்தே கோஷ்டிப்பூசல் ஆரம்பித்துவிட்டதாம். இதை எல்லாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விட்டது பி.ஜே.பி. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆறுதல் கொடுத்திருப்பது பஞ்சாப் மற்றும் புதுச்சேரி ஆகியவைதான். அதேபோல, இடதுசாரிகளின் கைகளில் இருக்கும் கேரளாவில் முழுமையாகத் தொகுதிகளை அள்ளியிருக்கிறது காங்கிரஸ்.”

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

“தோழர்களின் நிலைதான் பரிதாபம்.”

“இந்தத் தோல்விகளைவிட, ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதாதளத்துக்குக் கிடைத்த தோல்வி பெரிதாகப் பேசப்படுகிறது. பி.ஜே.பி அங்கேயும் பல தொகுதிகளைக் கைப்பற்றியதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பரிவார அமைப்புகளின் பங்களிப்பு அதிகம். குஜராத் மாநிலத்தில் உள்ள 26 சீட்களும் தங்களுக்குக் கிடைக்கும் என பி.ஜே.பி கணக்கு போட்டது. அந்தக் கணக்கும் பலித்துவிட்டது. மஹாராஷ்டிராவில் 28 இடங்கள் எதிர்பார்த்தார்கள், கூடுதலாக 10 சீட்கள் கிடைத்துவிட்டன’’

‘‘வங்கத்திலும் பி.ஜே.பி பாதம் பதித்துவிட்டதே?’’

‘‘அதுதான் இந்தத் தேர்தலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக். அங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. சிவப்பு மங்கலாகி, காவியான வரலாறு அங்கே நிகழ்ந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் தோழர்கள் பெரும்பாலானோர் கூண்டோடு பி.ஜே.பி-க்குத் தாவி ‘ஜி’க்களாக உருமாறியிருக்கிறார்கள். அங்கே துர்கா பூஜையை மிஞ்சும் அளவில் ராமநவமி நடத்தினார்கள். அமித் ஷா ரதயாத்திரைக்கு பிரமாண்ட கூட்டம் சேர்ந்தது. இப்போது கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் ஆகிய மூன்று கட்சிகளையும் முறியடித்து எடுத்த எடுப்பிலேயே 42-க்கு 17 இடங்களில் ஜெயித்து பலமாக பி.ஜே.பி காலூன்றியிருக்கிறது. இதைத் தான் சித்தாந்த யுத்தத்தில், ஆர்.எஸ்.எஸ் ஜெயித் திருக்கிறது என்பதற்கு மிகப் பெரிய சாட்சியாகச் சொல்கிறார்கள்!’’

‘‘தெலங்கானாவிலும் ஆர்.எஸ்.எஸ் வியூகம்தான் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்கிறார்களே?’’

‘‘உண்மைதான். அங்கே சந்திரசேகர ராவை யாரும் அசைக்கமுடியாது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான்கு இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியுள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் வகுத்த வியூகமும் செய்த வேலையும்தான் காரணம் என்கிறார்கள். தமிழகம், கேரளா, ஆந்திராவில்தான் பி.ஜே.பி நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. அதுவும் தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு இந்தத் தேர்தலில் கிடைத்திருப்பது மரணஅடி. கடந்த தேர்தலிலாவது பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயித்து அமைச்சரானார். இந்த முறை அவரே தோல்வியடைந்துவிட்டார்!’’

‘‘என்ன சொல்ல வருகிறீர்?’’

‘‘தென் மாநிலங்களை பி.ஜே.பி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்றாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் பலமான கூட்டணி வைத்ததால், கண்டிப்பாக ஐந்தில் மூன்று தொகுதிகளையாவது ஜெயிப்போம் என்று நினைத்தார்கள். அதற்கு மாறாகக் கடந்த தேர்தலைவிட மோசமான தோல்வி கிடைத்திருக் கிறது. 2014-ல் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் இங்கே அ.தி.மு.க-வுக்கு அமோக வெற்றியைத் தந்தது தமிழகம். இந்தமுறை தி.மு.க-வுக்கு மொத்தமாக அள்ளிக்கொடுத்து, ‘நாங்கள்லாம் வேற லெவல்’ என்று பி.ஜே.பி-யை மிரட்டிவிட்டது தமிழகம். ஆர்.எஸ்.எஸ்-ஸின் வியூகங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதைத்தான் இது காட்டுகிறது. `திராவிடப் பாரம்பர்யத்தில் ஊறிவந்துள்ள தமிழகத்தை அத்தனை எளிதாக ஆர்.எஸ்.எஸ் ராஜ்யத்துக்குள் அடக்க முடியாது’ என்று நெட்டிசன்களும், அரசியல் தலைவர்களும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்!’’

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

‘‘ம்... காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?’’

