Published:Updated:

தர்மபுரியில் மாற்றம் முன்னேற்றம் நடந்ததா? அன்புமணியின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் #RateTheCandidate

அன்புமணியின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்
அன்புமணியின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

தர்மபுரியில் மாற்றம் முன்னேற்றம் நடந்ததா? அன்புமணியின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் #RateTheCandidate

தர்மபுரி

பிறந்தது: திண்டிவனம் பூர்வீகம்: திண்டிவனம் அருகிலுள்ள கீழ்விசிறி படிப்பு: எஸ்.எஸ்.எல்.சி - மான்ஃபோர்டு பள்ளி, ஏற்காடு - மார்ச் 1984 மேல்நிலைப் பள்ளி: புனித அண்ணாள் மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் - ஏப்ரல் 1986 எம்.பி.பி.எஸ்: சென்னை மருத்துவக் கல்லூரி - பிப்ரவரி 1992

தொழில்: மருத்துவர்

தந்தை மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர். தாய் சரஸ்வதி அம்மாள். இவர் ராமதாஸின் உறவினர் மகள். `தூறல் நின்னு போச்சு’ படத்தில் வருவதுபோலப் பெண் பார்த்து நிச்சயம் செய்த பிறகு, வருங்கால மனைவியைத் துரத்திக் காதலித்தவர் ராமதாஸ்.

அன்புமணியின் மனைவி சௌமியா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கிருஷ்ணசாமியின் மகள். அன்புமணிக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 22. மனைவி என்பதைவிட உற்ற தோழியாக இருந்திருக்கிறார். ஒரு திருமணத்தில் பேசும்போது, `திருமணத்தை வலுவுள்ளதாக்கி, நிலைநிறுத்துவது கணவன் மனைவி இடையே உள்ள அன்பும் பாசமும் மட்டுமல்ல. ஒருவருக்கு ஒருவர் தரும் மரியாதையும்தான்’ எனக் குறிப்பிட்டார். 

மூன்று மகள்கள். முதல் மகளை உறவினர் மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள். 

பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தீவிரமாகச் செயல்பட்டு ஏரிகளைத் தூர் வாருவது, சென்னை நகரின் பசுமையைக் காப்பது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காகப் போராடியது எனத் தொடங்கியது அன்புமணியின் அரசியல் வாழ்க்கை

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்பட செயல்பட்டார். 

2004-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். 

அதன் பிறகு 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க, தே.மு.தி.க அணியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்டு 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகமெங்கும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க, தர்மபுரி, நாகர்கோவில் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. 

இந்த வெற்றி அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கொந்தளிக்க வைத்தது. இதன் எதிரொலியாக அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த கே.பி.அன்பழகனின் பதவி பறிபோனது. கடந்த மக்களவைத் தேர்தலில் பல வாக்குறுதிகளை அன்புமணி அளித்திருந்தாலும் மக்கள் மிகவும் எதிர்பார்த்தது தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதைத் திட்டத்தைதான். அதைப் பதவிக் காலத்தின் இறுதியில் நிறைவேற்றித் தந்தார் அன்புமணி. `தர்மபுரி மாவட்டத்தைத் தமிழகத்தின் முன்னேறிய ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக ஆக்குவேன்' என்று சொன்னார்‌. இதை நோக்கி அவர் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்கு எந்தவிதச் சான்றுகளும் இல்லை. `இதற்குக் காரணம், தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாததுதான்' என்றார் அன்புமணி.

அதேசமயம், தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை அறிவித்த கையோடு, `சேலம் - பெங்களூர் ரயில் பாதை இருவழிப்பாதையாக மாற்றப்படும்' என அறிவித்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். ஏற்கெனவே, இந்தியாவின் மிக அதிக போக்குவரத்து நிகழும் தேசிய நெடுஞ்சாலை எண்: 47 பகுதியில் தர்மபுரி அமைந்திருக்கிறது. இத்தனை வசதிகள் இருந்தும் நீர் ஆதாரம் இல்லையென்றால் இந்த மாவட்டம் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கும் அன்புமணி ஒரு நல்ல திட்டத்தை அளித்திருக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்துக்கு அவர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பு என்பது, இம்மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களைப் பட்டியலிட்டுத் தொடர்ந்து அதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததுதான். எண்ணெய்க்கால் புதூர் திட்டம், பாளையம் புதூர் கோம்பைத் திட்டம் என்ற பல்வேறு திட்டங்களைப் பற்றிப் பேசி இந்த மாவட்ட மக்களுக்குத் தெரியாதவற்றைப் பிரபலமாக்கினார். கோயம்புத்தூர் கோம்பை திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுவிட்டது. காவிரி உபரி நீர் திட்டத்தை தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

