Published:Updated:

`இரண்டு பேரை கத்தியோடு அனுப்பியிருக்கிறாங்க!'- தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி புகார்

`இரண்டு பேரை கத்தியோடு அனுப்பியிருக்கிறாங்க!'- தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி புகார்
`இரண்டு பேரை கத்தியோடு அனுப்பியிருக்கிறாங்க!'- தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீது செந்தில்பாலாஜி புகார்

"தம்பிதுரை ஓட்டு கேட்டு போகும் இடங்களிலெல்லாம், அவருக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள். அவர் தோற்பது உறுதி என்பதைப் புரிந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடும் கூட்டத்தைத் தடுக்கவும், கலகம் பண்ணவும் இரண்டு பேரை கத்தியோடு அனுப்பியிருக்கிறார். எங்களைத் தாக்க வந்த அவர்களை பொதுமக்கள் காவல் துறையில் பிடித்துக்கொடுத்தார்கள்" என்று வெடிக்கிறார், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.
 

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும், தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியும் போட்டியிடுகிறார்கள். தம்பிதுரை, நான்கு முறை கரூர் தொகுதியில் எம்.பி-யாக இருந்திருக்கிறார். அதுவும், கடந்த இரண்டு பீரியடுகளாகத் தொடர்ந்து எம்.பி-யாக இருந்துவருகிறார். இந்நிலையில், அவர் ஓட்டு கேட்டு போகும்போது பல கிராமங்களில், 'என்ன செய்தீர்கள்னு எங்ககிட்ட மறுபடியும் ஓட்டு கேட்டு வந்தீங்க?' என்று கேள்விகளால் துளைக்கின்றனர். இதனால் கோபமான தம்பிதுரை, ஏமூர் புதூர் என்ற கிராமத்தில், 'நீங்க ஓட்டு போட்டா போடுங்க. போடாட்டி போங்க' என்று பேசி, சர்ச்சைக்கு வித்திட்டார். இந்நிலையில்தான், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள லிங்கமநாயக்கன்பட்டியில் வேட்பாளர் ஜோதிமணியோடு செந்தில்பாலாஜி ஓட்டு சேகரித்துக்கொண்டிருந்தார். அப்போது, அ.தி.மு.க ஐ.டி விங் பிரிவைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர், 'தமிழகர்களைக் கொன்ற கைசின்னத்தில் நிக்கும் வேட்பாளருக்கு ஆரத்தியா?' என்று கோஷம் போட்டதாகச் சொல்லப்படுகிறது.

உடனே கோபமான தி.மு.க-வினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை மற்றொரு அ.தி.மு.க பிரமுகரான பெரியசாமி தனது செல்போனில் வீடோ எடுத்திருக்கிறார். இதனால் கோபமான தி.மு.க-வினர், இருவரையும் தாக்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில், "எங்களை கத்திகளோடு தாக்க வந்தார்கள்" என்று ஜோதிமணி, அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் டிஎஸ்பி, 'அவர்களிடம் கத்தி எதுவும் இல்லை' என்று சொல்லியிருக்கிறார். இதற்கிடையில், திருமூர்த்தியும் பெரியசாமியும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் தங்கள் பங்குக்கு செந்தில்பாலாஜி உள்ளிட்ட தி.மு.க-வினர்மீது புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி,  "அ.தி.மு.க சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கு. அப்போது பேசிய அமைச்சர், 'தம்பிதுரை எந்த ஊருக்கும் ஓட்டு கேட்டு போகமுடியலை. 'என்ன செஞ்சீங்க'னு மக்கள் கடுமையா எதிர்க்கிறாங்க. அதனால், அ.தி.மு.க தோற்பது உறுதியாயிட்டு'னு பேசி இருக்கிறார். ஆனால், ஜோதிமணிக்கு தொகுதி முழுக்க கடுமையான கூட்டம் கூடுகிறது. ஏக ரெஸ்பான்ஸ் கிடைக்குது. அதைக் குலைத்து, 'கரூர் தொகுதி பதற்றமான தொகுதினு காட்டுறதுக்காக, அமைச்சர் தரப்பு ஆள்களை செட்டப் செய்து, எங்க பிரசாரங்களின்போது பிரச்னை பண்ணச் சொல்லியிருக்கிறதா தகவல் வந்திருக்கு. அதை வீடியோவாக எடுத்து, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களில் பரப்பி, எனக்கும், ஜோதிமணிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதுதான் அவரது நோக்கம். அதற்கு காவல் துறையும் முழு ஒத்துழைப்பை செய்கிறது.

வேட்புமனு தாக்கல் செய்த அன்றும், போலீஸ் மூலம் பிரச்னை பண்ணவைத்து, என்மீது பொய்வழக்குப் போட வைத்தார் அமைச்சர். அடுத்து, எங்க பிரசார நிகழ்ச்சிகளில் கலவரத்தை ஏற்படுத்த, திட்டம்போட்டு இரண்டு பேரை கத்தியோடு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், டிஎஸ்பி, 'அவர்கள் கைகளில் கத்தி எதுவும் இல்லை'னு முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாங்க கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கிறதா சொல்லி இருக்காங்க. சொன்னபடி நடவடிக்கை எடுக்கலன்னா, கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க வைப்போம்" என்றார்.

ஆனால் அமைச்சர் தரப்பிலோ, "கேள்வி கேட்டதுக்கு பதில் சொல்லாம, இரண்டு பேரையும் தி.மு.க-வினர் அடித்துத் துவைத்திருக்கிறார்கள். அதை செந்தில்பாலாஜியும் ஜோதிமணியும் பார்த்துட்டு, சிரிச்சிருக்காங்க. தடுக்கல. அப்பாவிகளை அடித்து, இவர்கள் இப்பவே இந்த ஆட்டம் ஆடுறாங்கன்னா, பதவிக்கு வந்துட்டா என்ன ஆட்டம் ஆடுவாங்க. இதை நாங்க சும்மா விடப்போவதில்லை" என்றார்கள்.