Published:Updated:

`அடிச்சுக் கேட்டாலும் பணம் தந்ததை சொல்லக் கூடாதுனு சொல்லிட்டாங்க!'- ஓ.பி.எஸ் கூட்டத்துக்கு வந்த பெண்கள்

`அடிச்சுக் கேட்டாலும் பணம் தந்ததை சொல்லக் கூடாதுனு சொல்லிட்டாங்க!'- ஓ.பி.எஸ் கூட்டத்துக்கு வந்த பெண்கள்
`அடிச்சுக் கேட்டாலும் பணம் தந்ததை சொல்லக் கூடாதுனு சொல்லிட்டாங்க!'- ஓ.பி.எஸ் கூட்டத்துக்கு வந்த பெண்கள்

``நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சி காணாமல் போய்விடும் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் தி.மு.க தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாக மாறிவிட்டது'' என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடினார்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் காந்தி, நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான த.மா.கா வேட்பாளர் என்.ஆர். நடராஜன் ஆகியோருக்கு வாக்குகள் கேட்டு,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், சிவகங்கைப் பூங்கா  என இரண்டு இடங்களில் பேசினார் ஓ.பி.எஸ். இதற்காக, ஏராளமான பெண்கள் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, மாரியம்மன் கோயில் பகுதியில் மாலை 5 மணிக்கெல்லாம் கூட்டம் தொடங்கிவிடும் என அருகில் இருந்த கிராமங்களில் எல்லாம் வேன் மற்றும் லோடு ஆட்டோக்களில் ஆட்களை அழைத்துவந்திருந்தனர்.

ஆனால், ஓ.பி.எஸ் வருவதற்குத் தாமதமானதால், பெண்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையத் தொடங்கியது. ஆரத்தி எடுக்க திரண்டிருந்த பெண்களும் சோர்வடைந்தனர். ``இன்னும் சற்று நேரத்தில் ஓ.பி.எஸ் வந்துவிடுவார். கொஞ்சம் பொறுமையாக இருங்க'' என நிர்வாகி ஒருவர் கெஞ்சினார்.``ஆள் ஒன்றுக்கு ரூ.300 கொடுத்து கூட்டத்தைத் திரட்டியிருக்கோம். கூட்டம் எப்படி? இது போதுமா'' என நிர்வாகி ஒருவர் மற்றவர்களிடம் கெத்து காட்டினார். ஒரு பெண்ணிடம், `கூட்டத்துக்கு வர எவ்வளவு பணம் தந்தாங்க' என கேட்டோம். `அடிச்சுக் கேட்டாலும் சொல்லக் கூடாது, யார் கேட்டாலும் சொல்லக் கூடாது' என சொல்லியிருக்கிறார்கள். அதனால சொல்ல மாட்டேன் போப்பா'' என்றார். அருகில் இருந்தவர், 300 ரூபாய் கொடுத்தாங்க. இதில் என்ன மறைக்கவேண்டியிருக்கு' என்றார்.

பின்னர்,  இரவு 7.45 மணிக்கு வந்த ஓ.பி.எஸ், கூட்டணிக் கட்சிகளின் பெயரை சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார். ``சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் நடராஜன் ஆகிய இருவரையும் வெற்றிபெற வைத்தால், மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். மேலும், மக்கள் பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள். ஏராளமான நலத்திட்டங்களையும் கொண்டுவந்து சேர்ப்பார்கள். காவிரிப் பிரச்னையைத் தீர்த்தது ஜெயலலிதாதான். மத்திய அரசிதழில் வெளிவர வைத்தார். அதற்காக நீங்க அவருக்கு இங்கு பாராட்டு விழா நடத்தினீர்கள். அன்று, 33 ஆண்டு கால அரசியல் வாழ்வில் நான் இன்றைக்குத்தான் சந்தோஷமாக இருக்கிறேன் என ஜெயலலிதா மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ஆனால், தி.மு.க காவிரிக்காக எதையுமே செய்யவில்லை. நீங்கள் சேற்றில் கை வைத்தால்தான் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும். அ.தி.மு.க-வில் உள்ளது தர்மத்தின் கூட்டணி. தி.மு.க-வில் உள்ளது அதர்மத்தின் கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் பேசிவருகிறார். தி.மு.க தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாகிவிட்டது. அ.தி.மு.க, இதுவரை 28 ஆண்டு கால ஆட்சியை முடித்துவிட்டு 29-ம் ஆண்டு ஆட்சியைத் தொடங்குகிறது. ஜெயலலிதா நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினார். அதன் ஒரு பகுதிதான் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்தது.

2023-ம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசை வீடுகள் இல்லாத பகுதியாக மாறிவிடும். தமிழகத்தை ஈ.பி.எஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் தீ வைத்து எரித்துவிடுவார்கள் எனக் கூறுகிறார்  ஸ்டாலின். நாங்கள் என்ன கையில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டா சுற்றிவருகிறோம்? அவர்கள் தான் மாமன் மருமகன் சண்டையில் தினகரன் அலுவலகத்தைத் தீ வைத்து எரித்தார்கள். இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு'' என்று பேசினார்.