Published:Updated:

குக்கர் சின்னம் யாருக்கு? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம்

குக்கர் சின்னம் யாருக்கு? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம்
குக்கர் சின்னம் யாருக்கு? - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம்

டைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிட்டு, அ.ம.மு.க.வுக்குப் பரிசுப்பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்தச் சின்னம் ஒதுக்கப்பட்ட நிமிடம் முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குக்கர் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். 

தனிக்கட்சியாகத் தொடங்கினால் இரட்டை இலைக்கு உரிமை கோர முடியாது என்பதால், அ.ம.மு.க இன்னும் பதிவுசெய்யப்படாத கட்சியாகவே இருக்கிறது. எனினும், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்து, தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது, அ.ம.மு.க. ஒரு வருடமாகியும் அக்கட்சி பதிவுசெய்யப்படாததையடுத்து, குக்கர் சின்னம் வழங்கக் கூடாது என அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றமும் கட்சி பதிவுசெய்யாததைக் கருத்தில்கொண்டு குக்கர் வழங்க மறுத்துவிட்டது. ``குக்கர் சின்னம் ஒதுக்காவிட்டால் பரவாயில்லை. வேறு ஏதாவது ஒரு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள். இப்போது அவகாசம் இல்லை. ஆனால், கட்சியைப் பதிவுசெய்யத் தயார்" என உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது, அக்கட்சி. இதையடுத்து, 59 தொகுதிகளுக்கும் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அ.ம.மு.க-வுக்கு இன்று பரிசுப்பெட்டி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

இந்த நிலையில், ``சுயேச்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவுசெய்வார்" எனத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில், ``சுயேச்சை வேட்பாளர் யாருக்கும் குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கூடாது" எனத் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.