Published:Updated:

அ.தி.மு.க-வின் A டீம் - B டீம் - C டீம்..! - `திருச்சி'யைக் கைப்பற்றுவது யார்?

அ.தி.மு.க-வின் A டீம் - B டீம் - C டீம்..! - `திருச்சி'யைக் கைப்பற்றுவது யார்?
அ.தி.மு.க-வின் A டீம் - B டீம் - C டீம்..! - `திருச்சி'யைக் கைப்பற்றுவது யார்?

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது.

தொகுதி:  

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை, தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுத்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சிக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இந்தியாவுடன் கடைசியாக இணைந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சமஸ்தானத்தை உள்ளடக்கிய கந்தர்வகோட்டை பகுதிகள் இந்தத் தொகுதியில் வருகின்றன. அகண்ட காவிரி பாய்ந்தோடும் திருச்சி காவிரிக் கரைதான் டெல்டா மாவட்டத்தின் தொடக்கம். முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பூமி. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் எனப் புகழ்பெற்ற ஸ்தலங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன. 

தமிழகத்தின் 2 முதல்வர்களை அடையாளம் காட்டியது  திருச்சி மாவட்டம். முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போதைய திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் இருந்துதான் முதன்முதலாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக அரியணை ஏறினார். 

வெளியூர் சென்டிமென்ட்! 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மதம் தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது வழக்கம். ஆனால், எந்தவித சாதி மத பாகுபாடும் இல்லாமல் மத நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து வாழும் மக்கள் அதிகம் உள்ள ஊர். அதன் பயனாகக் கடந்த காலங்களில் ரங்கராஜன் குமாரமங்கலம், தலித் எழில்மலை, எல்.கணேசன் என வெளியூர்க்காரர்களைத் தங்களுடைய பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். வெளியூர் சென்டிமென்ட் கை கொடுக்கும் என்பதால்தான் திருச்சி தொகுதியை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட பல பிரபலங்கள் குறிவைத்தனர். இதே சென்டிமென்டை நம்பி காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், தர்மபுரியைச் சேர்ந்த தே.மு.தி.க அவைத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். 

தீரர்கள் கோட்டை!

திருச்சியைத் `தீரர்கள் கோட்டை' என அழைக்கிறது திராவிட இயக்க வரலாறு. திருச்சியில் அரசியல் மாநாடு நடத்தினால் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல்வாதிகளின் நம்பிக்கை. திருச்சி மலைக்கோட்டை டு செங்கோட்டை என்றுதான் இங்கு மாநாடுகளைப் போட்டு நீட்டி முழங்குவார்கள் தலைவர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கிய மோடி இங்கிருந்துதான் தனது தமிழகப் பிரசாரத்தைத் தொடங்கினார். தி.மு.க தலைவர் கருணாநிதி அதிகப்படியான மாநாடுகளை நடத்தியதும் திருச்சியில்தான். திராவிட இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நங்கவரம் போராட்டம், கல்லக்குடி போராட்டம் உள்ளிட்டவை மிக முக்கியமானவை. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தைத் திருச்சி பாப்பா குறிச்சியில் இருந்துதான் தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் ஸ்ரீரங்கத்தில் இருந்துதான் தொடங்கினார். `எனது நெஞ்சுக்கு நெருக்கமான ஊர்' எனப் பலமுறை கூறியிருக்கிறார் ஜெயலலிதா. 

தமிழக அரசியலில் இரு பெரும் கட்சிகளான தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் திருச்சியில் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அதிகப்படியாகக் களமிறக்கியதில்லை. தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தத் தொகுதியில் ஒரே ஒருமுறை 1980-ல் மறைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே இந்தத் தொகுதியை ஒதுக்கியுள்ளது தி.மு.க. முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜ் தொடர்ந்து நான்கு முறையும், பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார். 2004-ம் ஆண்டு ம.தி.மு.க-வைச் சேர்ந்த எல்.கணேசன் எம்.பி ஆனார். அ.தி.மு.க சார்பில் 2001-ல் முன்னாள் மத்திய அமைச்சர் எழில்மலை தேர்வானார். கடந்த 2 முறையும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்றார் ப.குமார். இந்தமுறை அ.தி.மு.க அணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. 

தற்போதைய தலையாய பிரச்னை?

