Published:Updated:

`வெறும் 100 ரூபாய்க்காக இவ்வளவு தூரம் வருவோமா?'- அ.ம.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அதிர்ந்த பெண்

`வெறும் 100 ரூபாய்க்காக இவ்வளவு தூரம் வருவோமா?'- அ.ம.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அதிர்ந்த பெண்
`வெறும் 100 ரூபாய்க்காக இவ்வளவு தூரம் வருவோமா?'- அ.ம.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அதிர்ந்த பெண்

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரெங்கசாமி ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதற்கு பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. `அ.தி.மு.க-வினருக்கு எங்க பலத்தை காட்டவும் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கவுமே இந்த ஏற்பாட்டைச் செய்ததாக உற்சாகமாக' கூறினர் அ.ம.மு.க நிர்வாகிகள்..

தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளரை அறிவித்தார். பின்னர் நேற்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன்படி தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கு எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரெங்கசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட பி.முருகேசன் என்பவரை அறிவித்திருந்தார். இந்த இரண்டு வேட்பாளர்களும் இன்று தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வேன்கள் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் அழைத்து வரப்பட்டனர். ஒரு பக்கம் தப்பாட்டம் மறுபக்கம் தொண்டர்கள் விசில் சத்தம் எனத் திருவிழா ரேஞ்சுக்கு கொண்டாடிக் கொண்டிருந்தனர் அ.ம.மு.கவினர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதைத் தாங்க முடியாமல் பெண்கள் நிழலைத் தேடி ஓடினர். இதனையடுத்து வந்த வேட்பாளர்கள் ரெங்கசாமி, முருகேசன் ஆகிய இருவர் மற்றும் நிர்வாகிகள் பலர் ஒன்றாகச் சேர்ந்து முதலில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பிறகு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ரெங்கசாமி ஜெயலலிதாவின் சிலையில் காலை தொட்டு வணங்கினார். அப்போது, `தொண்டர்கள் தியாகத்தலைவி சின்னம்மா, வருங்கால முதல்வர் தினகரன் மற்றும் வெற்றி வேட்பாளர்கள்' என அனைவருக்கும் வாழ்த்து கூறி கோஷமிட்டனர்.

வேன்களில் ஆட்களை அழைத்து வந்த நிர்வாகி ஒருவர் எல்லோரும் இறங்கும் போது எத்தனை பேர் இறங்குகிறார்கள் என எண்ணிக் கொண்டார். வந்திருக்கிற தலைக்குத்தான் காசு வராதவர்களுக்கு எல்லாம் பணம் கேட்கக் கூடாது எனக் கறார் காட்டினார். வெயிலால் சோர்வடைந்த வயதான பெண்மணி ஒருவர், 100 ரூபாய் தாரேன் எனச் சொன்னாங்க. அதனால் வந்தேன். அதை வாங்குறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவேன் போல' எனப் புலம்பினார். மானோஜிப்பட்டியிலிருந்து வந்திருந்த பெண் ஒருவர், `முதலில் 100 ரூபாய் தருவோம். பின்னர் பாக்கிப் பணம் தருவோம் எனக் கூறினார்கள். அதனால்தான் வந்தேன். வெறும் 100 ரூபாய்க்காக இவ்வளவு தூரம் வருவோமா அதோடு இவ்வளவு நேரம் நிற்போமா' என வெள்ளந்தியாகக் கூறினார். 

``தஞ்சாவூரில் அ.தி.மு.க-விற்கும் அ.ம.மு.க-விற்கும் இது வாழ்வா சாவா போராட்டம். அதனால் இருதரப்பும் சரியான போட்டியில் இருக்கின்றனர். மேலும் தினகரன் உறவுகள் வாழும் பகுதி. அதனால் இங்கு அவருக்கு செல்வாக்கு அதிக அளவில் இருக்கிறது. இங்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தினகரன் நினைக்கிறார். மேலும் அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி கொடுக்கவே பெரும் கூட்டத்தை திரட்டி மாலை அணிவிப்பதையே பெரும் விழா போல் எடுத்தோம். இதில் வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கொஞ்சம் மிரண்டுதான் போயுள்ளனர். முதல் அடி எங்க அடியாகத்தான் இருக்க வேண்டும் என்றே இந்த ஏற்பாடு. இதேபோல் இங்கு நாங்க பெறும் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது'' என்றனர் அ.ம.மு.க-வினர்.

இதே நேரத்தில் தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலில் மாற்று கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைத்திலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அ.ம.மு.கவினர் மாலை அணிவித்தது குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நேரம் யோசித்தவர் முதலில் அவர்கள் ஆடட்டும் க்ளைமாக்ஸில் நம்ப ஆடுவோம் என கூலாக தெரிவித்துள்ளார்.