Published:Updated:

தி.மு.க முதல் `நாம் தமிழர்' வரை... சுகாதாரத்துறையில் அக்கறை செலுத்தும் தேர்தல் அறிக்கை எது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தி.மு.க முதல் `நாம் தமிழர்' வரை... சுகாதாரத்துறையில் அக்கறை செலுத்தும் தேர்தல் அறிக்கை எது?
தி.மு.க முதல் `நாம் தமிழர்' வரை... சுகாதாரத்துறையில் அக்கறை செலுத்தும் தேர்தல் அறிக்கை எது?

அ.ம.மு.கவின் `சிங்கிள் பேரன்ட்' குழந்தைகளுக்கு தனிவாரியம், பா.ம.கவின் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த புதிய செயல்திட்டம், நாம் தமிழர் கட்சியின் `சமத்துவ மருத்துவ முறை' ஆகியவை சிறப்பு அம்சங்களாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. 

ந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாள்களில் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலிருந்து போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கைகளில் மக்களின் சுகாதாரத்தை முன்னிறுத்தி வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் குறித்துப் பார்ப்போம். 

திராவிட முன்னேற்றக் கழகம் 

* பொது சுகாதாரத் திட்டங்களுக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவிகித அளவுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* தமிழகத்தில் மதுரையுடன் மேலும் இரண்டு இடங்களில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (எய்ம்ஸ்) நிறுவ மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*  சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி போன்ற இயற்கை மருத்துவ முறைகளை நாடிச்சென்று கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். எனவே, ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தைப் போல, இந்திய மருத்துவ முறைகளில் மேல்நிலை ஆராய்ச்சிகள் மேற்கொள்ள சித்தா மற்றும் யுனானி மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்றினை நிறுவிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* அத்தியாவசிய மருந்துகளின் விலைகளைக் கட்டுக்குள் வைத்திட உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்.

* மத்திய பட்ஜெட்டில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல், தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்தை வலுப்படுத்திட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேர்வதற்கு தற்போது நடத்தப்படும் `நீட்' தேர்வை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்துவோம்.

* 2020 -ம் ஆண்டின்போது உலகளவில் முதியோர் மக்கள்தொகை 100 கோடியாகவும், இந்தியாவில் 14.2 கோடியாகவும் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, முதியோர் நலன்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். முதியோர் வாழ்வாதாரம், உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் தி.மு.க அக்கறை கொண்டுள்ளது.

* தி.மு.க ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்குத் தேவையான அறுவை சிகிச்சை இலவசமாகச் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சலுகை இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளுக்குக் கிடைக்க வேண்டும். மாநிலங்களவையில் ஏற்கெனவே தி.மு.கவால் கொண்டு வரப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்ட தனிநபர் மசோதா அடிப்படையில் ஒரு முழுமையான சட்டத்தைக் கொண்டு வர தி.மு.க முயற்சிகள் மேற்கொள்ளும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 

* தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கு `நீட்' தேர்வினை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட சமூகத்திலிருந்து சுமார் 85 சதவிகித மாணவர்கள் `நீட்' தேர்வினை எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழக மாணவர்கள் தற்போது மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டங்களில் தக்கத் தகுதியினைப் பெறும்வரை 'நீட்' தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மக்கள் நீதி மய்யம் 

* ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதிப்புகள் ஐந்து ஆண்டுகளில் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் அரசால் நடத்தப்படும்.

* இலவச உடல் பரிசோதனை மையங்களும், மாசு அதிகமுள்ள இடங்களில் இலவச புற்றுநோய் மருத்துவமனைகளும் அமைக்கப்படும். முதல் மருத்துவமனை தூத்துக்குடியில் நிறுவப்படும்.

* மாநில அரசு மற்றும் மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டர் இடைவெளியில் முதலுதவி வசதி கொண்ட ஓய்வு மையங்கள் அமைக்கப்படும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

* பெண்கள் பருவம் எய்தும் காலம் தொடங்கியதும் அவர்களின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்புத் தொடங்கி கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்கள் கல்வி கற்கும் வளாகத்திலேயே மருத்துவப் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு மாணவிக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் அவர்களின் மருத்துவக் குறிப்புகளை பதிவு செய்து கண்ணி மயமாக்கி பாதுகாக்கவும் வழிவகை செய்யப்படும். இதன் மூலம் பள்ளி முதல் கல்லூரி தொடங்கி எந்த ஊரில், எந்தக் கல்வி நிலையத்தில் பயின்றாலும் அடையாள எண்ணைக் குறிப்பிட்டு தொடர் மருத்துவ அறிவுரைகளையும், சிகிச்சைகளையும் எளிதில் பெற வாய்ப்பு ஏற்படும்.

* ஆறாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவசமாக `சானிட்டரி நாப்கின்' வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் ஒரு பெண் ஆசிரியையின் மேற்பார்வையில் சங்கடம் இல்லாமல் இந்த இலவச விநியோகம் நடக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும்.

* அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கென்று சிறப்பு உளவியல் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். பணிக்குச் செல்லும் பெண்களும் வயது வித்தியாசமின்றி இந்த உளவியல் ஆலோசனைகளை இலவசமாகப் பெறலாம்.

