Published:Updated:

`கொடநாடு ஆவணங்களை எடுக்க ரூ.5 காேடி கமிஷன்!'- மேட்டுப்பாளையம் பிரசாரத்தில் ஸ்டாலின்

`கொடநாடு ஆவணங்களை எடுக்க ரூ.5 காேடி கமிஷன்!'-  மேட்டுப்பாளையம் பிரசாரத்தில் ஸ்டாலின்
`கொடநாடு ஆவணங்களை எடுக்க ரூ.5 காேடி கமிஷன்!'- மேட்டுப்பாளையம் பிரசாரத்தில் ஸ்டாலின்

``கொடநாடு கொலை, கொள்ளைக் குறித்து மக்களிடம் பேசி வருகிறேன். இனியும் தொடர்ந்து பேசுவேன். இதுவரை மறைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். இனி ஒரு படிமேலே சென்று பேசுவேன்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் நீலகிரி தனி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ``நாளும் நமதே நாற்பதும் நமதே. கடந்த 20-ம் தேதி கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து பிரசார பயணத்தைத் தொடங்கினேன். இந்த 10 நாள்களில் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து, நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். இங்கு உங்கள் ஆரவாரங்களைப் பார்க்கையில் எதுவும் பேசாமல் உங்கள் முகங்களை பார்த்துக் காெண்டிருந்தால் போதும் எனத் தோன்றுகிறது. பிரசார பாெதுக் கூட்டத்தை பார்க்கும் பாேது, பிரசார பாெதுக் கூட்டமா, வெற்றி விழா மாநாடா எனத் தோன்றுகிறது. ஆனால் எடப்பாடியோ வெறிச்சோடிய சாலைகளில் வாகனத்தில் கையசைத்தபடி செல்கிறார். யாரும் இல்லாத சாலையில் கையசைத்து சாெல்வதற்கு, டீ கடைக்குள் இருக்கும் தாெண்டர்களுக்கு கையசைப்பதாக விளக்கமளிக்கிறார். மாேடி ஒரு சர்வாதிகாரி, எடப்பாடி ஒரு உதவாக்கரை. இவர்களின் ஆட்சி தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

தி.மு.க கூட்டணி சார்பில் நீலகிரி தொகுதியில் ஆ. ராசாவை வேட்பாளராக அறிவிக்கவில்லை. உங்களிடம் ஒப்படைத்துள்ளோம். ஆ.ராசா தொகுதிக்கு மட்டும் நன்கு அறிமுகமானவர் அல்ல, தமிழகத்துக்கே, ஏன் இந்தியாவுக்கே நன்கு அறிமுகமானவர். மத்தியில் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசி சேவையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர் ராசா. ஏழை எளிய மக்கள் அனைவரின்  கைகளிலும் கைப்பேசியைக் கொண்டு சேர்த்தவர். அதனால் சிலரால் வீண்பழி சுமத்தப்பட்டார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, ஒரு வழக்கறிஞராகத் தானே முன்னின்று ஒருமுறை கூட வாய்தா வாங்காமல், வழக்கை நடத்தி வெற்றி பெற்றார். கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தம்பிகளுள் ஒருவராக இருந்தவர் ராசா.

அதே உறுதியுடன் அவர் மீது சுமத்தப்பட்ட வீண் பழியை சுக்குநூறாக உடைத்தவர். ராசாவை அறிமுகப்படுத்துவது, காெல்லன் தெருவில் ஊசி விற்கும் கதையைப் பாேன்றது. தி.மு.க-வின் நம்பிக்கை, ராசா. பெரியார் மற்றும் அண்ணா வழியில் நின்றவர். கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த பிள்ளைகளுள் ஒருவரைப் போன்ற ராசாவை இன்னாெருப் பிள்ளையாக, எனது சகாேதரனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். நான் துணை முதல்வராகவும், மேயராகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன். ஆனால், ராசா நீலகிரி தாெகுதிக்காக மத்தியில் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு நிதி உதவி பெற்று திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இது எனக்கே பாெறாமையாக உள்ளது. எனது சகோதரன் ராசாவை உங்களை நம்பி ஒப்படைக்கிறேன்'' என்றார்.

பின்னர் எடப்பாடியை சாடிப் பேசிய ஸ்டாலின், ``ஒரு முதல்வரின்  செயல்பாடுகள் மீது அதிருப்தி எழலாம். அவரின் பணிகள் குறித்தும் விவாதம் எழலாம். ஆனால், ஒரு முதல்வர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளது என்றால் அது எடப்பாடி பழனிசாமி மீதுதான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவிலிருந்து ரூ.2,000 கோடி பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்ற ஐந்து கோடி கமிஷன் தருவதாகக் கூறி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான் உள்ளிட்ட 11 பேரை அனுப்பியவர் இவர். இதை அந்தக் குற்றவாளிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.
 

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் கார் ஓட்டுநர் கனகராஜ், சயானின் மனைவி, மகள், கொடநாடு எஸ்டேட் ஊழியர் தினேஷ் ஆகியோரது மரணங்கள் திட்டமிட்டே நடந்துள்ளது. தேர்தல் பரப்புரையில் கொடநாடு கொலை, கொள்ளைக் குறித்து பேசிவருகிறேன். ஆனால், நான் கொடநாடு குறித்து பேசக்கூடாது என ஈ.பி.எஸ் தரப்பினர் நீதிமன்றம் சென்றனர். ஆனால், நீதிமன்றமோ ஸ்டாலின் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறியது. கொடநாடு கொலை, கொள்ளைக் குறித்து மக்களிடம் பேசி வருகிறேன். இனியும் தொடர்ந்து பேசுவேன். இதுவரை மறைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். இனி ஒரு படி மேலே சென்று பேசுவேன். கொடநாடு கொலையில் உண்மைக் குற்றவாளிகளை சிறையில் அடைப்பேன். காெடநாடு காவலாளி ஓம் பகதூர் காெலை குறித்துப் பேசுகையில், நான் காவலாளி என்று ஓம் பகதூரை குறிப்பிடுகிறேன். நாட்டில் ஒருவர் தன்னை காவலாளி சௌக்கிதார் என்று சாெல்லிக் காெள்ளும் மாேடியை குறிப்பிடவில்லை. சசிகலா காலில் விழ மேஜைக்கு அடியில்  புழு போல ஊர்ந்து சென்றதால் எடப்படிக்கு முதல்வர் பதவி கிடைத்தது. ஊர்ந்து சென்றதை பார்த்து அவரை மண் புழு எனக் குறிப்பிட்டேன். அதற்கு அவர் மண்புழு உழவர்களின் நண்பன் என்கிறார். மண்புழு மண்ணுக்கு அடியில்தான் ஊர்ந்து செல்லும், இவர் அப்படி ஊர்ந்து செல்லவில்லை, அவர் ஒரு விஷப் புழு’’  என்றார்.

இறுதியாக நீலகிரி தாெகுதி எம்.பி யாக ஆ. ராசா பெற்றுத் தந்த நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட ஸ்டாலின் தாெண்டர்களை பார்த்து ஆ.ராசாவை நீலகிரி தாெகுதியில் வெற்றி பெற செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில்,’’ தாெண்டர்கள் முன்னிலையில் முழங்கினார் .