Published:Updated:

"பல கட்ட வாக்குப்பதிவுகள் ஏன்? தமிழகத்தில் பணப்புழக்கம் எவ்வளவு?’’ - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

"பல கட்ட வாக்குப்பதிவுகள் ஏன்? தமிழகத்தில் பணப்புழக்கம் எவ்வளவு?’’ - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்
"பல கட்ட வாக்குப்பதிவுகள் ஏன்? தமிழகத்தில் பணப்புழக்கம் எவ்வளவு?’’ - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் நேர்மைதான் பிரதானமாகக் கேள்விக்குள்ளாக்கப்படும். `அவர்கள் உதவியில்லாமல் இவர்களால் ஜெயித்திருக்க முடியுமா?, தேர்தல் ஆணையத்தில் அரசின் பணம் விளையாடியிருக்கும்' என்பது போன்ற கருத்துகள், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது சர்வ சாதாரணமாக உலவிக்கொண்டிருக்கும். இப்படியான சர்ச்சைக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி. இவர் தேர்தல் ஆணையத்தில் 17-வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முக்கிய சர்ச்சை என்றால், பல கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவுதான். ஒரு தேர்தலில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இருபது வருடங்களாகப் பல கட்ட வாக்குப்பதிவுதான் நடத்தப்பட்டு வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் ஒன்பது கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்தினோம். மக்களின் பாதுகாப்புதான் அதற்குக் காரணம். ஒவ்வொரு வாக்காளரின் பாதுகாப்பும் முக்கியமானது.

அப்படியென்றால் பல கட்ட வாக்குப்பதிவுகளில் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதில்லை என்கிறீர்களா?

அரசியல் கட்சிகள் வெற்றி அடைவதற்கு நாங்கள் காரணமில்லை என்கிறோம். இப்படியான பல கட்ட வாக்குப்பதிவுகள் நடத்தப்படுவது, குறிப்பிட்ட சில நபர்களின் வெற்றிக்காகத்தான் என்கிற கருத்து, மக்களிடையே பொதுவாக நிலவுகிறது. அந்தக் கருத்து எங்கள் நேர்மையைப் பாதிக்கிறது. அது முற்றிலும் தவறான பார்வை. 

இதனால் தேர்தல் ஆணையத்திற்கு என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும்?

பெரிய தலைவர்களும் ஊடகங்களும்தான். பல கட்ட வாக்குப்பதிவுகள் நடக்கும்போது ஒவ்வொரு இடத்துக்குமான பிரசார தேதி வேறுபடுகிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களே தங்கள் பணபலத்தின் மூலம் தவறுகளில் ஈடுபடுகிறார்கள். 

இங்கே பணபலம்மிக்க கட்சி பாரதிய ஜனதாதான். அப்படியென்றால் நீங்கள் அவர்களைக் குற்றஞ்சாட்டுகிறீர்களா?

பண பலம் தொடர்பான இத்தகைய புகார்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும் வந்திருக்கிறது. எங்கள் கேள்வியெல்லாம் அவர்களின் தவறுக்காக, தேர்தல் ஆணையத்தின் நேர்மையை ஏன் மக்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதுதான். தேர்தல் ஆணையத்தின் நியமனங்களில்தான் பிரச்னை இருக்கிறது. அரசினால் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதால் தவறு எங்கே நடக்கிறது என்பதும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

ஆந்திராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. ஒடிசாவில் இரண்டு கட்டங்களில் நடத்தக்கூடிய வாக்குப்பதிவு, நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறதே, அது ஏன்?

காரணம் இல்லாமல் எதையும் தேர்தல் ஆணையம் செய்யாது. 2011-ல் தமிழகத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடத்தினோம். மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டங்களாக நடத்தினோம்.இத்தனைக்கும் இரண்டு மாநிலங்களும் ஒரே அளவுடையதுதான். தமிழகத்தில் ஆட்சியாளர்களிடம் பணபலம் அதிகம். மேற்கு வங்கத்தில் ஆயுத பலம் அதிகம். ஒரே சமயத்தில் வெவ்வேறு மாதிரியாக வாக்குப்பதிவுகள் நடத்த இதுதான் காரணம்.

ரம்ஜானுடன் தேர்தல் தேதி குளறுபடி ஏற்படுவதைக் குறித்து ஆணையம் அறிக்கை வெளியிட்டது போல மேற்கு வங்கம், ஒடிசாவில் பல கட்ட வாக்குப்பதிவுகள் நடத்தப்படுவது குறித்து ஏன் அவர்கள் எதுவும் விளக்கமளிக்கவில்லை?

இதில் தவறு ஆணையத்தின் பக்கம்தான். மக்கள் காரணங்களைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள். ஆணையம்தான் பேச வேண்டும். பேசினால்தான் நம்மைப் பற்றிய கேள்விகளுக்குத் தெளிவு ஏற்படும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் ஏன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது?

ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களைப் போல இல்லை. ஒரு மக்களவைத் தொகுதியின் கீழ் 13 அல்லது 14 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெறும். மற்ற மாநிலங்களிலும் இப்படித்தான் என்றாலும் அங்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் இங்கு தேவைப்படும் பாதுகாப்பும் வெவ்வேறானவை. அதனால்தான், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.