அரசியல்
அலசல்
Published:Updated:

தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!

தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!

தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!

தேர்தல் என்றாலே ஜூ.வி-யின் கருத்துக்கணிப்பு, நச் நிலவரம் ஆகியவற்றுக்கு வாசகர்கள் இடையே விறுவிறுவென எதிர்பார்ப்பு உருவாகிவிடும். எனவே, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு நச் நிலவரம் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கு நேரடி சர்வே ஆகியவற்றை ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத இந்தத் தேர்தல் களம், மற்ற தேர்தல்களைவிட வித்தியாசமாகவே இருந்தது. அ.தி.மு.க-வுக்கு எதிராகக் களத்தில் குதித்த தினகரனின் அ.ம.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றின் செயல்பாடுகள், களத்தைக் கணிப்பதில் சவால்களை ஏற்படுத்தின.

தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!

நாடாளுமன்றத் தேர்தல் நச் நிலவரம்... நடந்தது என்ன?

தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதி என 40 நாடாளுமன்றத் தொகுதிகளின் கள நிலவரத்தை அறிய ஜூ.வி நிருபர் படை களமிறங்கியது. தொகுதிக்குள் வலம் வந்த இந்தப் படை... அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு, வாக்காளர்களின் மனநிலை, வேட்பாளர்கள் பலம் - பலவீனம், தொகுதி பிரச்னைகள், பிரசார உத்தி, பணப் பட்டுவாடா என்று பல கோணங்களையும் ஆய்வுசெய்தது. அதன் அடிப்படையில் ரேஸில் யார் முந்துவார்கள் என்று எழுதினோம்.

தேர்தல் தேதிக்கு நான்கு நாள்கள் முன்பு வரை உள்ள வாக்காளரின் மனநிலையைப் பதிவு செய்வதுதான் கடந்த காலங்களில் இருந்த நிலைமை. ஆனால், இந்த முறை தமிழகத்தின் தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்றதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி பத்து நாள்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மற்றும் நச் நிலவர முடிவுகளை வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கள நிலவரத்தை முன்கூட்டியே சொல்லும் இந்தச் சவாலை ஏற்று 40 தொகுதிகளின் நச் நிலவரத்தை வெளியிட்டோம். தி.மு.க கூட்டணி 30, அ.தி.மு.க கூட்டணி 7,  இழுபறி 3 என்று கணித்தோம். ஆனால், ஓர் அலை உருவானதுபோல தி.மு.க கூட்டணிக்கு 38 இடங்கள், அ.தி.மு.க கூட்டணிக்கு ஒரேயொரு இடம் என்று தேர்தல் முடிவுகளை எழுதி விட்டார்கள் வாக்காளர்கள். வேலூர் நாடாளு மன்றத் தொகுதி தேர்தல், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இங்கேயும் தி.மு.க வெற்றிபெறும் என்பதுதான் நம்முடைய கணிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் ஜூ.வி-யின் கணிப்பு 80 சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது. தேனி, சிதம்பரம், தென்சென்னை ஆகிய தொகுதிகள் இழுபறி என எழுதியிருந்தோம். இவற்றில் சிதம்பரமும், தேனியும் கடைசி வரை இழுபறியாகவே இருந்தன.

இடைத்தேர்தல் சர்வே... நடந்தது என்ன?

‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்குமா... கவிழுமா...’ என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கி, மினி சட்டசபைத் தேர்தலைப்போல நடைபெற்றது 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இவற்றில் முதலில் அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களிடம் கருத்துக்கணிப்பை ஜூ.வி சார்பில் நடத்தியிருந்தோம். சர்வே பாரங்கள், தொகுதி எல்லைகள், பூகோள அமைப்பு, பல தரப்பு வாக்காளர்கள் என அனைத்து அம்சங்களையும் அறிவியல்பூர்வமாக அணுகி சர்வே மேற்கொள்ளப்பட்டது. பாப்பிரெட்டிபட்டி தவிர மற்ற 17 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்பதுதான் அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவாக வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளில் 10 தொகுதிகள் தி.மு.க-வுக்குக் கிடைத்துள்ளன. பாப்பிரெட்டிபட்டியை அ.தி.மு.க வென்றுள்ளது. இதில், ஜூ.வி-யின் கருத்துக்கணிப்பு 61 சதவிகிதம் சரியாக வந்துள்ளது. ஏழு தொகுதிகள் பற்றிய கருத்துக்கணிப்பு தவறாகிவிட்டது. இது 39 சதவிகிதம்.

தேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்!

இந்த முறை இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டிருக்கும் சூழலில், நாடாளு மன்றத்துக்கு ஒரு மாதிரியாகவும் சட்டமன்றத்துக்கு வேறு மாதிரியாகவும் வாக்களித்து வித்தியாசமான சூழலை உருவாக்கியுள்ளனர் மக்கள். இதற்கு உதாரணம், தேனி நாடாளுமன்றத் தொகுதி. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்த வாக்காளர்கள், அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க-வை வெற்றிபெறச் செய்துள்ளனர். அதேசமயம், இந்த இரண்டு தொகுதிகளின் வாக்காளர்களும் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வுக்குக் கூடுதல் வாக்களித்துள்ளனர். இரண்டு தொகுதிகளிலுமே சுமார் 7,000 வாக்குகள் வீதம் கூடுதலாக அளித்துள்ளனர்.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது. இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, திருவாரூர் சட்டசபைத் தொகுதியில்  மட்டும் அ.தி.மு.க வேட்பாளருக்குக் கூடுதலாகச் சுமார் 12,000 வாக்குகளை அளித்துள்ளனர் வாக்காளர்கள். அதேசமயம், இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க-வுக்குச் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகளைக் கொடுத்து, அ.தி.மு.க-வைவிட சுமார் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துள்ளனர்.
கடைசி நேர பிரசாரம், பணப் பட்டுவாடா, சாதி, நாடாளுமன்ற வேட்பாளர் யார்... சட்டமன்ற வேட்பாளர் யார் என்று பலவாறாகப் பிரித்துப் பார்த்து வாக்களித்துள்ளனர் மக்கள். எம்.பி தொகுதிகளில் தோற்றாலும் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற வெறியோடு வேலைசெய்த அ.தி.மு.க-வின் விறுவிறுப்பான பணிகளும் இதற்குக் காரணம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு விஷயத்தில் ஜூ.வி 61 சதவிகித அளவுக்கே வெற்றிபெற்றுள்ளது. இன்னும் துல்லியமாகச் செயல்பட்டு, தேர்தல் முடிவுகளுடன் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியான முடிவுகளைப் பெறுவதுதான் முழுமையான கருத்துக்கணிப்பு. வருங்காலங்களில் இன்னும் துல்லியமான முடிவுகளைப் பெறுவது எப்படி என்று சிலபல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளன இந்த முடிவுகள்.

சர்வே மற்றும் நச் நிலவரங்களில் ஜூ.வி-க்கு ஒத்துழைப்பு நல்கிய வாக்காளர்கள், அரசியல் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

- ஜூ.வி டீம்