Published:Updated:

நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?

நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?
நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தேர்தலில் அதிக ஓட்டுகள் பதிவானால், அது யாருக்குச் சாதகமாக அமையும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?

நாடாளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என எதற்குத் தேர்தல் நடைபெற்றாலும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். சமீப காலமாக இது தொடர்பான விழிப்புணர்வு வாக்காளர்களிடையே ஓரளவு அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும், கடும் வெயில், விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழிக்கலாம், யாருக்கு வாக்களித்து என்ன எனக்கு ஆகப்போகிறது என்பது போன்ற சலிப்பான காரணங்களால் வாக்காளர்களில் ஒரு பிரிவினர் இன்னமும் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

இத்தகைய பிரிவினரையும் கட்டாயம் வாக்களிக்க வைக்க வேண்டும் என்பதற்கான பிரசாரமும், நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஒருபுறம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. இந்த நிலையில்தான், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களையும், மோகன் லால், நாகார்ஜூனா, சச்சின், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் சிலரையும் குறிப்பிட்டு, ``மக்கள் அனைவரையும் வாக்களிக்கச் சொல்லுங்கள், நீங்கள் சொல்லும் போது உங்களது குரலை மக்கள் அதிகம் கவனிப்பார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் வாக்களிப்பதில் மிகப் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு அவர்களும் பதிலளித்திருந்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?

இந்த நிலையில், அதிக சதவிகித வாக்குகள் பதிவானால் அது நிச்சயம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியதற்கு அதிக சதவிகித வாக்குப் பதிவும் முக்கியக் காரணம் என்று தேர்தல் விஷயங்களை அலசி ஆராயும் அரசியல் நிபுணர்கள், புள்ளி விவரங்களுடன் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் போன்ற ஓரிரு மாநிலங்களைத் தவிர்த்து, எந்தெந்தத் தொகுதிகளிலெல்லாம் பா.ஜ.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெற்றி பெற்றனவோ அங்கெல்லாம் பதிவான வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அந்தத் தொகுதிகளில் அதிக சதவிகித வாக்குகள் பதிவானதைப் பார்க்க முடியும். 

2009-ம் ஆண்டு தேர்தலில் பதிவானதைவிட 2014-ம் ஆண்டு தேர்தலில் 15 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான தொகுதிகளிலெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி 70 -க்கு 67 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. அதாவது 96 சதவிகித வெற்றி விகிதம். அதே சமயம் குறைந்த சதவிகித வாக்குகள் பதிவான தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணியின் வெற்றி விகிதமும் குறைந்துள்ளது. 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 10 முதல் 15 சதவிகிதம் வரை மட்டுமே அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணியின் வெற்றி விகிதம் 86 சதவிகிதமாக இருந்துள்ளது.

வெறும் 0.1 முதல் 9.9 சதவிகிதம் வரை மட்டும் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளில் இக்கூட்டணியின் வெற்றி விகிதம் 46 சதவிகிதமாக இருந்துள்ளது. வாக்கு சதவிகிதத்தில் மாற்றமே இல்லாத தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி விகிதம் வெறும் 34 சதவிகிதம் மட்டுமே இருந்துள்ளது. 

எனவே, இந்தத் தேர்தலிலும் அதிக சதவிகித வாக்குகள் பதிவானால், அது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மேற்கூறிய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தல்: அதிக ஓட்டு பதிவானால் யாருக்கு வெற்றி?

இந்தத் தேர்தலில், 18 வயது பூர்த்தியடைந்த புதிய இளம் வாக்காளர்கள் சுமார் 4.5 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களையும், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாமல் இருக்கும் வாக்காளர்களையும் வாக்குச் சாவடிக்கு நகர்த்திக் கொண்டு வந்தால்தான் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும். 

இந்தப் பின்னணியில்தான், பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களைக் கவரும் சச்சின், ரஹ்மான் போன்ற பிரபலங்களுக்கு, ``மக்கள் அனைவரையும் வாக்களிக்கச் சொல்லுங்கள்" என வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.