Published:Updated:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யாமல் தடுக்க முடியுமா? - என்ன சொல்கிறார் பொறியாளர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யாமல் தடுக்க முடியுமா? - என்ன சொல்கிறார் பொறியாளர்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யாமல் தடுக்க முடியுமா? - என்ன சொல்கிறார் பொறியாளர்

`2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது'' என்று அதனை வடிவமைத்த குழுவில் இருந்த  சைபர் நிபுணர் சையத் சுஜா குற்றம் சாட்டியிருந்தார். நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லண்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் இதனை வெளிப்படுத்தியிருந்தார். முன்னதாகவே, மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கும்போது, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்குகள் பதிவாகுமாறு செய்ய முடியும் என பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால், மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி, அந்தக் கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து வலியுறுத்தினர்.

`முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை' என்று அடித்துச்சொல்கிறது தேர்தல் ஆணையம். இந்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இது தொடர்பாக தமிழக தொழில்நுட்பப் பொறியாளர் நெல்லை ஆதில், ``இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகமான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக அறியமுடிகிறது. மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும் தங்களது ஆய்வில், இந்திய EVM-யை ஹேக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இடையில் நடந்த சட்டமன்றத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என அனைத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க-வுக்கு வாக்கு விழுந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு பல நிறுவனங்களும் துணைபோயுள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பல ஜனநாயக அமைப்புக்களும் EVM-க்கு பதிலாக பழைய பேலட் பேப்பர் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவந்தனர். ஆனால், அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

ஆனால், பேலட் பேப்பருக்குப் பதிலாக உயர்தரமான டெக்னாலஜிகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க முடியும். அது மட்டுமில்லாமல், கள்ள ஓட்டையும் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின்மூலம் தடுக்கலாம். ஆம். Block chain டெக்னாலஜியைப் பின்புலமாகக்கொண்டு இயங்கக்கூடிய டேட்டாபேஸ் சர்வர்களோடுகூடிய அதிநவீன மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், Artificial Intelligence தொழில்நுட்பத்தை அதிநவீன வாக்கு இயந்திரங்களின் சர்வர்களோடு எம்பட் செய்வதன் மூலமும், தற்போது இருக்கும் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களின் குறையைப் போக்க முடியும். 

மேலும், கண் ரெடினா ஸ்கேனரையும் வாக்காளர் அட்டையையும் பயன்படுத்தி, வாக்காளர்கள் உண்மையானவர்களா என்று கண்டுபிடித்த பின்னரே வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம் கள்ள ஓட்டை தடுக்கலாம். ஏற்கெனவே, ஆதார் அட்டை எடுக்கும்போது நமது கண் ரெடினாவை அரசு பதிவுசெய்துள்ளது. கண் ரெடினா டேட்டாபேஸ் ஏற்கெனவே அரசாங்கத்திடம் உள்ளதால், இந்த ஸ்கேனர் முறையைப் பின்பற்ற அரசுக்கு பெரிய சிரமம் இருக்காது. அயல் நாடுகளில் விமான நிலைய இமிக்ரேஷனில் (Immigiration) பயன்படுத்தப்படும் அதே முறைதான் இது.  

முதல் ஸ்கேனிங் முடிந்த பின்னர், வாக்காளரை உறுதிசெய்துவிட்டுதான் வாக்களிக்க இயந்திரம் அனுமதிக்கும். இரண்டாம் கட்டமாக, தற்போது இருக்கும் EVM மெஷினுக்குப் பதில், தொடுதிரை கணினியைப் பயன்படுத்தி வாக்குகளைப் பதிவுசெய்ய வேண்டும். இந்த வாக்குகள் அனைத்தும் டி-சென்ட்ரலைஸ்டு டேட்டாபேஸ், அதாவது ப்ளாக் செய்ன் டெக்னாலஜி மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த சர்வர் பல

நோடுகளாக (சூப்பர் கம்ப்யூட்டர்) பிரிந்து டேட்டாக்களை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சேமித்துவைக்கும். அதில், ஒரு நோடில் எதாவது திருட்டுத்தனம் செய்தாலும் மற்ற நோடுகள் இதனை அனுமதிக்காது. இதனால்தான், இந்த முறையில் ஹேக்கிங் அல்லது டேட்டா மாறுபடச்செய்தல் மிகமிகக்குறவு. உதாரணமாக, ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தில் வாக்களித்தால், அந்த வாக்கு குறைந்தது மூன்று டேட்டாபேஸில் பதிவாகும். அவர் உண்மையான நபர் தான் என்பதை அவரது கண் ரெடினாவையும், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டையும் ஒப்பீடு செய்யப்படும். பின்னர், அவர் இன்ன கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறார் என்ற தகவல், குறைந்தது மூன்றுக்கும் மேற்பட்ட நோடுகளில் பதிவாகும்.

வாக்கு எண்ணப்படும் நேரத்தில், ஒருவரின் வாக்கு எத்தனை நோடுகளில் பதிவாகியுள்ளதோ அத்தனை நோடுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கும். அதன் பின்னரே, அந்த வாக்கு கணக்கில் சேர்க்கப்படும். மேலும், இங்கு இதனை ஹேக் செய்ய எத்தனிப்பவர்கள், ஒரு நோடில் ஹேக் செய்ய முயற்சிப்பார்கள். ஆனால், அது மற்ற நோடுகளில் ரெப்ளிகேட் ஆகாது. ஒற்றை நோடில் ஹேக் செய்தாலும்கூட, மற்ற பெரும்பான்மையான நோடுகளில் என்ன வாக்கு பதிவாகியதோ அதே வாக்குதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அத்தனை நோடுகளையும் ஹேக் செய்ய முயற்சிப்பதற்குள் தேர்தல் முடிவு வந்து ஆட்சியும் அமைக்கப்பட்டுவிடும்.  குறிப்பாக, வாக்கைப் பதிவுசெய்தவுடன் வாக்காளர் யார் என்ற தகவல் மறைக்கப்பட்டுவிடும். வாக்காளர்கள் பெயருக்கு பதில், கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் யூனிக் ஐடி அந்த டேட்டாபேஸால் ஜெனரேட் செய்யப்படும். இதன்மூலம் ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய அரசுக்கு மிகப்பெரும் செலவு என்று சொல்லப்படலாம். பட்டேல் சிலை வைப்பதற்கே 3000 கோடி செலவுசெய்த இந்திய அரசாங்கத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஆகும் செலவை ஒப்பிடும்போது, அது பெரிய மதிப்பல்ல என்பது உண்மை. பேலட் முறைக்கு செல்வதற்கு 99.9% வாய்ப்பில்லை என்பதால், டெக்னாலஜியைப் பயன்படுத்தியே தற்போது இருக்கும் EVM-ன் குறைபாட்டைப் போக்கலாம் என்பது எனது ஆய்வு'' என்று தெரிவித்துள்ளார்.