Published:Updated:

20 தொகுதிகளில் 6 வாரிசுகள்.... - கருணாநிதி பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த ஸ்டாலின்! 

மலையரசு
20 தொகுதிகளில் 6 வாரிசுகள்.... - கருணாநிதி பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த ஸ்டாலின்! 
20 தொகுதிகளில் 6 வாரிசுகள்.... - கருணாநிதி பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த ஸ்டாலின்! 

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதே தேதியில் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கவுள்ளது. இதற்காகக் கட்சிகள் தீவிரமாக ரெடியாகி வருகின்றன. அதன்படி இன்று தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் 20 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 20 தொகுதிகளிலும் தெரிந்த முகங்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இதற்கு முன்பு போட்டியிட்ட நபர்கள் இந்த முறையும் சில தொகுதிகளில் இடம்பெற்றிருந்தனர். ஆ.ராசா, ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களுடன் கனிமொழி முதல் முறையாகத் தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளார். அவர் தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கௌதமசிகாமணி, கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் புதுமுகங்களாகவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். 

இந்த 20 பேரில் கனிமொழி, டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமி மகன்), தயாநிதி மாறன் (முரசொலி மாறன் மகன்), தமிழச்சி தங்கபாண்டியன் (தங்கபாண்டியன் மகள்), கதிர் ஆனந்த் (துரை முருகன் மகன்), கௌதமசிகாமணி (பொன்முடி மகன்), ஆகிய ஆறு பேர் வாரிசு வேட்பாளராகக் களமிறங்கியுள்ளனர். இந்த 20 பேரில் 3 பேர் மருத்துவர்கள், 5 பேர் வழக்கறிஞர்கள், பொறியாளர் ஒருவர், பட்டதாரிகள் 9 பேர் என மொத்தம் 18 பேர் பட்டதாரிகளாக உள்ளனர். மொத்தம் உள்ள 20 வேட்பாளர்களில் கனிமொழி, தமிழச்சி தங்கச்சிபாண்டியன் ஆகிய இருவர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.

அதேநேரம் இடைத்தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட 18 வேட்பாளர்களில் பலர் புதுமுகங்களாக உள்ளனர். இவர்களில் 4 பேர் வழக்கறிஞர்கள், பொறியாளர் இருவர், பட்டதாரிகள் 5 பேர் என மொத்தம் 11 பேர் பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ``தலைவர் கருணாநிதி கையாண்ட முறையிலேயே வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக நடந்துள்ளது. 19-ம் தேதியிலிருந்து பிரசாரத்துக்குச் செல்கிறேன். மதச்சார்பற்ற கூட்டணி என்பதை முன்னிறுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். தேர்தல் அறிக்கை கதாநாயகனாக, கதாநாயகியாக இருக்குமே தவிர வில்லனாக இருக்காது" என்றார்.