*'சிங்கிள் பேரன்ட்' குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு அவர்களுக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வுகாண மாவட்டந்தோறும் உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் காவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த வசதியைப் பெறுவதற்கு உயர் அதிகாரிகளின் அனுமதி தடையாக இல்லாத நிலை உறுதிப்படுத்தப்படும்.

* மருத்துவப் பட்டதாரிகள் தனியாகவோ, ஒரு குழுவாகவோ இணைந்து அவசியமும், தேவையும் உள்ள கிராமப் பகுதிகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கக் குறைந்தது 20 லட்ச ரூபாய் வரை கடனுதவி செய்யப்படும்.

* கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் மருத்துவராகும் கனவை நனவாக்கும் வகையில் 'நீட்' தேர்வை ரத்துசெய்து, மீண்டும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்வி சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிகள் எந்தவித கட்டுப்பாடின்றியும் இலவச சிகிச்சை பெறுவது உறுதி செய்யப்படும். 

* மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கான காப்புத்தொகையை அரசே செலுத்தும் வகையில் கொள்கை முடிவு எடுக்கப்படும்.

* குடிப்பழக்கத்திலிருந்து மீளும் நபர்களுக்கு உரிய உடல் மற்றும் மன ரீதியான சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள மாவட்டந்தோறும் குடி மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

பாட்டாளி மக்கள் கட்சி 

* மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வலியுறுத்துவோம். ஏதேனும் மாநிலங்கள் விரும்பினால் மட்டும் அவை நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கலாம்.

* அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

* மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

* சென்னையில் 1,000 கோடி செலவில் தேசிய புற்று நோய் மருத்துவ மையம் அமைக்க வலியுறுத்தப்படும்.

* புற்றுநோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைக்குத் தனி கவனம் செலுத்தப்படும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சைக்காகத் தனிச் சுழல் நிதி நிறுவப்பட்டு ஏழை மக்களுக்குத் தரமான இலவச சிகிச்சை வழங்கப்படும்.

* அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் 24 மணி நேரமும் அவசர முதலுதவி தரும் மருத்துவமனைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும்.

* கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு கால நிதியுதவி 5,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

* 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கப்படும். தமிழகத்தின் எந்த மூலைக்கும் 10 நிமிடங்களில் சென்றடையும்படி செய்யப்படும்.

* இதய நோய்கள், சர்க்கரைநோய், புற்றுநோய், மூச்சுக்குழல் நோய் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். 

* கிராமம் தொடங்கி நகரம் வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு திடல்கள் உருவாக்கப்படும்.

* பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ `ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்.

* நாடு முழுவதும் நலவாழ்வு மேம்பாடு ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையங்கள் புகையிலை, மதுபானம், நொறுக்குத்தீனி ஆகியவற்றுக்குக் கூடுதல் வரிவிதித்து அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும். நல்வாழ்வு பரப்புரையிலும் இந்த ஆணையம் ஈடுபடும்.

* உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள எம்- பவர் (M - power) செயல் திட்டத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.

* அரசு மருத்துவமனைகளில் புகையிலை மீட்பு மையங்கள் அமைக்கப்படும். கட்டணமில்லாத தொலைபேசி வழியாக புகையிலை மீட்பு வழிகாட்டுதல் வழங்கப்படும்.

* பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொரு பெண் குழந்தைக்கும், அவர்களின் 18 வயதில் 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்ய வலியுறுத்துவோம்.

* தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான ஆரம்ப சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்கப் பாடுபடுவோம்.

நாம் தமிழர் கட்சி 

* அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்லும் பெண்களின் கைக்குழந்தைகளைப் பராமரிக்க வசதியாக அவர்கள் பணியிடத்தில்    'குழந்தை பராமரிப்பு மையம் `கட்டாயம் அமைக்கப்படும்.

* அனைவருக்கும் சரியான சமமான, தரமான இலவச மருத்துவம் அளிக்கப்படும்.

* சிறப்பு மற்றும் உயர்தர மருத்துவம் என்றால் சென்னைக்கு வரவேண்டும் என்ற நிலையை மாற்ற, சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் கொண்டுவரப்படும்.

* சர்க்கரைநோய், இதய நோய், ரத்த அழுத்த பாதிப்புகள் வருமுன் காக்கவும், வந்தபின் கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவ முறை கொண்டு வரப்படும். சுகாதாரத் துறையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மரபு வழி மருத்துவத்துக்குத் துணை அமைச்சகம் ஏற்படுத்தப்படும்.

* ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர், மற்றும் ஆங்கில மருத்துவம் இணைந்த `சமத்துவ மருத்துவ முறை' செயல்படுத்தப்படும்.

* `நீட்' தேர்வு முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

*  உடல் தானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் விவரத்தை ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தேர்தல் அறிக்கைகளைப் பொறுத்தவரை, `நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது பெரும்பாலான கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது. தவிர, தி.மு.கவின் இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கான இலவச அறுவை சிகிச்சை, ம.நீ.ம வின் நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையங்கள் திட்டம், அ.ம.மு.கவின் 'சிங்கிள் பேரன்ட்' குழந்தைகளுக்குத் தனி வாரியம், பா.ம.கவின் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த புதிய செயல்திட்டம், நாம் தமிழர் கட்சியின் 'சமத்துவ மருத்துவ முறை' ஆகியவை சிறப்பு அம்சங்களாக விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு