Published:Updated:

மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா மம்தா பானர்ஜி...!

மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா மம்தா பானர்ஜி...!
மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா மம்தா பானர்ஜி...!

கால் நூற்றாண்டு காலமாக மார்க்சிஸ்ட்களின் மகத்தான கோட்டையை உடைத்தவர் மம்தா பானர்ஜி. ஒருபுறம் மார்க்சிஸ்ட்களையும், மற்றொரு புறம் பரிவாரங்களையும் சமாளித்து அவர் ஆடும் அரசியல் ஆட்டம், இந்தியப் பெண்களின் போர்க்குணத்துக்கான புதிய வரலாற்று ஆவணம். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்த தீதிதான் (மூத்த சகோதரி) வெற்றிவாகை சூடப்போகிறார் என்கிறது கணிப்பு.

திரிணாமூல் காங்கிரஸ் என்ற பெயரிலிருந்து காங்கிரஸ் என்ற பெயரையே அகற்றும் அளவுக்கு, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் வெகுதொலைவிற்கு வந்து விட்டார் மம்தா. ஆனால், அவர் அரசியல் பயின்ற இடம், காங்கிரஸ்தான். கல்லூரியில் பயின்ற காலத்திலேயே இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் இணைந்து அரசியலில் தனி அடையாளம் பெற்றவர். கடந்த 1997-ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி திரிணாமூல் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அகில இந்தியக் கட்சியாகவும் அதைப் பதிவு செய்தார். அடுத்தடுத்த வெற்றிகளால் அகில இந்தியத் தலைவராகவும் உருவெடுத்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா மம்தா பானர்ஜி...!

1999-ம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோதுதான், அவருக்கு தேசிய அளவிலான கவனம் கிடைத்தது. அதற்கும் முன்பே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் அவர் அங்கம் வகித்தார். 2011–ம் ஆண்டுக்குப் பின்பே, மாநிலஅரசியலில் தீவிரம் காட்டத்தொடங்கினார். மம்தா, சிங்கூர் மற்றும் நந்திகிராம் போராட்டங்களின் மூலமாக, வங்கத்து மக்களின் இதயங்களில் இடத்தையும், அடுத்து நடந்த 2011 பொதுத்தேர்தலில் ஆட்சியையும் பிடித்தார். 

இடதுசாரிகளிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத மாநிலமாக இருந்த மேற்கு வங்காளம், அவரது ஆளுமைக்குள் வந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுதான், முதல் முறையாக முதல்வர் பதவியேற்றார். ஆனால், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மேற்குவங்க முதல்வரான பின், அவரது அரசியல் பார்வையில் மாற்றம் வந்தது. முதல்வர் என்ற நிலையிலிருந்து பிரதமர் என்ற இலக்கை நோக்கித் திரும்பியது அவரது பயணம். காங்கிரஸ், பி.ஜே.பி இல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். 

கொல்கத்தாவில் சமீபத்தில் அவர் நடத்திய பிரமாண்ட பேரணி, தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. பல்வேறு மாநிலங்களில் பலம்வாய்ந்த கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்தார். தேர்தலுக்கு முன்பாக, அவர் நினைத்தபடி, பலமான மூன்றாவது அணியை அமைக்கமுடியாவிட்டாலும், தேர்தலில் தனித்தனியாக வெற்றியைப் பெற்றபின், மோடியை முறியடிக்க ஒன்று சேர்வோம் என்பதே அவரது அழைப்பு. 

மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி, முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11 தொடங்கி, ஏழாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் நாளான மே மாதம் 19-ம் தேதி வரை அனைத்துக் கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இத்தகைய நடவடிக்கை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

மேற்கு வங்கத்தில் மீண்டும் வெற்றிவாகை சூடுவாரா மம்தா பானர்ஜி...!

உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களைத் தொடர்ந்து, மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக திரிணாமூல் காங்கிரஸ் திகழும் என்று மம்தா பானர்ஜி உறுதியாக நம்புகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், 30-க்கும் மேற்பட்ட இடங்களை திரிணாமூல் கைப்பற்றும் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரை, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. பி.ஜே.பி- இந்த முறையாவது பாதம் பதிக்க முடியுமா என்பதே சந்தேகமாகவுள்ளது. சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி எனச் சில வழக்குகளை வைத்து, திரிணாமூல் தீதியின் கனவுக்குத் தீ வைக்க பி.ஜே.பி எடுக்கும் முயற்சி பலிக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.

பி.ஜே.பி–யைக் கடுமையாக எதிர்ப்பது, மோடிக்கு எதிராக முஷ்டியை முறுக்குவது போன்ற காரணங்களால், பி.ஜே.பி–க்கு எதிரான பல்வேறு கட்சிகளின் தலைவர்களின் ஆதரவும், தீதிக்குக் கிடைத்து வருகிறது. 
மேற்கு வங்கத்தில் பி.ஜே.பி-யை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி திரிணாமூல் என்பதால், அந்தக் கட்சிக்கு அகிலேஷ் ஆதரவு தருவதாக சமாஜ்வாடி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரன்மோய் நந்தா கூறியுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ், 34 தொகுதிகளைக் கைப்பற்றி, காங்கிரஸ், அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற பெருமையைப் பெற்றது. எனினும் பி.ஜே.பி-அரசுடன் அவருக்கு இணக்கம் ஏற்படவே இல்லை. உரசலின் உச்சமாக, நிதிநிறுவன மோசடி வழக்கில் விசாரணை நடத்தச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகளை, மேற்குவங்க மாநிலக் காவல்துறையினர் சிறைப்பிடித்த சம்பவம் நிகழ்ந்தது. சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இரவு முழுவதும் மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தைக் கண்டு தேசமே திகைத்துப்போனது. தேசிய அரசியலில் தன் பிம்பத்தின் உயரத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறார் மம்தா.

இந்தத் தேர்தலில் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மை பெறமுடியாது என்று அவர் நிச்சயமாக நம்புகிறார். பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் தவிர்த்து, வேறு கட்சிகளின் உதவியுடன் மூன்றாவது அணி கூட்டணி ஆட்சியை அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தான் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் தீதியின் தீர்மானமும் திட்டமும். முடிவு, மக்களிடமும் காலத்திடமும் அல்லவா இருக்கிறது.