Published:Updated:

`கேப்டனை சீண்டினாரு, இப்போ சிக்கிக்கிட்டாரு!'- துரைமுருகனை சாடும் விஜய பிரபாகரன்

`கேப்டனை சீண்டினாரு, இப்போ சிக்கிக்கிட்டாரு!'- துரைமுருகனை சாடும் விஜய பிரபாகரன்
`கேப்டனை சீண்டினாரு, இப்போ சிக்கிக்கிட்டாரு!'- துரைமுருகனை சாடும் விஜய பிரபாகரன்

``கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறோம். தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி இப்போது சிக்கிக்கொண்டார்" என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறினார்.

திருச்சியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சகிதமாக நேற்று இரவு திருச்சி பாலக்கரை, எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
 

பிரசாரத்தில் பேசிய வெல்லமண்டி நடராஜன், ``அருமையான கூட்டணியை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். நாற்பது தொகுதிகளிலும் நாம்தான் வெற்றிபெறுவோம். எல்லோரும், வீட்டு குடோன்ல மூட்டைகளைத்தான் வைத்திருப்போம். ஆனால் துரைமுருகன் வீட்டில் மூட்டை மூட்டையாகப் பணத்தை எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் 200 நோட்டுகள் கிடைப்பதே சிக்கலாக இருக்கிறது. ஆனால், இவருக்கு மட்டும் இவ்வளவு 200 ரூபாய் நோட்டு கிடைத்தது” எனக் கேள்வி எழுப்பினார்.

அடுத்துப் பேசிய விஜய பிரபாகரன், ``கேப்டன் எத்தனை முறை தேர்தல் பிரசாரத்தைச் செய்து இருக்கிறார். இந்த முறை அவர் வர முடியவில்லை என்பதால் என்னை அனுப்பி இருக்கிறார்கள். அவர் கொடுத்த தைரியத்துடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். காவிரி நீரை நம்பி விவசாயிகளும் விவசாயிகளை நம்பி இந்த மாவட்ட மக்களும் இருக்கிறார்கள். நதிகளை இணைக்க வேண்டும் என்று தே.மு.தி.க முதல் கோரிக்கை வைத்துள்ளது. நம் கோரிக்கையை எல்லாம் நிறைவேறும். மணப்பாறை முறுக்கு இங்கு மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று இல்லை. மணப்பாறை முறுக்கு நாடு முழுவதும் சந்தைப்படுத்தலாம்

தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி இது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்தால்தான், மக்களுக்கு ஏராளமான நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். இந்தக் கூட்டணியை எதிர்க்கிறவர்கள் முட்டாள். இந்தக் கூட்டணியை ஆதரிப்பவர்கள்தான் நல்லவர்கள். ஈகோ வறட்டு கவுரவம் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, சிந்தித்து முரசுக்கு வாக்களியுங்கள். யாருடன் கூட்டணி வைத்தாலும் தே.மு.தி.க-வுக்கு மக்கள் நலனே முக்கியம். எனவே தே.மு.தி.க வேட்பாளர் இளங்கோவனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இது ஒரு மெகா கூட்டணி. இந்தக் கூட்டணி வெற்றி பெறவில்லை என்றால் எந்தக் கூட்டணியும் ஜெயிக்காது. தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது நாமே வெற்றி பெறுவோம்.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், நான் ஆறு முறை எம்.எல்.ஏ, அடுத்து எம்.பி ஆகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறேன் என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறுகிறார். எத்தனைக் கட்சிகளுக்கு போய் நீங்கள் எம்.பி, எம்.எல்.ஏ ஆனீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரே தலைவர், ஒரே கொள்கையுடன் ஒரே கட்சியில் இருப்பவர்தான் மக்களுக்கான வேட்பாளராக இருக்க முடியும். அப்படியான நபர்தான் எங்கள் வேட்பாளர்.

கட்சியை கேப்டன் ராணுவக் கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளார். கட்சியின் வளர்ச்சியை முறையாகத் திட்டமிட்டு இலக்கை நோக்கி அவர் கொண்டு சேர்ப்பார். நமது கட்சியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு இதுவரை யாரும் போகவில்லை. இந்த முறை இளங்கோவன் வெற்றி பெற்றால் அவர் அமைச்சர் ஆகிவிடுவார். திருச்சிக்கு மாநிலத்திலும் மத்தியிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைத்தால் நானும் உங்களோடு சேர்ந்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம். சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறோம். தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி இப்போது சிக்கிக்கொண்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மடியில் கனம் இருந்தால்தானே பயம் வேண்டும் என துரைமுருகன் சொன்னாரே, அவர் மடியில் கனமில்லை. மொத்த உடலுமே கடலானது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.

பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க தேர்தலைச் சந்திக்கிறது. ஆனால், நாங்கள் தேர்தலை நியாயமாகச் சந்திக்கிறோம். கடந்த தி.மு.க ஆட்சியில், ஏழை, எளிய மக்களின் நிலங்களைப் பிடுங்கினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தால் 2,000 ரூபாய் மாநில அரசும், மத்திய அரசு 6,000 ரூபாய் வழங்குகிறார்கள். இப்படியான மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் தொடர வேண்டும் என நினைக்கிறோம். இந்த முறை தமிழகத்தில் மோடி அலை வீசும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்துழைப்பு உள்ள அரசுகள் அமைய வேண்டும். வாக்காளர்கள் இந்தத் தொகுதியை மட்டும் சிந்திக்காமல் இந்தியா முழுவதும் நினைத்து வாக்களிக்க வேண்டும். மொத்த இந்தியாவையும் கருத்தில் கொண்டு மோடி பிரதமராக வாக்களியுங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு