Published:Updated:

``தூத்துக்குடி கோட்டைக்குப் போகாதே!" - கனிமொழி vs தமிழிசை களநிலவரம்

``தூத்துக்குடி கோட்டைக்குப் போகாதே!" - கனிமொழி vs தமிழிசை களநிலவரம்
``தூத்துக்குடி கோட்டைக்குப் போகாதே!" - கனிமொழி vs தமிழிசை களநிலவரம்

``தூத்துக்குடி கோட்டைக்குப் போகாதே!" - கனிமொழி vs தமிழிசை களநிலவரம்

தொகுதி (தூத்துக்குடி) 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குட்பட்டு விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் (தனி), கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. 

தனித்தன்மை

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ள தொகுதி இது. முக்கியத்துவம் வாய்ந்த பனிமய மாதா ஆலயம், ஜாமியா பள்ளி வாசல் ஆகியவையும் இந்தத் தொகுதிக்குள் இருக்கின்றன. நவ திருப்பதியின் அனைத்துக் கோயில்களும் இந்தத் தொகுதிக்குள் இருப்பதுடன், நவ கைலாயங்களில் 5 கோயில்கள், தூத்துக்குடி தொகுதிக்குள் இருக்கின்றன. மைசூர் தசாரா விழாவுக்கு அடுத்ததாக இந்தத் தொகுதியில் உள்ள குலசேகரப்பட்டனம் முத்தாரம்மன் கோயில் திருவிழா மிகப் பிரசித்தம். இந்த விழாவுக்கென்றே 10 லட்சம் மக்கள் கூடுவது வழக்கம். 

சுதந்திரப் போராட்டத்துக்கு குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இந்தத் தொகுதிக்குள் வருகிறது. மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோர் பிறந்ததும் இதே மாவட்டத்தில்தான். பாரம்பர்யமான முத்துக் குளிக்கும் தொழில் இப்போதும் நடைபெற்று வருகிறது. விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் மீன் பிடித்தல், தீப்பெட்டி தயாரிப்பு, பனை ஏறுதல், உப்பளம் ஆகியவை தூத்துக்குடியின் அடையாளங்கள். 

தொகுதியைத் தெரிஞ்சிக்கலாம்! 

நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடம் இந்தத் தொகுதியில் இருக்கிறது. அத்துடன், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் கோட்டையில் ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அரசியல்வாதிகள் கலந்து கொண்டால், பதவி பறிபோகும் என்கிற பகீர் சென்டிமென்டால் இப்போது வரையில் அரசியல்வாதிகள் முகமே இந்தப் பகுதியில் தென்படுவதில்லை. 

தொகுதியின் அரசியல் வரலாறு!

2008 மறுசீரமைப்புக்குப் பின்னரே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நடந்த இரு தேர்தல்களில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தலா ஒருமுறை வென்றிருக்கின்றன. நாடார் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாக முன்னிறுத்தப்படுகின்றனர். 

தொகுதியின் தற்போதைய தலையாய பிரச்னை?

1. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு.

2. தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு கொடுக்கப்படாதது.

3. மதுரை-தூத்துக்குடி- கன்னியாகுமரி இடையேயான ரயில் பாதை அமைப்பதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருப்பது.

தொகுதியின் நீண்டகாலப் பிரச்னை என்ன..?

தூத்துக்குடி மாவட்டத்தின் தலையாய பிரச்னை தண்ணீர் தேவை. குடிநீர்த் தேவைக்கு மட்டுமல்லாமல், விவசாயத்துக்கும் தாமிரபரணி ஆற்றை மட்டுமே தூத்துக்குடி மாவட்ட மக்கள் நம்பியிருக்கிறார்கள். ஆனால், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு பெருமளவு தண்ணீர் உறிஞ்சப்படுவதால் கடைமடைப் பகுதிகள் வரையில் விவசாயத்துக்கு தண்ணீர் செல்வதில்லை. அத்துடன், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதி மக்களின் குடிநீர் தேவையையும் தீர்க்கமுடியாத நிலை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு உடைப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், கேரள அரசிடம் பேசி அதைச் சரி செய்ய முயன்றால் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும். இதைச் செயல்படுத்த அரசியல்வாதிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பது தூத்துக்குடி வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தூத்துக்குடி டு ரோமாபுரி! 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொற்கைத் துறைமுகம் தூத்துக்குடியில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட கொற்கைத் துறைமுகத்திலிருந்து பாரசீகம், ரோமாபுரி, பர்மா உட்பட பல்வேறு நாடுகளுக்கு உப்பு, முத்து, மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதற்கான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. 

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி, பிற்காலப் பாண்டிய மன்னர்கள் போர் புரிந்த கயத்தாறு பகுதியும் அமைந்திருப்பது தொகுதியின் சிறப்பு. 

தற்போதைய நிலவரப்படி கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தற்போதைய நிலவரப்படி தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் கை ஓங்கியிருக்கிறது. பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பா.ஜ.க கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை அ.ம.மு.க வேட்பாளர் புவனேஸ்வரன் கணிசமாகப் பிரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் தமிழர் வேட்பாளர் கிறிஸ்டண்டைன் ராஜசேகருக்கும் தொகுதிக்குள் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தி.மு.க வேட்பாளரான கனிமொழி, `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 அப்பாவிகளின் உயிர் பறிபோயிருக்கிறது. அவர்களின் உயிர்த் தியாகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்' என்ற பிரசாரத்துக்கு வாக்காளர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ். இதுதவிர, ` சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்' என்ற வாக்குறுதிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது. 

பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், தனது பிரசாரத்தின் முக்கிய அம்சமாக `வளர்ச்சி' முழக்கத்தை முன்வைக்கிறார். `தூத்துக்குடியில் நடந்த கிளர்ச்சியைப் பற்றிப் பேசி வாக்கு வாங்க முயல்கிறார்கள். நாங்கள் தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்துவோம்' என்கிறார். பனைத் தொழிலாளர்களுக்கு நல உதவிகள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்தல் போன்ற வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்குகளைச் சேகரித்து வருகிறார் டாக்டர்.தமிழிசை. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை? 

1. கட்சி விசுவாசம் 
2. பணப்பட்டுவாடா
3. தலைவர்களின் பிரசாரம்
4. வாக்குறுதிகள்
5. வேட்பாளரின் செல்வாக்கு

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, தமிழிசை என இரு பெண் வி.ஐ.பி-க்கள் களம் இறங்கியுள்ளனர். தொகுதிக்குள் இன்னமும் ஸ்டெர்லைட் விவகாரத்தின் தகிப்பு குறையவில்லை. `குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் தொழிற்சாலைகள் உருவாகி வேலைவாய்ப்பு கிடைக்கும்' என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். `மணப்பாடு கடலோரப் பகுதியானது, அலைச்சறுக்குப் பயிற்சிக்கு உகந்த இடமாக இருப்பதால் அது குறித்த பயிற்சி மையம் அமைக்க வேண்டும்' என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு.

 
அடுத்த கட்டுரைக்கு