Published:Updated:

``அண்ணன் ஜெயக்குமாரை நினைவிருக்கிறதா?”- பிரசாரத்தில் கலகலத்த உதயநிதி

``அண்ணன் ஜெயக்குமாரை நினைவிருக்கிறதா?”- பிரசாரத்தில் கலகலத்த உதயநிதி
``அண்ணன் ஜெயக்குமாரை நினைவிருக்கிறதா?”- பிரசாரத்தில் கலகலத்த உதயநிதி

``அமைச்சர் ஜெயக்குமார் அண்ணனை நினைவிருக்கிறதா?” என்று பிரசாரக் கூட்டத்தில் கேட்டு கலகலத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கௌதமசிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று சின்ன சேலத்துக்கு வந்த அவர், ``உங்களிடம் வாக்கு கேட்க வந்தது எனக்குப் பெருமை. தமிழகம் முழுவதும் மோடி எதிர்ப்பு அலை என்று கூறுகிறார்கள். அது மோடி எதிர்ப்பு அலை அல்ல ஸ்டாலின் அலை. தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் உதயசூரியன் கண்டிப்பாக உதிக்கத்தான் போகிறான். நம் தலைவர் கூறியது போல சகோதரர் ராகுல் காந்தியைப் பிரதமராக அமர வைக்கத்தான் போகிறோம். அதேபோல இந்தக் கேடுகெட்ட மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் போகிறோம். கறுப்புப் பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று சொல்லி மோடி வாக்கு கேட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. சொன்னபடி போட்டாரா, உங்கள் அனைவருக்கும் நாமம்தான் போட்டார்.

அந்தப் பணத்தை அவரது வங்கிக் கணக்கிலும், வெளிநாடுகளில் இருக்கும் அவரது நண்பர்கள் வங்கிக் கணக்கிலும் போட்டுக்கொண்டார். அதுமட்டுமல்ல மோடி இந்தியப் பிரதமரே கிடையாது. உலக அளவில் எந்த நாட்டுக்கும் இப்படி ஒரு பிரதமர் கிடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் நம் நாட்டிலேயே இல்லை. தைரியமாகச் சொல்கிறேன். என் மீது வழக்கு போட்டால் அதனை நீதிமன்றத்தில் சந்திக்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் காரிலிருந்து ஒரு பெண் கீழே தள்ளப்பட்டார். அந்தப் பெண் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்தச் சம்பவத்தை விபத்து என்று கூறி வழக்கை மூடிவிட்டனர். அதேபோல ஒரு பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு, தன்னை மோசடிக் கும்பல் ஒன்று வீடியோ எடுத்து மிரட்டுகிறது என்று தனது அண்ணனுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி நமக்குத் தேவைதானா. பொள்ளாச்சி விவகாரத்தில் முழுக்க முழுக்க அ.தி.மு.க அரசு துணை நிற்கிறது. அப்புறம் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணனை நினைவிருக்கிறதா. அவரிடம் ஒரு பெண் தனக்கு வேலை கேட்டுப் போயிருக்கிறார். ஆனால் அவர் அந்தப் பெண்ணை அம்போவென விட்டுவிட்டார். 

2011 தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். பேரவையில் இவர்கள் இருவரும் எப்படி அடித்துக் கொண்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா. நாங்கள் இல்லையென்றால் வார்டு கவுன்சிலராகக்கூட உங்களால் வந்திருக்க முடியாது என்று கூறினார் அந்த அம்மா. அதற்கு அண்ணன் விஜயகாந்த் கோபப்பட்டு, நாக்கை துருத்திக்கொண்டு அடிக்கவே போய்விட்டார். அப்போது, நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு உங்களைப் போன்ற கேடுகெட்ட கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் என்று சொன்ன அந்த அம்மா, இனி அந்தத் தவற்றை எப்போதும் செய்யமாட்டேன் என்றும் சொன்னார்கள். அதுமட்டுமல்ல அந்தாள் குடித்துவிட்டு பேரவைக்குள் வருகிறார் என்றும் சொன்னார்கள். அதற்கு நீங்கத்தான் ஊத்திக் குடுத்திங்களான்னு திருப்பிக் கேட்டார் விஜயகாந்த் அண்ணன். ஆனால், இப்போது இப்படி ஒரு கூட்டணி. அ.தி.மு.க-வின் உண்மையான பெயர் அநாதை தி.மு.க, மோடியின் அடிமைத் தி.மு.க, பினாமி அ.தி.மு.க.

சசிகலா காலில் எடப்பாடி எப்படி விழுந்தார் ஞாபகம் இருக்கா. பத்து வயதுக் குழந்தையைப் போல பாவமாகத் தவழ்ந்து போய் முதல்வர் பதவியைப் பிடித்துக்கொண்டு, அந்த அம்மாவை சிறைக்கு அனுப்பிவிட்டார். அந்த அ.தி.மு.க ஆட்சிக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும். அம்மா ஆட்சி என்று கூறுகிறார்களே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா அந்த ஆட்சியில். இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சிக்கு முடிவுரை வழங்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா. கருணாநிதியின் பேரனாக, ஸ்டாலின் மகனாக உங்கள் பொற்பாதங்களைத் தொட்டு கேட்கிறேன் நமது வெற்றி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு