Published:Updated:

தமிழிசைக்குத் தடைபோட்ட, மொய் வைக்காத `வாழும் காமராஜர்!’ பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்!

பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்
பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

இன்றும் பொன்னாரின் கண்ணசைவில்தான் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க இயங்குகிறது. இவர் அனுமதித்தால்தான் தமிழிசையே தொகுதிக்குள் நுழைய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. தனக்கென தனியாக ஆதரவாளர்களை வளர்த்தெடுத்திருக்கிறார் பொன்னார்.

கன்னியாகுமரி

நாகர்கோவிலை அடுத்த அளத்தங்கரை கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பம். சட்டம் படிக்கும்போதே இந்துத்துவ இயக்கங்களில் பங்கேற்றுத் தீவிரமாகச் செயல்பட்டார். `தலைவனாக இரு அல்லது தலைவனுடன் இரு' என்பதைக் கொள்கையாக வரித்துக்கொண்டவர். இதன் காரணமாக, இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலனின் உதவியாளராகச் சில ஆண்டுகள் இருந்தார். அதே வேகத்தில் கன்னியாகுமரிக்கு வந்தவர் பா.ஜ.க-வில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். அதன் காரணமாக, மாவட்டத் தலைவர் பதவி தேடி வந்தது. ராம கோபாலன் வழியிலே திருமணம் செய்துகொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக மாறினார். கன்னியாகுமரியில் பொன்னாருக்கு முன்னோடியாக இருந்த மூத்த பா.ஜ.க தலைவர் எம்.ஆர்.காந்தியை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்துக்கு வந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க என்றால் அது பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும்தான் என்ற சூழலை உருவாக்கினார். காங்கிரஸ் வேட்பாளர் மட்டுமே வெற்றிபெற்று வந்த நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் 1999-ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். இதன் பலனாக வாஜ்பாய் கேபினட்டில் இடம்பிடித்தார்.

2004 தேர்தலிலும் 2009 தேர்தலிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவினாலும் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் 2 முறை நீடித்தார். ஒருமுறை மாநிலத் தலைவராக இருந்தவர் மறுமுறை தலைவர் ஆக முடியாது என்ற விதியைப் பொன்னாருக்காக மாற்றி எழுதியது பா.ஜ.க தலைமை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மட்டும் கையில் எடுத்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் போராட்டத்தின் காரணமாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்று மீண்டும் மத்திய இணை அமைச்சர் ஆனார். அத்வானியின் ஆதரவாளர் என்பதால் அமித் ஷா டீம் இவரை ஓரம்கட்டி வைத்திருப்பதாகவும் தகவல்.

இன்றும் பொன்னாரின் கண்ணசைவில்தான் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க இயங்குகிறது. இவர் அனுமதித்தால்தான் தமிழிசையே தொகுதிக்குள் நுழைய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. தனக்கென தனியாக ஆதரவாளர்களை வளர்த்தெடுத்திருக்கிறார் பொன்னார்.

கன்னியாகுமரித் தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிப்பது மதம் சார்ந்த வாக்குகள்தான். சிறுபான்மையினர் ஓட்டு சிந்தாமல் சிதறாமல் வசந்தகுமாருக்கு விழுந்தால்தான் அவர் வெற்றிபெற முடியும். இரண்டு பிரதான கட்சிகளிலும் இந்து வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதால் வளர்ச்சிப் பணியை முன்வைத்து சிறுபான்மையினர் வாக்குகளையும் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன். சங் பரிவார் அமைப்புகளும் ஒட்டுமொத்தமாகக் களத்தில் இறங்கி தேர்தல் வேலை செய்து வருகின்றன. பா.ஜ.க-வில் எந்த அதிருப்தியும் இல்லை என்பதும் பொன்னாருக்கு ப்ளஸ்.

5 சுவாரஸ்ய தகவல்கள்

தினமும் காலையில் மணிக்கணக்கில் பூஜை அறையில் அமர்ந்து இறை வழிபாடு செய்வார்.

பொன்.ராதாகிருஷ்ணன் என்ற பெயரை சுருக்கி 'பொன் ஜீ' என அழைத்துவந்தனர். அப்படியெல்லாம் அழைக்கக் கூடாது என்று டெல்லியில் இருந்தே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது பொன்னார், அண்ணாச்சி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

விளம்பரங்களில், `வாழும் காமராஜர்' என அடைமொழி போட்டுக்கொள்கிறார்கள். உள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் யாராவது அதிருப்தியுடன் இருந்தால் அவர்களுடைய வீட்டுக்கே சென்று மதிய உணவு சாப்பிடுவது ஹைலைட்.

திருமணம், காதுகுத்து போன்ற விஷேசங்களில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், மொய் எழுதும் பழக்கம் பெரும்பாலும் இருந்ததில்லை. அமைச்சராகப் பதவியேற்ற பின் 500 ரூபாய் வைக்கத் தொடங்கியிருக்கிறார்.

டாப் 3 விமர்சனங்கள்

1. ஏழை இந்து மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காகப் போராடியவர், அமைச்சர் ஆன பிறகு அதைப் பற்றியே கண்டுகொள்ளவில்லை.

2. குளச்சலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 60 ஆண்டுக்கால கோரிக்கை. மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, 2015-ல் கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைக்க மத்திய அரசின் அனுமதிக் கடிதத்துடன் வந்தார். இனயத்தில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு அந்தத் துறைமுகம் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் - மணக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் அமைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அடிக்கல் நாட்டப்படவில்லை என்பது பொன்னார் மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனம்.

3. ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தைப் புரட்டிப் போட்டபோது, வெளிநாட்டில் இருந்தார் பொன்னார். தமிழ்நாட்டுக்கான மத்திய அமைச்சரவையின் பிரதிநிதியாக இருந்தாலும் டெல்டாவைப் பாதித்த திட்டங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்

காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் ஹெச்.வசந்தகுமாருக்கு தி.மு.க கூட்டணி என்பது ப்ளஸ். கிறிஸ்துவ மற்றும் மீனவ சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கே கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

தொகுதியில் கிறிஸ்துவ வேட்பாளரைப் போட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸார் குரல் எழுப்பினர். அதற்கு மாறாக வசந்தகுமார் வேட்பாளராக்கப்பட்டார். அவர் மீதான அதிருப்தி காரணமாக விஜயதரணி உள்ளிட்டவர்கள் பிரசாரத்துக்கே வராமல் புறக்கணிக்கும் வேலையைச் செய்தது மைனஸ்.

தொகுதியில் நிறைந்திருக்கும் அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்குகளை பொன்னார் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார். `பொன்னாரின் வளர்ச்சிப் பணிகளால் தாமரை மலருமா?' என்பதெல்லாம் வாக்கு எண்ணிக்கை நாளில் தெரியவரும்.

அடுத்த கட்டுரைக்கு