Published:Updated:

`எனக்குக் கோபமெல்லாம் போய் ரொம்ப நாளாயிடுச்சு’ - திருச்சியில் கே.என்.நேருவிடம் கலகலத்த வைகோ

`எனக்குக் கோபமெல்லாம் போய் ரொம்ப நாளாயிடுச்சு’ - திருச்சியில் கே.என்.நேருவிடம் கலகலத்த வைகோ
`எனக்குக் கோபமெல்லாம் போய் ரொம்ப நாளாயிடுச்சு’ - திருச்சியில் கே.என்.நேருவிடம் கலகலத்த வைகோ

தி.மு.க கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு திருச்சி எடத்தெரு பாலகரை பகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் ஆகியோர் சகிதமாக மேடை ஏறினார் வைகோ. 

திருநாவுக்கரசர் பேசும்போது, ``நான் 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகர், மத்திய-மாநில அமைச்சர் பொறுப்புகளில் இருந்துள்ளேன். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் எப்போதும் உண்மையுள்ளவனாக இருந்து உழைத்திருக்கிறேன். இந்தமுறை திருச்சி வாக்காளப் பெருமக்களே உங்களை நம்பிப் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உண்மையாக உழைப்பேன்” என்றார்.

கூட்டத்தில் பேசிய வைகோ, ``இந்தத் தேர்தலில் ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் நடைபெறும் தேர்தல். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். இது நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் கொடூர சிந்தனையாளர்களால் மட்டுமே இதுபோன்ற சிந்தித்துச் செயல்பட முடியும். நாட்டில் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று கூறுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் ரத்தக்களறியாக ஆகி விடுமோ என்கிற அச்சம் எல்லோருக்கும் உண்டாகி உள்ளது. இதைத் தடுத்தாக வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.

உலகம் சுற்றும் நரேந்திர மோடி வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவுக்கு அனுமதித்துள்ளதால் அம்பானி அதானி போன்ற தொழிலதிபர்கள் லாபமடைந்து வருகின்றனர். ஆனால், கோடிக்கணக்கான வணிகர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.

பிரதமர் மோடி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறார். புயல் பாதிப்பால் 83 விவசாயிகள் மடிந்தார்கள். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் புயல் பாதிப்புக்குள்ளாகி அழுது புலம்பியபோது இவர் உலக நாடுகளைச் சுற்றிக்கொண்டிருந்தார். இறந்த விவசாயிகளுக்காக இரங்கல் செய்தி கூடத் தெரிவிக்காத மோடி, தமிழர்களிடம் வந்து எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் மோடி நெற்களஞ்சியமான தஞ்சையை பஞ்சம் பட்டினியாகவும் எத்தியோப்பியாவைப் போல ஆக்க நினைத்து  டெல்டா மாவட்டத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கியது. கர்நாடகாவில் மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்கு ரகசிய அனுமதி கொடுத்தது என இப்படிப் பல துரோகங்களை மோடி தமிழகத்துக்குச் செய்துள்ளார்.

ராகுல் காந்தி பிரதமராக வரும்போது இந்தியா முழுவதும் உள்ள 22 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு மாதம் தலா 6,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72,000 ரூபாய் வழங்குவோம் என்று ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பு சாத்தியம் என்பதை மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒப்புக்கொண்டுள்ளார்.

மத்தியில் இப்படி என்றால் தமிழகத்திலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஊழல் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சியில் லஞ்சம் ஊழல் மலிந்துவிட்டதால் தமிழத்துக்கு வர வேண்டிய மோட்டார் உற்பத்தி ஆலை வேறு மாநிலத்துக்குச் சென்றுள்ளது. ஜப்பான் நாட்டின் கார் தொழிற்சாலை ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மெட்ரோ ரயில் உருவாக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவில்லை. இப்படி தொழில்துறை புதைமணலில் புதைந்துள்ளது. ஒரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது மற்றொரு பக்கம் பொள்ளாச்சி பாலியல் தொல்லை சம்பவம் போன்ற சம்பவங்களால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் தமிழகம் அனைத்து தரப்பிலும் வஞ்சிக்கப்படுகிறது. ஆனால், இந்தி சம்ஸ்கிருதம் திணிக்கப்படுகிறது

ஜி.எஸ்.டி வரியால் வணிகர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்து போய்விட்டது. கல்வி மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாத மோடி,  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளார். இதுகுறித்துக் கேட்டால் நான் காவலன் என்கிறார். மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.  இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைந்து போய்விடும்” என்றார்.

முன்னதாக கூட்டம் இரவு 7 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்ணச்சநல்லூர் பகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட வைகோ, அவசரமாகப் பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருச்சி கூட்டத்துக்கு வந்து காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் வேட்பாளர் திருநாவுக்கரசரும், தி.மு.க முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என் நேரு ஆகியோர் வருகை தாமதமானது. இதனால் கடுப்பான வைகோ, தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்பதால் பேசத் தொடங்கினார்.  அப்போது நேருவும் திருநாவுக்கரசரும் வந்தனர்.

அப்போது, சட்டென மைக்கில் கே.என்.நேரு, ``தேர்தல் பிரசாரத்துக்காக சில இடங்களுக்குச் சென்றதால், நிகழ்ச்சிக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. அதனால் அண்ணன் வைகோ கோபத்தில் இருப்பார் என்று எனக்கு நல்லாத் தெரியும்” என்றார். அதற்கு வைகோ,  ``அதெல்லாம் இல்லைங்க. எனக்குக் கோபம் எல்லாம் போய் ரொம்ப நாளாயிடுச்சு” என்றார் கூலாக. அதைக் கேட்டதும் கூட்டத்தில் அப்ளாஸ் அள்ளியது.

அடுத்த கட்டுரைக்கு