Published:Updated:

`எங்கள் உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ – வாக்காளர் அடையாள அட்டையை வீசியெறிந்த விவசாயிகள்…

`எங்கள் உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ – வாக்காளர் அடையாள அட்டையை வீசியெறிந்த விவசாயிகள்…
`எங்கள் உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ – வாக்காளர் அடையாள அட்டையை வீசியெறிந்த விவசாயிகள்…

விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகக் கூறி, வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த விவசாயிகளால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோட்டில் மொடக்குறிச்சி, சென்னிமலை, பவானி ஆகிய பகுதிகளில் விவசாய விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த போதிலும், வேலையை நிறுத்தாமல் தொடர்ந்து அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதற்கு இடையூறாக இருக்கும் விவசாயிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அரசின் இத்தகைய செயல்களால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொந்தளித்துக் கிடக்கின்றனர்.

இதனையடுத்து, கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் இன்று (மார்ச் -20) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், `வாக்காளர்களுக்கான எங்களுடைய உரிமைகள் இந்த அரசுகளால் பறிக்கப்படுவதால், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம். எனவே, எங்களுக்கு அரசினுடைய வாக்காளர் அடையாள அட்டை தேவையில்லை’ எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், வாக்காளர் அடையாள அட்டையினைப் போட்டனர். மேலும், தேர்தல் முடியும் வரை விவசாய விலை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

இதுகுறித்து வி.பி.குணசேகரன் கூறுகையில், ``இந்த உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்டுப் போராடிய 12 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசினுடைய இந்தப் போக்கை விவசாயிகள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தேர்தல் முடியும் வரை விவசாய விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். தொடர்ந்து வேலை நடைபெற்றால், அதை நாங்கள் தடுக்க முற்படுவோம். இதனால் தேவையில்லாத சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்காக நாங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனாலும், அ.தி.மு.கவினுடைய தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்னை சம்பந்தமான அறிவிப்புகள் எதுவும் வராதது வருத்தமளிக்கிறது. நடைபெறவிருக்கின்ற தேர்தலானது ஒட்டுமொத்த விவசாயிகளுடைய பிரச்னைகளைப் பேசக்கூடிய  தேர்தலாக அமையும். விவசாயிகளுக்காக யார் குரல்கொடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் விவசாயிகளின் வாக்கு திரளாகக் கிடைக்கும்” என்றார்.