‘‘இப்படி ஒரு படுதோல்வியைச் சந்திப்போம் என்று காங்கிரஸ் தரப்பு நினைக்கவேயில்லை. பிராந்திய ரீதியாக கட்சியை வலுப்படுத்த ராகுல் தவறிவிட்டார் என்கிற பேச்சுகள் கட்சிக்குள் மீண்டும் பலமாக எழுந்திருக்கின்றன. கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் சொல்லிக்கொள்ளும்படி ஜெயிக்கவில்லை. ஆந்திராவில், அப்போதே ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கி யிருந்தால் கட்சியே அங்கே உடைந்திருக்காது. அதுபோலத்தான் பல மாநிலங்களிலும் மாநிலத்தலைவர்களையும் உணர்வுகளையும் மதிக்காமல் போனதன் விளைவை காங்கிரஸ் தொடர்ந்து அனுபவிக்கிறது என்று பேசுகிறார்கள்!’’

‘‘பிரதமர் கனவில் இருந்தவர்களும் உடைந்து போயிருப்பார்களே?’’

‘‘மாயாவதிக்குத்தான் அந்த ஆசை அதிகம் இருந்தது. அகிலேஷுடன் கூட்டணி வைக்கும்போதே பிரதமர் பதவிக்கு வாய்ப்பு வந்தால், அதைத் தனக்கு விட்டுத்தரவேண்டும் என்று கண்டிஷன் வைத்திருந்தார். அதேபோல், மம்தா, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை வைத்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தியதன் பின்னணியும் பிரதமர் பதவி மீது கண் வைத்துத் தான். கூடுதல் எண்ணிக்கையில் சீட் கிடைக்காத பட்சத்தில், மாநிலக் கட்சிகளின் தலைவர் ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் முடிவில் காங்கிரஸ் கட்சி இருந்தது. இந்த சங்கதி தெரிந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க தரப்பிடம் தன் பிரதமர் ஆசையைச் சொல்லியிருக்கிறார். அதற்கு தி.மு.க-வும் ஓ.கே சொல்லியிருந்தது. எல்லோரின் கனவுகளையும் தேர்தல் முடிவுகள் தகர்த்துவிட்டன!’’

‘‘தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி உருவாகி யிருப்பதால், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் இருக்குமா?’’

‘‘கண்டிப்பாக இருக்குமாம். டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் இதை உறுதியாகச் சொல்லிவிட்டாராம் அமித் ஷா. கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், அன்புமணி ஆகியோர் வெற்றி பெற்றால், அநேகமாக அமைச்சராகும் யோகம் இருக்கிறது என்கிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் இந்த படுதோல்வி என்று பேச ஆரம்பித்திருக்கும் தமிழக பி.ஜே.பி தலைவர்கள், இதற்குத் தலையாட்டுவார்களா என்பது சந்தேகமே’’

மிஸ்டர் கழுகு: மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

‘‘அது சரி... தி.மு.க அமோக வெற்றி பெற்றும் ஒரு பயனும் இல்லாமல் போய்விட்டதே. ஸ்டாலின் என்ன நினைக்கிறாராம்?’’

‘‘கடந்த முறை ஜெயலலிதாவின் நிலைதான் இந்த முறை ஸ்டாலினுக்கு. தேர்தலுக்கு முன்பு ஸ்டாலினைச் சந்தித்த டெல்லியின் முக்கிய வி.ஐ.பி ஒருவர், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிய மைக்க வாய்ப்பு குறைவு. ஆனால், மத்தியில் ஏற்படும் ஆட்சியில் மாநிலக் கட்சிகளின் ரோல் பிரதானமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு ஸ்டாலின் உற்சாகமாக இருந்தாராம். கூட்டணி அமைச்சரவை அமையும் அந்தக் கூட்டணியில் தி.மு.க பிரதானமாக இடம்பிடிக்கும் என்றெல்லாம் கணக்குப்போட்டு வைத்திருந்தார். ஆனால், அதற்கும் வாய்ப்பில் லாமல் போய்விட்டது. தனிப்பெரும்பான்மை யுடன் பி.ஜே.பி வெற்றியை ருசித்துக் கொண்டிருக் கிறது. சட்டமன்றத் தேர்தலில், 22-க்கு 22 கிடைத்திருந்தாலாவது பலன் இருந்திருக்கும். அதுவும் இல்லை. மேலேயும் கீழேயும் ஆட்சி மாறாததில், ஸ்டாலின் பயங்கர அப்செட். அடுத்த மூவ் பற்றி யோசனை நடக்கிறது அறிவாலயத்தில்’’ என்ற கழுகார்,

 ‘‘தமிழக நிலை பற்றி உமது நிருபர் தனியாக ஒரு கட்டுரையைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் போல!’’ என்று கூறி பறந்தார்.

ஓவியம்: ஹாசிப்கான்
படம்: எம்.விஜயகுமார்