Published:Updated:

 "எங்கள் தொகுதியில் தீபா போட்டியிட வேண்டும்!” - குவியும் விருப்பமனுக்கள்

 "எங்கள் தொகுதியில் தீபா போட்டியிட வேண்டும்!” - குவியும் விருப்பமனுக்கள்
 "எங்கள் தொகுதியில் தீபா போட்டியிட வேண்டும்!” - குவியும் விருப்பமனுக்கள்

ஜெ.தீபா பேரவையின் சார்பாக, நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விருப்பமனுக்கள் இன்றும், நாளையும் பெறப்படுகின்றன. தங்கள் தொகுதியில் தீபா போட்டியிட, தொண்டர்கள் விருப்பமனுக்களைக் குவித்துவருவதாகக் கூறப்படுகிறது. நிதர்சன அரசியலில், இதை வெறும் கேலியாகக் கடந்து செல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில், தீபா பேரவை தனித்து போட்டியிடும் என ஜெ.தீபா அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, மார்ச் 16, 17-ம் தேதிகளில் விருப்பமனுக்கள் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இன்று காலை 9 மணி முதலே   100-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனுக்களைப் பெற, தி.நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். ஒரு விருப்பமனுவின் விலை 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமனு பெறுபவரின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டையின் நகல்களோடு, அவர்மீது குற்றப்பின்னணி உடைய வழக்குகள் பதிவாகியுள்ளதா என்கிற தகவலும் கேட்டுப் பெறப்படுகிறது.

விருப்பமனுக்களைப் பெற்றுக்கொண்டிருந்த தீபாவின் கணவரும், பேரவையின் துணைப் பொதுச்செயலாளருமான மாதவனிடம் பேசினோம். "கரூர், தருமபுரி, பெரம்பலூர், தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்களில் தீபா போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்கள் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். விரைவிலேயே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு, பிரசாரத்துக்குச் செல்ல முடிவெடுத்துள்ளோம். நாளையும் விருப்பமனுக்கள் பெறுவதால், அதன்பிறகே முழுத்தகவல் தெரியும்" என்றவரிடம், "தீபா தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது, சமூக வலைதளங்களில் வெறும் காமெடி பொருளாகிவிட்டதே" என்றோம்.

"சமூக வலைதளங்கள், நகரங்களைத் தாண்டி கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று பார்த்தால் உண்மை நிலவரம் தெரியும். இன்னமும் மக்களிடம் ஜெயலலிதாவின் வாரிசு என்கிற அன்பு, தீபா மீது உள்ளது. அவர்கள் ஊழலற்ற ஒரு தலைமையை எதிர்பார்க்கின்றனர். அது தீபாவால் தான் கொடுக்க முடியும்'' என்றவரிடம், ''நீங்கள் போட்டியிடுகிறீர்களா?'' என்றோம். ''வெறும் வழிநடத்துதல் மட்டும்தான். தேர்தலில் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கில்லை'' என்று முடித்துக்கொண்டார்.

தனித்துப் போட்டி என ஜெ.தீபா அறிவித்தது, சமூக வலைதளங்கள், இளைஞர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது. "தீபா தனித்துப் போட்டி என்பதை வெறும் நகைச்சுவையாகவே கடந்துவிட முடியுமா?" என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம். "நிச்சயமாக முடியாது. கிராமப்புறங்களில் உள்ள ஜெயலலிதாவின் அனுதாபிகள் மத்தியில் தீபாவுக்கு என்று ஒரு அனுதாபம் உள்ளது. 39 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து, அவர் பிரசாரத்தில் ஈடுபடும் பட்சத்தில், இரட்டை இலைக்கு விழும் வாக்குகளில் சில சதவிகிதத்தை தீபாவால் பிரிக்க முடியும். சமூகவலைதளங்கள், நகர்ப்புற கேலிப்பேச்சுகளைத் தாண்டி, தீபா மீது மக்கள் அனுதாபம் கொண்டுள்ளனர். இது, அவருக்கு பலம்தான். இதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்றார்.

தமிழகம் முழுவதும் கிராமத்துக்கு ஒரு தீபா பேரவை பேனர்கள் இருப்பதாகக் கூறும் பேரவை நிர்வாகிகள், ஒரு கிராமத்துக்கு நூறு வாக்குகளாவது பெறும் பட்சத்தில், ஒரு தொகுதிக்கு 20 ஆயிரம் வாக்குகளும், தமிழகம் முழுவதும் 8 லட்சம் வாக்குகளும் பெற்றிட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வட மாவட்டங்களில், பா.ம.க-வுக்கு எதிராகத் தீபா பிரசாரம் மேற்கொண்டால், பா.ம.க நிற்கும் தொகுதிகளில் குறிப்பிடத்தக்க இரட்டை இலை வாக்குகளை தீபாவால் பிரிக்க முடியும் எனவும் கணக்கிட்டுள்ளனர். கடந்த 2014 தேர்தலில், அ.தி.மு.க பெற்ற 44.96 சதவிகித வாக்குகளில், குறைந்தது ஐந்து சதவிகிதமாவது பெற்றுவிட வேண்டும் என்பது தீபா பேரவையின் எதிர்பார்ப்பு. கணக்கெல்லாம் சரிதான்... தீபா பிரசாரத்துக்குத் தயாராவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.