Published:Updated:

`தன்னைச் சுற்றி அறிவாளிகள் இருப்பதை மோடி விரும்புவதில்லை!’ - காங்கிரஸ் விமர்சனம்

`தன்னைச் சுற்றி அறிவாளிகள் இருப்பதை மோடி விரும்புவதில்லை!’ - காங்கிரஸ் விமர்சனம்
`தன்னைச் சுற்றி அறிவாளிகள் இருப்பதை மோடி விரும்புவதில்லை!’ - காங்கிரஸ் விமர்சனம்

`பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு காதல் கடிதம் எழுதி; அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டு, பிறந்தநாளை சிறப்பித்த மோடி எங்களை குற்றம்சாட்டுவது வேடிக்கை' என காங்கிரஸ் கட்சி கிண்டலடித்துள்ளது.

``பாகிஸ்தானில் காங்கிரஸ் போட்டியிட்டால் வெற்றி பெறலாம்'' என்று பா.ஜ.க தலைவர் ராம் மாதவ் கூறியிருந்தார். அவருக்கு பதிலடிகொடுக்கும் வகையில், அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகாய், ``பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு காதல் கடிதம் எழுதியவர்தான் மோடி என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டு, பிறந்தநாளை கொண்டாடிவிட்டு நம்மை குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிதான் பாகிஸ்தானை தனியாகப் பிரித்து, இரண்டு நாடுகளாக உருவாக்கியது. வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை, ஊழல், 15 லட்சத்தை வங்கியில் போடுவதாகச் சொன்னது, இப்படி பல பிரச்னைகள் இருக்க, இதுபோன்ற வெற்றுப் பேச்சுகளைப் பேசி மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறது பா.ஜ.க.

வாஜ்பாய் அரசில் முக்கியப் பங்கு வகித்தவர் அத்வானி. ஆனால், அவர் இன்று சொந்தக் கட்சியிலே புறக்கணிப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்ல, பல மூத்த தலைவர்களின் நிலையும் பா.ஜ.க-வில் அப்படித்தான் இருக்கிறது. அருண்ஜோரி உள்ளிட்டவர்களின் நிலையும் இதே. அவர்கள் அனைவரும் அறிவாளிகள். தன்னைச் சுற்றி அறிவாளிகள் இருப்பதை மோடி ஒருபோதும் விரும்புவதில்லை. பா.ஜ.க தோற்றுவிட்ட அரசாங்கம். 2014-ம் ஆண்டு அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

மோடிக்கு எதிராக நாங்கள் சண்டையிடவில்லை; பிரிவினை, இனவாத, பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துதான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தேர்தல் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய சவாலான தேர்தல்'' என்றார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஹிமந்த் பிஸ்வா ஷர்மாவுக்கு மக்களவை தொகுதி ஒதுக்கப்படாதது குறித்து பேசுகையில், ``அவருக்கு முதலில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, பின்னர் அவரது பெயரை நீக்கியிருப்பது பெரும் அவமானம். அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால், மோடிதான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்'' என்றார்.