அன்புமணி தொகுதியில் இல்லை என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் மிகச் சிறப்பாக இயங்கி வந்திருக்கிறது. பொதுமக்களுக்குத் தினமும் தேவைப்படுகிற ரயில் முன்பதிவுக் கடிதங்கள், மருத்துவ உதவிக்கான கடிதங்கள் ஆகியவை எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். வேறு ஏதேனும் பரிந்துரைக் கடிதங்கள் தேவைப்பட்டால், அதையும் முடிந்தவரை 24 மணி நேரத்துக்குள் கிடைக்கும்படிச் செய்து வந்தார். சில நேரங்களில் பணம் கொடுப்பதைவிட எம்.பி அலுவலகத் தொலைபேசியில் பேசி பல மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறார் அன்புமணி. இந்த விஷயத்தில் அன்புமணியின் அணுகுமுறையைத் தொகுதி மக்கள் பாராட்டுகிறார்கள். 

5 சுவாரஸ்யமான தகவல்கள்: 

அன்புமணி ஒரு விளையாட்டு வீரர். தர்மபுரி வந்தால் அங்குள்ள அரசு ஆண்கள் பள்ளி விளையாட்டு மைதானத்துக்குச் சென்று இறகு பந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பள்ளி நாள்களில் ஓட்டப்பந்தயத்தில் அவர் செய்த சாதனையைச் சேலம் மாவட்டத்தில் யாரும் இன்னும் முறியடிக்கவில்லை

பயணத்தை மிகவும் விரும்புபவர். குறிப்பாகக் கடல் பயணமும் மீன் பிடிப்பதும் அவருடைய ஃபேவரைட் 

அதேபோல், அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுவார். அவருக்குப் பிடித்தமான உணவு மீன். 

பள்ளிக்கூட நண்பர்களுடன் இன்றும் நெருக்கமான நட்பில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஆண்டுக்கு ஒருமுறை தன் கல்லூரி நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இவர்கள் அனைவரும் குடும்பம் சகிதமாக வெளிநாடு சுற்றுலாச் செல்வது வழக்கம். அப்படிச் செல்ல முடியாத நேரத்தில் கோடைக்காலத்தில்,ஏற்காடு,கொடைக்கானல் எனத் திட்டமிட்டுச் செல்வார்கள்.

டாப் 3 சர்ச்சை

1. மாற்றத்தின் அடையாளமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டாலும் இந்தூர் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கின் விசாரணையை இன்றளவும் எதிர்கொண்டு வருகிறார். அரசின் ஊழல்களுக்கு எதிராக அவர் பேசும்போதெல்லாம் இந்தூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருவது வாடிக்கையாகிவிட்டது. 

2. அ.தி.மு.க-வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பத்திரிகையாளர்களை விமர்சித்தது; அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேசிக்கொண்டே தி.மு.க நிர்வாகிகளுடன் மறைமுக சந்திப்பை நடத்தியது ஆகியவை விமர்சனத்துக்குள்ளானது.  

3. தமிழ்நாட்டுக்கான நிழல் பட்ஜெட் போடுவது, அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்வது என அரசியல் களத்தில் தனித்த அடையாளமாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும், சாதிக் கட்சி என்ற அடையாளத்திலிருந்து வெளியே வருவது அன்புமணிக்கு அவ்வளவு எளிதானதாக இல்லை. முதல்வர் என்ற அடிப்படையில் ஒரு பிம்பமாக உருவாக்கப்பட்டவர், கூட்டணிக்குச் சென்ற பிறகு அவருடைய பிம்பம் இனி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. 

இந்தத் தேர்தலில் கூட்டணி பலத்தின் மூலம் அவர் வெற்றி பெறுவார் எனப் பரவலாகப் பேச்சு இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் சிறுபான்மையின சமூகத்தின் அதிருப்திகளும் மாம்பழத்தைப் பழுக்க வைக்குமா என்பதே தர்மபுரி அரசியல் கட்சிகள் மத்தியில் நடக்கும் பட்டிமன்றமாக இருக்கிறது. 

#RateTheCandidate

 பிற நட்சத்திர வேட்பாளர்கள் குறித்த களநிலவரம், மக்களின் ரேட்டிங் அறிந்துகொள்ள!

பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரைக்கு