Published:Updated:

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்
`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுவது இந்தியப் பொதுத் தேர்தல். உலகில் அதிக அளவிலான வாக்காளர்கள், வாக்குப்பதிவு மையங்கள் என பெரும் பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

தேர்தல் ஆணையத்தின் பிரசாரங்களில் முதன்மையானது 100% வாக்களிப்பு மற்றும் பணம் வாங்காமல் வாக்களிப்பது ஆகியவற்றை உறுதி செய்வதுதான். அதன் வரிசையில் தமிழக தேர்தல் ஆணையமும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் தேர்தல் விழிப்புணர்வு முகாமை ஒருங்கிணைத்துள்ளனர். மக்கள் தொடர்பியல் பாடத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளின் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த முகாமில் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கும், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பொதுமக்கள் பரிசோதித்துப் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், சேப்பாக்கம் வளாக இயக்குநர் சுந்தரம் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லியோ சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

தொடக்க உரையாற்றிய ஒருங்கிணைப்பாளர் லியோ சாமுவேல்,``பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மழைநீர் சேகரிப்பு, பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு பற்றி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். தற்போது தேர்தல் சமயம் என்பதால் வாக்கு விழிப்புணர்வு பற்றி நிகழ்ச்சி மேற்கொள்ளலாம் என முடிவு செய்தோம். அதிக அளவில் கல்வியறிவு விகிதம் இருந்தாலும் கடந்த தேர்தலில் சென்னையில்தான் தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே, நகரப் பகுதிகளில் வாக்குப்பதிவுக்கான பிரசாரம் அதிக அளவில் தேவைப்படுகிறது’’ என்றார்.

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

பதிவாளர் சீனிவாசன் பேசுகையில்,``இந்தப் பிரசாரம் மிகவும் அவசியமானது. நான் வாக்குப்பதிவு செய்வது என்பது எனக்கானது என்று மட்டுமல்லாமல் நம் அனைவருக்குமான நிர்வாகத்தை, நிர்வகிப்பவர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். வாக்களிப்பது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு சரியாக வாக்களிப்பதும் அவசியம். நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் தான் அடுத்த ஐந்து ஆண்டுக்கு நம்மை நிர்வகிக்கப் போகிறார்கள். எனவே, சரியான ஓர் அரசை தேர்ந்தெடுப்பதும் ஒரு வாக்காளரின் கடமை ஆகும்” என்றார்.

`சி விஜில் செயலியில் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை!’ - தலைமைத் தேர்தல் ஆணையர்

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேசுகையில், ``இந்தியா என்பது பன்மைத்துவம் நிறைந்த நாடு. நம் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலேயே பல உலக நாடுகளும் சுதந்திரம் பெற்றன. கல்வியறிவு குறைவாக இருந்த நம் நாட்டில் ஜனநாயகம் தலைக்குமா என பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. ஜனநாயகம் என்பது அனைவரின் தேவைகளும் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், அனைவரது அபிலாஷைகளுக்கும் இடமளிக்கிறது. தேர்தல் ஆணையம் அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் என பலருடைய பங்களிப்பும் இருந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் என்பது எந்தச் சட்டத்திலும் இடம்பெற்றது அல்ல; அரசியல் கட்சிகளே அவர்களுக்காக வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகளை பிற்காலத்தில் தேர்தல் ஆணையம் அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிப்பதோடு, நேர்மையாக வாக்களிப்பதும் அவசியமாகும். சரியான வேட்பாளர்களை மக்கள் கண்டறிந்து வாக்களிப்பதற்கான அவசியத்தையும் உணர வேண்டும். கண்காணிப்பாளர்கள் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் சி-விஜில் (C-Vigil) என்கிற செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களும் இதன் மூலம் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட்டு புகார் அளிக்கலாம். புகாரின் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாணவர்களுடன் பல்வேறு பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாக்காளர்  அடையாள அட்டைகளைப் புதுப்பித்துக் கொண்டும், புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள சந்தேகங்கள், செயல்பாடுகளைப் பற்றிய விளக்கங்களும் பெற்றுக்கொண்டனர்.