Published:Updated:

``தி.மு.கவுக்கு ஒரு நியாயம்... அமைச்சருக்கு ஒரு நியாயமா?" - சர்ச்சையில் சிக்கிய கரூர் கலெக்டர்

துரை.வேம்பையன்
``தி.மு.கவுக்கு ஒரு நியாயம்... அமைச்சருக்கு ஒரு நியாயமா?" - சர்ச்சையில் சிக்கிய கரூர் கலெக்டர்
``தி.மு.கவுக்கு ஒரு நியாயம்... அமைச்சருக்கு ஒரு நியாயமா?" - சர்ச்சையில் சிக்கிய கரூர் கலெக்டர்

``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. கரூர் மாவட்ட நிர்வாகம், சுவர்களில் எழுதப்பட்டுள்ள கட்சி சின்னங்கள், விளம்பரங்கள், ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்களை நேரடியாக களத்தில் நின்று அழித்து வருகிறது. `இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே?'னு நீங்க கேட்கலாம். ஆனா, தி.மு.க உள்ளிட்டக் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் மட்டுமே அழிக்கப்படுகின்றன. மாவட்டம் முழுக்க ஆளுங்கட்சி அமைச்சரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு செய்துள்ள சுவர் விளம்பரங்களை அப்புறப்படுத்த தயங்குகிறார் மாவட்ட ஆட்சியர். இது நியாயமா?" என்று எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறார் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பி.காமராஜ்.

அடுத்த மாதம் 18-ம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்னும் ஒருமாத காலமே தேர்தலுக்கான காலம் இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் கூட்டணியை உறுதிசெய்து, அடுத்து வேட்பாளர்களை அறிவிக்க தயாராகி வருகிறது. இன்னொருபக்கம், தேர்தல் ஆணையம் கடுமையான தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி, கட்சிகளை திணறடித்து வருகிறது. இந்த நிலையில்தான், `கரூர் மாவட்ட நிர்வாகம் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆளுங்கட்சிக்கு சார்பாக நடந்துகொள்கிறது' என்று கிருஷ்ணராயபுரம் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ பி.காமராஜ் நம்மிடம் குற்றம்சாட்டுகிறார்.

விதவிதமான போட்டோ ஆதாரங்களை நம்மிடம் காண்பித்து, அதன்பிறகு பேசினார். 

``தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலேயே தேர்தல் விதிமுறை தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் அன்பழகன் தானே களத்தில் இறங்கி கட்சிகள் சம்பந்தமான விளம்பரங்கள், சின்னங்கள், ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள், ஃப்ளெக்ஸ்கள் என அனைத்தையும் அழிக்க வைத்தார். நாங்களும், `நேர்மையான அதிகாரி'னு மகிழ்ந்துதான் போனோம். ஆனா, போகப் போகதான் ஆட்சியர் ஒரு கண்ணில் வெண்ணெயையும், மறு கண்ணில் சுண்ணாம்பையும் வச்சு செயல்படுவது தெரிஞ்சுச்சு.

தி.மு.க கூட்டணி கட்சிகள், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளின் சுவர் விளம்பரங்களை மட்டுமே அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனா, ஆளுங்கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு மாவட்டம் முழுவதும் செய்துள்ள சுவர் விளம்பரங்களையோ, ஒட்டியுள்ள நோட்டீஸ்களையோ, வைத்துள்ள ஃப்ளெக்ஸ்களையோ அகற்ற அவர் நடவடிக்கை எடுக்கலை. மதுரை பைபாஸ் மேம்பாலம், திருக்காம்புலியூர் மேம்பாலம், பசுபதிபாளையம் அருகே உள்ள பாலம், கரூர் நகரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க அரசின் சாதனைகள்னு வைத்துள்ள ஃப்ளெக்ஸ்கள்னு எதையும் அகற்றலை.

அதைவிட கொடுமையா, கரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை கவர அமைச்சர் சமீபத்தில் பிரமாண்டமாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தினார். அதுசம்பந்தமான போஸ்டர்களை எல்லா அரசுப் பேருந்துகளிலும் ஒட்டியது அமைச்சர் தரப்பு. அந்த போஸ்டர்களை எந்த பேருந்திலும் இன்னும் அகற்றலை. அதேபோல், அமைச்சரின் சொந்த ஊரான ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் பேருந்துநிறுத்தம் ஒன்று உள்ளது. அந்தப் பேருந்துநிறுத்தத்தை இரவில் மின்விளக்குகளால் ஒளிரும் அளவுக்கு அமைத்துள்ளார்.

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அம்மா அரசின் சாதனைகள்னு சகல விஷயத்தையும் எழுதி இருக்கிறார்கள். ஜெயலலிதா படம், எடப்பாடி படமெல்லாம் இருக்கிறது. அதையும், மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்கலை. இத்தனை விஷயங்களையும் போட்டோ, வீடியோ ஆதாரமாக வைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சியரை பார்த்து புகார் கொடுத்தோம். இரண்டு நாள்கள் ஆயிட்டு. ஒரு இடத்திலும் அமைச்சர் சம்பந்தமான எந்த விளம்பரங்களையும் மாவட்ட நிர்வாகம் அகற்றலை. ஒருசார்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் உடனே அமைச்சர் சம்பந்தமான அத்தனை விளம்பரங்களையும் அழிக்கணும். இல்லைன்னா, போராட்டம் வெடிக்கும்" என்றார் ஆக்ரோஷமாக!.