Published:Updated:

`அவரிடம் கொடுப்பதுதான் முறை!’ - கட்சி அலுவலக செக்யூரிட்டியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த பா.ஜ.க எம்.பி

`அவரிடம் கொடுப்பதுதான் முறை!’ - கட்சி அலுவலக செக்யூரிட்டியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த பா.ஜ.க எம்.பி
`அவரிடம் கொடுப்பதுதான் முறை!’ - கட்சி அலுவலக செக்யூரிட்டியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த பா.ஜ.க எம்.பி

கட்சி நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.பி ஒருவர், ராஜினாமா கடிதம் எழுதி, அதை கட்சி அலுவலகத்தின் காவலாளியிடம் கொடுத்திருக்கிறார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியைத்தக்க வைக்க பா.ஜ.கவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாட்டின் பாதுகாவலர்கள் என்கிறரீதியில் பா.ஜ.க சமூக வலைதளங்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. ட்விட்டரில் தங்களது பெயர்களுக்கு முன்னால் பாதுகாவலர் என்று பொருள்படும் சௌகிதார் (Chowkidar) என்ற சொல்லை சேர்த்து வருகிறார்கள். பிரதமர் மோடி இதை முதல் ஆளாகச் செய்யவே, மற்றவர்கள் அதைப் பின்பற்றி தங்களின் கணக்குகளின் பெயரை மாற்றினர். 

இந்த நிலையில், உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.பி ஒருவர் கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்திருக்கிறார். ஹர்தோய் தொகுதி எம்.பியான அன்சுல் வர்மா, 21 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில் பா.ஜ.க வெல்ல தான் காரணமாக இருந்ததாகச் சொல்கிறார். ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை, தனக்கு சீட் கொடுக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த அவர், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்தமுறை அவருக்குப் பதிலாக ஜெய்பிரகாஷ் ராவத் என்பவரை பா.ஜ.க தலைமை ஹர்தோய் தொகுதியில் களமிறக்கியிருக்கிறது. கடந்த 1990-களில் பா.ஜ.க எம்.பியாக இருந்த அவர், சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்து கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றார். பின்னர், அவர் கடந்த 2018-ல் பா.ஜ.க-வில் மீண்டும் இணைந்தார். 

ஹர்தோய் தொகுதி மக்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளால் கூட சந்திக்கமுடியாதபடி எம்.பி அன்சுல் வர்மா இருந்ததால், அவருக்கு இந்தமுறை வாய்ப்பு வழங்கவில்லை என்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள அன்சுல் வர்மா, `நான் வளர்ச்சிக்காக பணியாற்றினேன். நான் அன்சுல் ஆகவே இருக்க விரும்புகிறேன். நான் சௌகிதார் (பாதுகாவலர்) ஆக விரும்பவில்லை’ என்று கூறினார். 

மேலும், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு ராஜினாமா கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தை மற்ற யாரிடமும் கொடுப்பதைவிடவும் சௌகிதாரிடம் கொடுப்பதுதான் முறை என்று கூறி, பா.ஜ.க அலுவலகத்தின் பாதுகாவலரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.