Published:Updated:

செந்தில் பாலாஜியால் ஸ்டாலின் சாய்த்த அடுத்த விக்கெட்! - தி.மு.க-வில் இணைந்த வி.பி.கலைராஜன்

செந்தில் பாலாஜியால் ஸ்டாலின் சாய்த்த அடுத்த விக்கெட்! - தி.மு.க-வில் இணைந்த வி.பி.கலைராஜன்
செந்தில் பாலாஜியால் ஸ்டாலின் சாய்த்த அடுத்த விக்கெட்! - தி.மு.க-வில் இணைந்த வி.பி.கலைராஜன்

இன்றைய காலகட்டத்தில் திராவிடத்தைக் காக்கும் நல்ல தலைமை மு.க.ஸ்டாலின் மட்டும்தான் எனக் கூறுகிறார் சென்னை தி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ-வும் நேற்று மாலை தினகரனால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன்.
 

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கிய ஸ்டாலின், நேற்று தஞ்சாவூரில் பேசிய நிலையில், இன்று மாலை முசிறியை அடுத்த தா.பேட்டை பகுதியில் நடக்கும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தரை ஆதரித்துப் பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று இரவு திருச்சி வந்த ஸ்டாலின் திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை, கரைவேட்டி கட்டாமல், பேண்ட் சட்டையுடன் வந்த முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சந்தித்து தி.மு.க-வில் இணைந்தார். ஸ்டாலின் வி.பி.கலைராஜனுக்கு தி.மு.க வேஷ்டியைப் போர்த்தி வாழ்த்துக் கூறினார்.

அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன், “திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் உருவாக்கிய திராவிட இயக்கம் பட்டு போய்விடக் கூடாது என்பதற்காகவும் இன்னும் பல்லாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்கிற நம்பிக்கையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அதன் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் செயல்பட்டு வந்தேன். ஆனால், திராவிடத்தைக் காப்பாற்றும் ஒரே தலைவர் அண்ணன் ஸ்டாலின் மட்டும்தான் என்பதை உணர்ந்துதான் இப்போது தி.மு.க-வில் இணைந்துள்ளேன்.

மற்ற தலைவர்களெல்லாம், மத்திர அரசுக்கு எதிராகப் பேசக்கூட நடுங்கி வந்த நிலையில், எதைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல், மாநிலங்கள் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசுக்கு எதிராகவும் முழங்கி வரும் ஸ்டாலின்தான் சரியான தலைமை என்பதை உணர்ந்துள்ளேன். அவர் இடும் பணிகளைக் கழகத்தின் வழியில் நிச்சயமாகச் செய்து முடிப்பேன். மேலும், எனது பல்லாண்டு கால அரசியல் அனுபவத்தை நிச்சயமாகத் தி.மு.க-வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தி கட்சிக்காக உழைப்பேன். டி.டி.வி.தினகரனுடன் எனக்கு எந்த முரண்பாடோ, மனவருத்தமோ கிடையாது.

இன்று தமிழகத்துக்கு வந்துள்ள மிகப் பெரிய ஆபத்துகளைத் தடுப்பதற்கான மிகவும் வலிமையான தலைமை வேண்டும் என்று உணர்ந்து, தமிழக மக்களின் நலனில் கருத்தில்கொண்டு உழைக்கும் ஒரே  தலைவராக விளங்குகிற தமிழகத்தை காப்பதற்குத் தலைவர் ஸ்டாலினைத் தவிர, வேறு தலைமையில்லை என்பதை உணர்ந்துதான் தி.மு.க-வில் இணைந்துள்ளேன். தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் தெரியும். தமிழகத்தின் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் எனத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது தேர்தல் நேரம் என்பதால் நான் மட்டும் வந்து கழகத்தில் சேர்ந்துள்ளேன். விரைவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கண்டிப்பாக நிச்சயமாக இணைய உள்ளார்கள். மேலும், கட்சித் தலைமை உத்தரவுப்படி செயல்படுவேன்” எனக் கூறினார்.

அடுத்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியைவிட செந்தில் பாலாஜி, கலைராஜன் எனத் தொடர்ச்சியாக அ.ம.மு.க-விலிருந்து முக்கிய புள்ளிகளைத் தி.மு.க-வுக்கு இழுக்கும் சம்பவம் நடக்கிறதே எனும் கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், ``நாங்கள் யாரின் வளர்ச்சிகளையோ அல்லது மற்றக் கட்சிகளின் வளர்ச்சிகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. பாசிச மனப்பான்மையுடன் செயல்படும் மத்தியில் இருக்கிற அரசாங்கத்தையும் அவர்களுக்கு எடுபிடி வேலைபார்க்கும் மாநில அரசை அகற்றுவதையும்தான் சவாலாக ஏற்றுள்ளோம்.

இந்த ஆட்சிகளை அகற்றும் சவாலை ஏற்ற நாங்கள், திருவாரூர், அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் அடுத்து பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்துள்ளேன். இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எங்களைவிடப் பொதுமக்கள் மத்தியில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சிகளை அகற்றுவதற்கு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்கிறேன்” என்றார்.

அ.ம.மு.க-விலிருந்து முக்கியப் புள்ளிகளை இழுத்துவரும் ஸ்டாலின், சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்து கரூர் மாவட்ட செயலாளராகியுள்ள செந்தில்பாலாஜி மூலம் முதல்கட்டமாக வி.பி.கலைராஜனை தி.மு.க-வில் இணைத்துள்ளார். இன்னும் சில தினங்களில் அடுத்த விக்கெட்டுகள் விழும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.