Published:Updated:

`மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்!’ - வேட்புமனுத் தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜ்

`மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்!’ - வேட்புமனுத் தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜ்
`மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்!’ - வேட்புமனுத் தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் ராஜ்

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 


நடிகர் பிரகாஷ் ராஜ், சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகள்குறித்து கருத்து தெரிவித்துவருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது, பிரதமர் நரேந்திர மோடியை இவர் விமர்சித்திருந்தார். இதனால், பா.ஜ.க தலைவர்கள் பலரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர்.

சமூக வலைதளங்கள் மூலமாக, ஆளும் பா.ஜ.க அரசுமீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் பிரகாஷ் ராஜ், சமீபத்தில் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்திருந்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரகாஷ் ராஜ், `புதிய மாற்றத்துக்கான நேரம் இது. எனக்கான பொறுப்புகள் கூடியுள்ளன. உங்கள் அனைவரின் ஆதரவுடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன். தொகுதிகுறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்திலும் மக்களுக்கான அரசு வேண்டும்’ எனப் பதிவிட்டிருந்தார். அதன்பின்னர், வரும் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் ட்விட்டர் வாயிலாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆளும் பா.ஜ.க எம்.பியான பி.சி.மோகனை எதிர்த்து பெங்களூரு மத்தியத் தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார். பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அந்தத் தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. 

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ``தேசியக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகியவை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துவிட்டன. நான் மக்களின் குரலாக இருக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.