மின்வெட்டு பிரச்னையாலும், பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குறைந்தது போன்ற பிரச்னைகளாலும் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் 5,000 தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். திருவெறும்பூர் சர்வீஸ் சாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொண்டயம் பேட்டையில் மேம்பாலம் அமைக்காததால், இதுவரை 3,000-க்கும் அதிகமான விபத்துகள் ஏற்பட்டுவிட்டன. இதனால் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டிவிட்டது. தினமும் ஐந்துக்குக் குறையாமல் விபத்துகள் நடக்கின்றன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும் விற்க முடியாமலும் தவிக்கின்றனர். `இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இன்றுவரையில் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் எனத் தொகுதிமக்கள் காத்திருக்கிறார்கள். 

நீண்டகால பிரச்னை என்ன..?

`தமிழ்நாட்டின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டுவிழா முடிந்த நிலையில், ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டம் ரத்து செய்யப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறைச்சாலை அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. எல்லாம் அறிவிப்பாக உள்ளதால் தினமும் திருச்சிக்கு வந்து செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர். 

கட்சிகளின் செல்வாக்கு! 

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை முத்தரையர், பிள்ளைமார் மற்றும் தலித் சமுதாய வாக்காளர்கள் பரவலாகவும் கள்ளர் சமுதாய வாக்குகள் கணிசமாகவும் உள்ளனர். இதன் காரணமாக, பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் பலர் கள்ளர் சமுதாய வேட்பாளர்களாகவே களமிறங்குகின்றனர். காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், தே.மு.தி.க வேட்பாளர் என இருவரும் வெளியூர்க்காரர்கள். எனவே, `அ.ம.மு.க வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள்’ எனக் கோரிக்கை வைக்கிறார் சாருபாலா தொண்டைமான். இதில், சாருபாலாவும் திருநாவுக்கரசரும் அடுத்தடுத்து கட்சி மாறியது மைனஸாகப் பார்க்கப்படுகிறது. உட்கட்சி பூசலாலும் கட்சிக்காரர்களைக் கவனிக்க முடியாமலும் தே.மு.தி.க இளங்கோவன் தடுமாறிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் விசுவாசியான திருநாவுக்கரசர், அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் இளங்கோவன், ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கும் சாருபாலா என யாருக்கு ஓட்டுப் போடுவது என இரட்டை இலை விசுவாசிகளுக்குக் குழப்பமாக இருக்கிறது. மூன்று வேட்பாளர்களுமே அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியைத்தான் பிரிப்பார்கள். ஆக, இவர்களை ‘அ.தி.மு.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம்’ ஆகத்தான் பார்க்கிறார்கள் உள்ளூர் வாக்காளர்கள். தேர்தல் பணியில் திருநாவுக்கரசர் அவ்வளவாக வேகம் காட்டவில்லை. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வினோத், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆனந்தராஜா ஆகியோர் வாக்குகளை பிரிக்க ஓடியாடிக்கொண்டிருக்கிறார்கள். 

தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்! 

* தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி கலைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளைத் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் எனப் பல நாடாளுமன்றத் தொகுதிகளுடன் இணைத்ததால் கடந்த சில தேர்தல்களில் பொதுமக்களில் கணிசமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். இந்த முறை காந்தி பேரவை உள்ளிட்ட அமைப்புகள் புதுக்கோட்டை தொகுதியை மீட்பதற்காக நோட்டாவுக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

* கஜா புயலில் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணி செய்ய அ.தி.மு.க காட்டிய அலட்சியத்தால் மக்கள் கோபத்தில் உள்ளனர். 

* திருச்சி மாவட்ட அ.தி.மு.க - தி.மு.க - காங்கிரஸ் உட்கட்சி பூசல் தேர்தல் நேரத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

* திருச்சியில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களும் செலவுக்குக்கூடப் பணத்தைக் கொடுக்க மறுப்பதால் கடைசி நேரத்தில் தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். 

* சிட்டிங் எம்.பி-யை கைவசம் வைத்திருந்தாலும் தொகுதிக்கு முறையான திட்டங்களை அ.தி.மு.க கொண்டுவரவில்லை. ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டு முழுமையடையாமல் உள்ளன. 

காங்கிரஸ் vs காங்கிரஸ் (அ.ம.மு.க) போட்டி 

திருச்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்காரர், தனது 45 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் சந்திக்கும் 12-வது தேர்தல் இது. இதேபோல், அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் கடந்த இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கியவர், பூர்வீகமாகவே காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2009 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் குமாரிடம் 4,500 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார். இந்த முறை தினகரன் அணியில் பரிசு சின்னத்தில் போட்டியிடுகிறார். ` கை சின்னத்தை பரிசுப் பெட்டி சாய்க்குமா?' என்பதெல்லாம் வாக்கு எண்ணிக்கை நாளில் தெரியவரும்.