Published:Updated:

வேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்?

லோகேஸ்வரன்.கோ
வேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்?
வேலூரில் துரைமுருகன், ஏ.சி. சண்முகம்... யார் கௌரவம் காப்பாற்றப்படும்?

‘‘வேலூர் தொகுதியில் வெற்றிக் கனியைப் பறிப்பது, கௌரவப் பிரச்னை. வாழ்வா, சாவா..? என்ற போர்க் குணத்துடன் இருக்கிறோம்’’ என்று தேர்தல் களத்தில் சீறுகிறார் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன். அதே மன ஓட்டத்தில் துரைமுருகன் மகன் மீது பாய்கிறார் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள். ஏ.சி. சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலேயே தேர்தலை எதிர்கொள்வதால், இரட்டை இலை, உதய சூரியன் சின்னங்கள் நேரடியாக மோதுகின்றன. சமீபத்தில் துரைமுருகன் பேசிய வார்த்தைகள், தேர்தல் களத்தில் எதிரொலிக்கின்றன. ‘‘கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்குமே, வாழ்வா, சாவா பிரச்னைதான். ஒருபக்கம் மோடியும், அ.தி.மு.க-வும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாம், ஜனநாயக ரீதியில் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க வெற்றிபெற்றால் அவர்களின் ஆட்சி நீடிக்கும். தி.மு.க வெற்றிபெற்றால், அடுத்த கால் நூற்றாண்டு நம்முடைய ஆட்சிதான் தொடரும். டெல்லியைக் கைப்பற்றிவிடலாம். ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் பணத்தைக் கொட்டி ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அதெல்லாம் நடக்காது. சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை வெற்றிக் கனியாக மாற்றி, தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவேண்டும்’’ என்று அனல் தெறிக்கப் பேசியிருந்தார்.

அதுவரை, ஏ.சி.சண்முகம் பக்கம் வீசிய அலை, கொஞ்சம் கொஞ்சமாக துரைமுருகன் பக்கம் திரும்பியுள்ளது. ‘துரைமுருகனின் மகன்’ என்பதைத் தவிர வேறு தகுதி இல்லை என்ற விமர்சனத்தையும் கதிர் ஆனந்த் எதிர்கொண்டு வருகிறார். "அறிவாலயத்தில் தந்தை இருப்பதால்தான், இதுநாள்வரை வெளிப்படை அரசியலைத் தவிர்த்தேன். தொகுதிப் பிரச்னைகளை முழுமையாக அறிந்தவன். தந்தை துரைமுருகன் வழியில் மக்களுக்காக உழைப்பவன்" என்று சீறுகிறார். இதனால் ஏ.சி.சண்முகம் மற்றும் அ.தி.மு.க.வினர் சற்றே வாயடைத்துதான் போயிருக்கின்றனர். இந்த நிலையில், துரைமுருகன் மற்றொரு சவால் விட்டிருக்கிறார். ‘‘18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அ.தி.மு.க ஆட்சியை நானே கவிழ்ப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

‘பொறுத்தது போதும்...’ என்று அமைச்சர் கே.சி. வீரமணியின் கையைவிடாமல் பிடித்துக்கொண்டு, தொகுதி முழுவதும் வலம்வரும் ஏ.சி.சண்முகம், துரைமுருகனின் மகனைத் தாக்கிப் பேசுவார் என்று பார்த்தால், அமைச்சர் வீரமணியை சாடும்வகையிலேயே பேசியது, அ.தி.மு.க-வினரைக் கடுப்பாக்கியது. ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, 'நான்தான் வெற்றிபெறுவேன்' என எல்லோரும் சொன்னார்கள். அமைச்சர் வீரமணி கடைசி நேரத்தில், எல்லா சாமர்த்தியங்களையும் காட்டி, என்னைத் தோற்கடித்தார். அதே வீரமணி, இந்தத் தேர்தலில் என்னுடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார். என் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க எம்.ஜி.ஆர் ஆவியும், ஜெயலலிதா ஆவியும் அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது" என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஏ.சி. சண்முகம். இதனால் தொண்டர்கள் மத்தியில் கலகலப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. "இவரென்ன ஒரே டயலாக்கை வைத்துக்கொண்டு அமைச்சரையும், அ.தி.மு.க-வையுமே சாடுகிறார். இப்படியே பேசினால், துரைமுருகன் மகனுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும். தந்தை மற்றும் மகனை விமர்சிக்காமல் இருந்தால் ஓட்டு கிடைக்காது. தி.மு.க வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்" என்று அ.தி.மு.க. ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தாமதமாகச் சுதாரித்துக்கொண்ட ஏ.சி.சண்முகம், தி.மு.க-வை விமர்சிக்கவும், துரைமுருகன் மகன் மீது பாயவும் தற்போது முழுவேகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். 

இருவரும், இந்தத் தேர்தலை கௌரவப் பிரச்னையாகவே பார்க்கின்றனர். மகனை எம்.பி-யாக்கிப் பார்ப்பது, துரைமுருகனின் நீண்டகால கனவு. தன்னுடைய சொந்த மாவட்டத்தில் மகன் தோல்வியடையக் கூடாது என்று வேகமெடுத்திருக்கிறார் அவர். கடந்த தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் தோல்வியைத் தழுவிய ஏ.சி.சண்முகம், இந்தமுறை அதே தொகுதியில் வெற்றி பெறுவதை மிகப்பெரிய கௌரவமாக நினைக்கிறார். இதனால், வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகனுக்கும், ஏ.சி.சண்முகத்துக்கும் கடும் போட்டி நிலவுகிறது.