Published:Updated:

திண்டுக்கல் தி.மு.க வேட்பாளராகப் புதுமுகம்? - தலைமையை நினைத்து பூரிக்கும் தொண்டர்கள்

திண்டுக்கல் தி.மு.க வேட்பாளராகப் புதுமுகம்? - தலைமையை நினைத்து பூரிக்கும் தொண்டர்கள்
திண்டுக்கல் தி.மு.க வேட்பாளராகப் புதுமுகம்? - தலைமையை நினைத்து பூரிக்கும் தொண்டர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளில் நான்கு, தி.மு.க வசம் உள்ளன. நிலக்கோட்டை தொகுதி காலியாக உள்ளது. ஒரே ஒரு சட்டசபைத் தொகுதி மட்டும் அ.தி.மு.க வசம் உள்ளது. தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் தி.மு.க பலமாக இருக்கிறது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது என நினைத்து காங்கிரஸ் இந்தத் தொகுதியை கேட்டுப் போராடியது. ஆனால், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இந்தத் தொகுதியில் தி.மு.க போட்டியிட வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டு தொகுதியை வாங்கியிருக்கிறார். வேட்பாளராக, முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், சாணார்பட்டி விஜயன், ஒட்டன்சத்திரம் ஐவ்வாதுப்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி ஆகியோர் போட்டியில் இருந்தனர். இறுதியில், வேலுச்சாமி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.

 இவர், கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. இவரது மாமா, கட்சியில் கிளைச் செயலாளராக இருந்தவர். கட்சியில் சாதாரண தொண்டருக்கு தி.மு.க தலைமை சீட் வழங்கியிருப்பது தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தற்போதைய அமைச்சர் சீனிவாசன் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவரும் சூழலில், தி.மு.க நிர்வாகிகள் உற்சாகமாகப் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடப்போவது, அ.தி.மு.க-வா, பா.ம.க-வா எனக் குழப்பம் நீடித்துவருகிறது. இதனால், அ.தி.மு.க அணியில் இன்னமும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. தி.மு.க போட்டியிடுவதால், அ.தி.மு.க போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதனால், சோர்வில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.