Published:Updated:

சேஷன், கில், லிங்டோ... இந்திய தேர்தல் ஆணையத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த மூவர்!

டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.என்.சேஷனுக்கெதிராக, அன்றைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வினர், சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து விமான நிலையத்திலேயே ஆறு மணி நேரமாகத் தங்கியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையையடுத்து, தமிழக டி.ஜி.பி ஸ்ரீபால் தலைமையில் போலீஸார் அவரைப் பாதுகாப்பாக மீட்டுவந்தனர்.

சேஷன், கில், லிங்டோ... இந்திய தேர்தல் ஆணையத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த மூவர்!
சேஷன், கில், லிங்டோ... இந்திய தேர்தல் ஆணையத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த மூவர்!

ஜனநாயகத்தின் முக்கியப் பங்களிப்பே, தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதுதான். ஆனால், தற்போதைய சூழலில், இடைத்தேர்தலை நடத்துவதற்கே நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை நிலவுகிறது. தேர்தல் கமிஷன், மத்திய அரசின் கட்டளைக்குப் பணிந்தும், தமிழக அரசின் விருப்பத்துக்கு ஏற்றவாறும் செயல்படுவதாகத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைக் கடைசி நேரத்தில் ஒத்திவைத்தது, தேர்தல் கமிஷனுக்கே தினகரன் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது, தமிழகத்தில் நடைபெற வேண்டிய பல தொகுதிகளின் இடைத்தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்தது எனத் தேர்தல் கமிஷன் மீது அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவிவருகிறது. 

இத்தகைய சூழலில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கான தனித்தன்மையை நிலைநாட்டும்விதமாக, மத்திய - மாநில அரசுகளுக்குக் கட்டுப்படாமல் நியாயமான முடிவுகளைத் துணிச்சலாக எடுத்த மூவரை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையர் என்று நினைக்கும்போதே, நம் மனக்கண் முன்பு கம்பீரமாக வந்து நிற்பவர் டி.என்.சேஷன். 1990 டிசம்பர் 12 முதல் 1996 டிசம்பர் 11  வரை 6 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். அவர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு வரை ஒப்புக்கு இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகுந்த கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார். அதற்கு முன்பு வரை பொதுத்தேர்தல் என்றாலே கணக்குவழக்கில்லாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பதை அரசியல் கட்சிகள் வழக்கமாகக்கொண்டிருந்தன. அவற்றுக்குக் கடிவாளமிட்டு, ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தியது இவரது முக்கிய சாதனை. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் அரசு எந்தவிதச் சலுகையும் அறிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தார். 

1995-ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்திக்காட்டினார். அதே ஆண்டில், டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.என்.சேஷனுக்கு எதிராக அன்றைய ஆளும்கட்சியான அ.தி.மு.க-வினர், சென்னை விமானநிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து விமானநிலையத்திலேயே 6 மணி நேரமாகத் தங்கியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையையடுத்து, தமிழக டி.ஜி.பி ஸ்ரீபால் தலைமையில் போலீஸார் அவரைப் பாதுகாப்பாக மீட்டுவந்தனர். பிறகு, சேஷன் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலும் அ.தி.மு.க-வினரால் தாக்கப்பட்டது. இதுபோல் எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் தனது செயல்பாட்டில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதவர் அவர்.

இவருக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற எம்.எஸ்.கில் 2001 ஜூன் 13 வரை பதவிவகித்தார். அவரது பதவிக்காலத்தில்தான் இந்திய தேர்தல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாக, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது, நீண்ட வரிசையில் மணிக்கணக்காக வாக்களிக்கக் காத்திருப்பது போன்றவற்றில் மாற்றம் நிகழ்ந்தது. தேர்தலுக்கான செலவுகளும் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.

இவரையடுத்து பதவிக்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம்.லிங்டோ 2004 பிப்ரவரி 7 வரை பதவிவகித்தார். தீவிரவாதத்தின் பிடியிலிருந்த காஷ்மீரில் சிறப்பான முறையில் தேர்தலை நடத்தியது அவரது மகத்தான சாதனை. அதைப் பாராட்டும்விதமாக அவருக்கு `மகசேசே’ விருது வழங்கப்பட்டது. குஜராத் கலவரம் நடந்து முடிந்த சூழலில், உடனடியாகத் தேர்தலை நடத்த அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி முடிவுசெய்தார். ஆனால், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், முகாம்களில் தங்கி இருந்த சூழலில் தேர்தலை நடத்துவது சரியில்லை என்பதை உணர்ந்து, தேர்தலைத் தள்ளிவைத்தார் லிங்டோ. அதற்காக அவரை இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும், கிறிஸ்துவர் என்றும் மோடி கடுமையாக விமர்சித்தார். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உறுதியாகச் செயல்பட்டவர்தான் லிங்டோ.

இப்படியாக தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் பார்வையையே மாற்றி அமைத்தவர்களில் இந்த மூவரும் முக்கியமானவர்கள். இன்றைய தினம், சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள் அதிகமின்றி, அதிக ஆர்ப்பாட்டமின்றி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது என்றால், இதற்கு அடிப்படை இவர்களே!